Take a fresh look at your lifestyle.

10 விருதுகளை வென்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’!

55-வது கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சூரில் உள்ள ராமநிலயத்தில் நடைபெற்ற விழாவில், கேரள கலாச்சாரம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் சஜி செரியன் இந்த விருதுகளை அறிவித்தார்.

‘பிரம்மயுகம்’ படத்துக்காக மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 7 முறை கேரள அரசின் சிறந்த நடிகர் விருதை வென்ற ஒரே நடிகர் என்ற பெருமையை மம்முட்டி பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக மோகன்லால், ஊர்வசி ஆகிய இருவரும் 6 முறை வென்றுள்ளனர்.

விருது அறிவிக்கப்பட்டதும் கொச்சி எலம்குளத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை மம்முட்டி சந்தித்தார்.

“என்னுடன் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் – விருது, ஒரு பயணம், போட்டி அல்ல. விருது பெறாதவர்கள் கவலைப்பட வேண்டாம் – அடுத்து வரும் ஆண்டுகளில் கிடைக்கும்” என்று கூறினார்.

“இளம் கலைஞர்களுடன் சேர்ந்து நீங்கள் விருது பெற்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என செய்தியாளர்கள் கேட்டபோது,

“நானும் இளைஞன் தானே” என்று கிண்டல் அடித்தார்.

மலையாளத் திரை உலக வரலாற்றில் ஒரு பிரளயத்தையே உருவாக்கிய ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படத்துக்கு 10 விருதுகள் கிடைத்தன.

சிறந்த படத்துக்கான விருது, சிறந்த இயக்குநருக்கான விருது ஆகியவை இவற்றில் அடக்கம்.

சிதம்பரம் டைரக்ஷனில் கடந்த ஆண்டு வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணிக் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

வெறும் 20 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து மலையாள சினிமா உலகை மிரள வைத்தது.

“மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தின் மீது எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது – ஆனால் இவ்வளவு விருதுகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கவில்லை” என உணர்ச்சி வசப்படுகிறார் இயக்குநர் சிதம்பரம்.

– பாப்பாங்குளம் பாரதி.