தமிழ்த் திரையுலகில் எத்தனையோ நடிகைகள் வந்து சென்றிருக்கலாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பில் சுறுசுறுப்புடன் இயங்கி, ‘வயது என்பது வெறும் எண்களே’ என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஆளுமை சௌகார் ஜானகி.
இன்று அவருக்குப் பிறந்தநாள்!
பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு
1931-ம் ஆண்டு ராஜமுந்திரியில் பிறந்த சங்கரமஞ்சி ஜானகி, தனது 18-வது வயதில் (1949) எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘சாவுகாரு’ (Shavukaru) என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்தப் படம் அடைந்த மாபெரும் வெற்றியால், அவர் பெயர் நிரந்தரமாக ‘சௌகார்’ ஜானகி என்று மாறியது.
திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான பிறகே இவர் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது அக்காலகட்டத்தில் ஒரு புரட்சிகரமான விஷயம்.
நடிப்பின் இலக்கணம் (Versatility)
சௌகார் ஜானகியின் சிறப்பம்சமே அவரது பன்முகத்தன்மைதான். அவரால் ஒரே நேரத்தில் கண்ணீர் வரவைக்கும் சோகக் காட்சிகளிலும் நடிக்க முடியும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை வேடங்களையும் ஏற்க முடியும்.
-
சோகத்தின் ராணி: ‘பாலும் பழமும்’, ‘உயர்ந்த மனிதன்’ போன்ற படங்களில் மிக அமைதியான, குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து தாய்மார்களின் மனதை வென்றவர்.
-
மாடர்ன் மங்கை: ‘புதிய பறவை’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக ஸ்டைலிஷாகவும், வில்லத்தனம் கலந்தும் மிரட்டியிருப்பார். அந்தப் படத்தில் அவரது உடை அலங்காரமும், நடை உடை பாவனைகளும் இன்றும் பேசப்படுகின்றன.
-
நகைச்சுவை அதிரடி: “சோகப் படங்களுக்கு மட்டுமே ஜானகி செட் ஆவார்” என்று நினைத்தவர்களுக்கு ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினி பாத்திரத்திற்கு இணையாக (அம்மா வேடத்தில்) நடித்து அதிர்ச்சி கொடுத்தார். அப்படத்தில் அவர் போடும் கூச்சலும், நகைச்சுவையும் கிளாசிக் ரகம்.
மறக்க முடியாத மைல்கற்கள்
இவரது திரைப் பயணத்தில் சில குறிப்பிட்ட படங்களை யாராலும் மறக்க முடியாது:
-
இரு கோடுகள்: இதில் கலெக்டர் ஜானகியாக அவர் வெளிப்படுத்திய கம்பீரம், ஒரு பெண்ணின் ஆளுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
-
பாமா விஜயம்: ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பத் தலைவியாக, சினிமா மோகத்தில் சிக்கித் தவிக்கும் வேடத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
- புதுப்புது அர்த்தங்கள்: வயதான தம்பதியராக சௌகார் ஜானகியும், பூர்ணம் விஸ்வாதனும் நடித்திருப்பார்கள். வாழ்வை அன்புதான் வழிநடத்துகிறது என்பதை தங்களது நடிப்பில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்கள் இருவரும்.
- வானவராயன் வல்லவராயன்: இன்றைய தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்து, தனது எனர்ஜி லெவல் குறையவே இல்லை என்று நிரூபித்தார்.
திரைக்குப் பின்னால்…
நடிப்பைத் தாண்டி சௌகார் ஜானகிக்கு இரண்டு விஷயங்களில் ஆர்வம் அதிகம். ஒன்று தோட்டக்கலை (Gardening), மற்றொன்று சமையல்.
இன்றும் தனது வீட்டில் விதவிதமான உணவுகளைச் சமைத்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிமாறுவதில் அவருக்கு அலாதி பிரியம்.
கேமராக்களின் தொழில்நுட்பம் கறுப்பு வெள்ளையிலிருந்து கலராக மாறியிருக்கலாம், ஈஸ்ட்மென் கலரிலிருந்து டிஜிட்டலுக்கு மாறியிருக்கலாம். ஆனால், சௌகார் ஜானகியின் நடிப்பில் இருக்கும் அந்த ‘இயல்பு’ மட்டும் மாறவே இல்லை.
– மகேஸ்வரி கண்ணன்