Take a fresh look at your lifestyle.

பாபநாசம் சிவன்: இசையின் இருப்பிடம், இனிமையின் இலக்கணம்!

பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களாலும் தமிழ்த் திரைப்பட இசைக்குச் சிறப்பும் மதிப்பும் கௌரவமும் கிடைத்தன.

சினிமா என்றாலே முகத்தைச் சுளித்துக் கொள்ளும் மேல்நிலை மக்கள், பாபநாசம் சிவனின் திரைப்படப் பாடல்களை ஆர்வத்தோடு கேட்க ஆரம்பித்தார்கள்.

இசைத் தட்டுகளை வாங்கித் குவித்தார்கள். படத்தையும் பார்த்தார்கள்.

பாபநாசம் சிவனின் பாடல்களைப் பாடியதால் பாகவதர் பிரபலமடைந்தாரா அல்லது பாகவதர் பாடியதால் சிவனுக்குப் புகழ் கிடைத்ததா என்றவொரு சுவாரஸ்யமான பிரச்சினை பலர் மனதில் எழுந்தது.

அந்நாளில் அப்படிப்பட்ட ஒரு வழக்கம் இருந்திருந்தால் பட்டிமன்றமே நடத்தியிருப்பார்கள்!

பாபநாசம் சிவனின் புகழ் வேகமாக வளர்ந்தது. அவருடைய பாடல் ஒன்றாவது, படத்தில் இருக்க வேண்டும் என்ற நிலைமையும் வந்தது.

பாகவதர் மட்டுமல்லாமல் அன்றைய பிரபல திரைப்படக் கலைஞர்களான பி.யு. சின்னப்பா, ஸி. ஹொன்னப்ப பாகவதர் டி.ஆர்.

மகாலிங்கம், பி.எஸ். கோவிந்தன், சி.எஸ். ஜெயராமன் ‘நிரந்தர நாரத நடிகர்” நாகர்கோவில் கே. மஹாதேவன், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, எஸ்.டி. சுப்புலக்ஷ்மி என்.சி. வசந்தகோகிலம் போன்றவர்களெல்லாம் பாபநாசம் சிவனின் பாடல்களைப் பாடுவதில் பெருமை கொண்டார்கள்.

பாபநாசம் சிவன், திரைக்குப் பின்னால்  இசையமைப்பது மட்டுமல்லாமல் திரை மீது தோன்றி நடிக்கவும் செய்தார்.

இது அந்நாளில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 1936-ல் கே. சுப்ரமண்யம் இயக்கிய “பக்த குசேலா’ என்ற படத்தில் அவர், பாபநாசம் சிவனைக் குசேலனாக நடிக்க வைத்தார்.

சிவனின் ஒல்லியான தேகம், எளிமை சொட்டும் முகம் எல்லாமே குசேலன் வேஷத்துக்குத் தகுந்ததாகவே இருந்தது! குசேலன் வேஷமா, கூப்பிடு பாபநாசம் சிவனை என்ற நிலைமையை உருவானது.

ஆர்.எஸ். மணி இயக்கிய ஜூபிடரின் வெற்றிப் படமான ‘குபேர குசேலா’விலும் சிவன்தான் ‘குசேலர்’. சுப்ரமண்யம் இயக்கிய ‘பக்தசேதா’ (1940)… ‘தியாகபூமி’ (1939) படங்களிலும் சிவன் நடித்தார்.

காலங்கள் மாற. ஆண்டுகள் ஓட பாபநாசம் சிவன் திரைப்பட உலகத்திலிருந்து விலக ஆரம்பித்தார். கர்நாடக இசை உலகத்திற்கும் தமிழ் இசைக்கும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார்.

பல நூற்றுக் கணக்கான கீர்த்தனங்கள், பாடல்களைத் தேன் சுவைத் தமிழில் பல வகையான ராகங்களில் இயற்றி இசை உலகத்திற்கு அழிவில்லாப் பொக்கிஷங்களாக அளித்தார்.

இருபதாம் நூற்றாண்டில் இவரைப் போன்ற ஓர் இசையமைக்கும் மேதை தோன்றவில்லை என்று எல்லோரும் இவரைப் புகழ்ந்தார்கள். ‘தமிழ்த் தியாகையா’ என்றே அழைத்தார்கள்.

இவர் இயற்றிய கர்நாடக இசை முத்துகளை நாடெங்கும் வெளிநாடுகளிலும் பாடிப் பல இசைக் கலைஞர்கள் பெயரையும் புகழையும் அத்துடன் பணத்தையும் தேடிக் கொண்டார்கள்.

ஆனால் பாபநாசம் சிவனுக்கு மிஞ்சியது புகழ் மாலைகள் மட்டும்தான்.

பாபநாசம் சிவன் இன்று நம்மிடையே இல்லை. இவரது நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு தென்னாடெங்கும் கொண்டாடப்பட்டது.

“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்று பாடியது போல “தமிழிசைக்கு ஒரு பாபநாசம் சிவனடா” என்று பாடினாலும் அது மிகை என்று சொல்ல முடியாது.

இவர் வாழ்ந்து பெயரும் புகழும் பெற்று இசை மணம் பரப்பியது சென்னையில், இவருடைய நினைவைப் போற்றும் வகையில் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள பாலஸ் ரோடு என்பது இன்று “பாதாசம் சிவன் தெரு” என்று அழைக்கப்பட்டு வருகிறது.

சொல்லின் செல்வராக, இசையின் இருப்பிடமாக, இனிமையின் இலக்கணமாக வாழ்ந்த பாபநாசம் சிவனைப் போன்ற மேதைகளைக் காண்பது மிகவும் அரிது. நம்மிடையே மீண்டும் ஒரு பாபதாசம் சிவன் தோன்றுவது என்றோ!

– நன்றி: ராண்டார்கை எழுதிய ‘அன்றைய சென்னைப் பிரமுகர்கள்’ நூலிலிருந்து ஒரு பகுதி.

#பாபநாசம் சிவன் #Papanasam Sivan #பாகவதர் #Bhagavathar #பி_யு_சின்னப்பா #P_U_Chinnappa #ஸி_ஹொன்னப்ப_பாகவதர் #C_Honnappa_Bhagavathar #டி_ஆர்_மகாலிங்கம் #T_R_Mahalingam #பி.எஸ்.கோவிந்தன் #P_S_Govindan #சி_எஸ்_ஜெயராமன் #C_S_Jayaraman #கே_மஹாதேவன் #K_Mahadevan #எம்_எஸ்_சுப்புலக்ஷ்மி #M.S. #M_S_Subbulakshmi #எஸ்_டி_சுப்புலக்ஷ்மி  #S_T_ Subbulakshmi #என்_சி_வசந்தகோகிலம் #N.C. #N.C.Vasanthakokilam #கே_சுப்ரமண்யம் #K_Subramaniam