Take a fresh look at your lifestyle.

சிவாஜிராவ் எதையும் மறக்க மாட்டான்!

நெகிழ வைத்த ரஜினிகாந்த்

இன்று (டிசம்பர் 12) ரஜினிகாந்த்தின் 75-வது பிறந்தநாள். ரஜினிகாந்த்தை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் இமயம் கே.பாலசந்தர்தான் ‘கவிதாலயா’ கிருஷ்ணனையும் திரையுலகுக்கு அடையாளம் காட்டினார்.

தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தரின் மற்றொரு சிஷ்யனான ரஜினிகாந்த்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் கவிதாலயா கிருஷ்ணன்:

“பாரதிய வித்யா பவனில் ரஜினியின் ஷூட்டிங் நடந்த முதல் நாளிலேயே நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்த மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீவித்யா, கமல் என்று எலோரையுமே எனக்கு அப்போது தெரியும். ரஜினியைத்தான் எனக்கு தெரியாது.

படத்தில் நடித்த மற்றவர்களைப் பார்க்கச் சென்றபோது அங்கிருந்த ராமு என்பவர் எனக்கு ரஜினியை அறிமுகப்படுத்தினார்.

அவர் தாடி வைத்து ஒல்லியாக இருந்தார். அவர் கன்னடத்துக்காரர் என்பதால் நான் ஆங்கிலத்தில் பேசினேன்.

அதற்கு ரஜினி, “தமிழ்ல பேசலாம் சார். கே.பி. சார் தமிழில் பேசிக் கற்றுக்கொள்ள சொல்லியிருக்கிறார்” என்றார்.

அதன்பின் அவர் என் வீட்டுக்கு வந்திருக்கிறார். எங்கள் வீட்டில் இருந்த டேபிளில் படுத்துத் தூங்கியிருக்கிறார்.

‘அவர்கள்’ படத்தின் படப்பிடிப்பு ஆர்.ஆர். சபாவில் நடந்தபோது நான் அங்கு போயிருந்தேன். அப்போது ரஜினி பியட் கார் வாங்கியிருந்தார்.

“நான் உங்கள் காரில் வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் என் காரில் வாருங்கள்” என்று என்னை வீட்டில் கொண்டுவந்து விட்டார்.

காரின் டாஷ்போர்டை திறந்து ஒரு பெரிய பார்சலைக் கொடுத்தார். அது முழுவதும் சிகரெட் இருந்தது. எனக்கு சிகரெட் பிடிக்கும் என்பதால் வாங்கி வந்திருந்தார்.

அவருக்கு ரசம் பிடிக்கும் என்பதால் என் அம்மாவிடம் ஒரு டம்ளர் ரசத்தை வாங்கிக் குடித்தார்.

என் தங்கை அப்போது 8-ம் வகுப்பில் படித்து வந்தார். அப்போது அவளையும் பார்த்துப் பேசினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘அண்ணாமலை’ படத்தின் படப்பிடிப்பின்போது என் தங்கை ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்டார்.

என் தங்கை, தன் மகளுடன் சென்னைக்கு வந்திருந்தாள். அவள் மகன் ரஜினிகாந்த்தைப் பார்க்க விரும்பினார்.

அப்போது ‘அண்ணாமலை’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நான் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இதுபற்றி சொல்ல, அவர் தங்கையையும் அவர் மகனையும் அழைத்துவரச் சொன்னார்.

நான் கவிதாலயா நிறுவனத்தின் மேலாளரான பழனியிடம்,

“அவர்களை அழைத்துப் போய், அவர்கள் ரஜினியைச் சந்தித்து முடித்ததும் திருப்பி அழைத்து வா” என்றேன்.

என் தங்கையிடம், “நான் கிருஷ்ணனின் சகோதரி என்று ரஜினியிடம் சொல்லாதே. ஒருவேளை அவர் என்னை மறந்திருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரஜினி வேறு, அவர் இப்போது எங்கேயோ இருக்கிறார்” என்றேன்.

அவர்கள் ஸ்டூடியோவுக்குள் சென்று 45 நிமிடங்கள் கழித்து பழனி வெளியே வந்தார்.

ரஜினி என்னை அழைப்பதாகச் சொன்னார். நான் தயக்கத்துடன் உள்ளே போனேன். உள்ளே எல்லோரும் மவுனமாக இருந்தார்கள்.

ரஜினிகாந்த் என்னை அழைத்தார்.

“இவங்கள உங்களோட (கிருஷ்ணனின்) தங்கை என்று சொல்ல வேண்டாம்னு சொன்னீங்களா”

“ஆமாம்”

“ஏன் அப்படிச் சொன்னீர்கள்?”

“என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்காது என்று நினைத்தேன்”

“ரஜினிகாந்த் மறக்கலாம். ஆனால் சிவாஜிராவ் மறக்கமாட்டான்.

அப்ப நான் போட்டிருந்த சட்டையையும் மறக்கல… நீங்க எனக்கு வாங்கிக் கொடுத்த சிகரெட்டையும் மறக்கல” என்றார் ரஜினி.

என் சகோதரியின் மகன் ரஜினியிடம் என்னைப் பற்றி சொன்னதால்தான் அவருக்கு நான் வெளியில் இருப்பது தெரிந்துள்ளது என்று பிறகுதான் தெரிந்தது.

என் தங்கை முன்பு ரோசரி மெட்ரிக் பள்ளியில் படித்ததைக்கூட ஞாபகம் வைத்து ரஜினிகாந்த் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

பழசை மறக்காத அந்த குணம்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டுபோயிருக்கிறது” என்றார் ‘கவிதாலயா’ கிருஷ்ணன்.

– பி.எம். சுதிர்

#கவிதாலயாகிருஷ்ணன் #அபூர்வராகங்கள் #இயக்குநர்இமயம் #கேபாலசந்தர் #ரஜினிகாந்த் #அண்ணாமலை #சுரேஷ்கிருஷ்ணா #கவிதாலயா #kavithalayakrishnan #aboorvaragangal #directorimayam #kb #kbalachander #rajini #rajinikanth #superstar #annamalai #sureshkrishna #kavithalaya