வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்கள், தயாரிப்பாளராக அடுத்தக்கட்டத்துக்கு தாவும்போது, சில நேரங்களில் கரணம் தப்பி விடுகிறது.
அப்போது மரணத்தைக் காட்டிலும் கொடுமையான அனுபவங்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.
கே. பாக்யராஜ், கே. ரங்கராஜ், சேரன், லிங்குசாமி, சசிகுமார் என நீளும் இந்த வரிசையில் கவுதம் வாசுதேவ் மேனனும் இப்போது சேர்ந்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அவரே அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்தார்.
இந்தப் படத்தை எப்போது ஆரம்பித்தார் என்று நினைக்கிறீர்கள்? நம்பமுடியாது. ஆனால் உண்மை. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டு சூர்யாவை கதாநாயகனாக வைத்துப் படத்தைத் தொடங்கினார்.
எடுத்த எடுப்பிலேயே படம் கைவிடப்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு விக்ரமை ஹீரோவாக வைத்து துருவ நட்சத்திரத்தை மீண்டும் ஆரம்பித்தார். படத்தை பாதியில் விட்டுவிட்டு, தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ எனும் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தினார்.
நிதி நெருக்கடி மற்றும் நாயகன்கள் கால்ஷீட் பிரச்சினையால் இரு படங்களுமே தூங்கின.
பெரும் போராட்டத்துக்கு பிறகு ‘துருவ நட்சத்திரம்’ படத்தை தூசுத் தட்டி ஒரு வழியாக முடித்து விட்டார், கவுதம் மேனன்.
விக்ரம் தவிர, ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்டோரும் நடித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாக இருந்தது.
பத்திரிகைகளில் விளம்பரம் எல்லாம் கொடுத்தாகி விட்டது. தியேட்டர்களில் விக்ரம் ரசிகர்கள் தோரணங்கள் கட்டி, கொண்டாட்டத்துக்கு தயாரானார்கள்.
இந்த நிலையில் ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா என்பவர், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திடீரென வழக்கு தொடர்ந்தார்.
‘சிம்புவை நாயகனாக வைத்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்குவதற்காக, கவுதம் வாசுதேவ் மேனன் எங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அதற்கு முன்பணமாக 2018 ஆம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. ஒப்பந்தப்படி அந்தப் பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை.
எனவே எங்களிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என மனுவில் அவர் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குள் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டது.

பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடக் கூடாது எனவும் ஆணை பிறப்பித்தது.
ஆனால் நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் கவுதம் மேனனால், பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை.
படமும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் படத்தை வெளியிடவில்லை.
திங்கள் கிழமை அல்லது புதன் கிழமைக்குள் பணத்தை திரும்ப செலுத்திவிட்டு படத்தை வெளியிட உள்ளோம்’ என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கவுதம் மேனன் பணத்தை செலுத்தி எப்படியும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை திரைக்கு கொண்டு வந்து விடுவார் என எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால், அது நடக்கவில்லை. படம் வெளியாகாததால் விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் கவுதம் மேனம், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், ‘மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் படத்தை இன்று வெளியிட எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம்.
ஆனால் முடியவில்லை. எங்கள் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு நெகிழ வைக்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
10 ஆண்டுகள் காத்திருந்து விட்டோம். ஓரிரு நாட்கள் பொருத்திருக்க முடியாதா என்ன?
– பாப்பாங்குளம் பாரதி.