Take a fresh look at your lifestyle.

மூன்று ஹீரோயின்கள் அறிமுகமான புரட்சிப் படம்!

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட பல படங்கள் வந்துள்ளன. அந்தப் படங்கள் பல காரசாரமான விவாதங்களையும் சந்தித்திருக்கின்றன. அதில் ஒன்று ‘அரங்கேற்றம்’.
 
கே.பாலசந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படத்தில், பிரமிளா, எஸ்.வி.சுப்பையா, சிவக்குமார், கமல்ஹாசன், எம்.என்.ராஜம், செந்தாமரை, ஜெயசித்ரா, ஜெயசுதா உட்பட பலர் நடித்துள்ளனர்.
 
கலாகேந்திரா தயாரித்த இந்தப் படத்துக்கு பி.எஸ்.லோகநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். வி.குமார் இசையில் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. அதிலும், ‘ஆண்டவனின் தோட்டத்திலேயே அழகு சிரிக்குது’ பாடல் சூப்பர் ஹிட்.
 
அந்தக் காலகட்டத்தில், கே.பாலசந்தர் படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. இந்தப் படத்துக்கும் அப்படித்தான். ஆனால், இந்தப் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. சர்ச்சைகளும் எழுந்தன. ஏனென்றால் படத்தின் கதை அப்படி.
 
பாலசந்தர் இயக்கத்தில், ஜெமினி, ஜெயந்தி, வாணிஸ்ரீ நடித்த ‘வெள்ளி விழா’ படம் வெற்றிப்பெற்றதை அடுத்து, சமூகத்துக்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், பாலசந்தர் உருவாக்கிய படம்தான் ‘அரங்கேற்றம்’.
 
யாரும் தொடாத அல்லது சொல்லாத கதைகளைச் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பிச் சொன்ன கதைதான் இது. இதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
 
வறுமையை மட்டுமே சந்திக்கும் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்து ஹீரோயின், வீட்டின் எதிர்ப்பையும் மீறி, தன் தம்பி, தங்கைகளுக்காக வேலைக்குச் செல்கிறார்.
 
அங்கு சீரழிக்கப்படும் அவர், அதைத் தொழிலாக செய்ய, இங்கு தம்பி, தங்கைகள் நன்றாக படிக்கின்றனர். ஒரு கட்டத்தில் விஷயம் தெரிய வரும்போது நாயகி என்ன செய்கிறார், குடும்பம் அவளை என்ன செய்கிறது, நாயகி என்னவாகிறார் என்பதுதான் கதை. இதில் சிவக்குமாருக்கு பிரமிளாவைக் காதலிக்கும் வேடம்.
 
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கமல்ஹாசன், வாலிபனாக நடித்த படம் இது. பிரமிளாவின் தம்பியாக நடித்திருப்பார். 1973-ல் வெளியான இந்தப் படத்தை அந்தக் காலக்கட்டத்தில், பல பத்திரிகைகள் பாராட்டின.
 
பிராமண சங்கங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. படத்தில் ஒவ்வொரு வசனமும் அந்தக் காலகட்டத்தில் தியேட்டர்களில் கைத்தட்டல்களை அள்ளின.
 
சீரியசான இந்தப் படத்தில் மெளலியிடம் காமெடி பகுதியை எழுத சொன்னாராம் பாலசந்தர். ஆனால், காமெடி சேர்த்தால் அது இந்தக் கதை சொல்ல வந்த விஷயத்தைச் சிதைத்துவிடும் என்று கூறி மறுத்திருக்கிறார் மெளலி.
 
இந்தப் படத்தில்தான் பிரமிளா, ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகிய மூன்று ஹீரோயின்கள் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
– அலாவுதீன்