குடும்ப உறவுகளின் பிணைப்பையும், கருத்து மோதல்களையும் கமர்சியலாகக் கொடுத்து தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற டைரக்டர்களில் ஒருவர் வி.சேகர்.
இவரது திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் இருக்காது. அருவருப்பில்லாத நகைச்சுவைக் காட்சிகள் இருக்காது. இது தான் இவரது தனி பாணி.
இவரது இயக்கத்தில் வெளியான ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நான் பெற்ற மகனே’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ போன்ற திரைப்படங்கள், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
பிரபுவையும், குஷ்புவையும் வைத்து இவர் ஒரு படம் எடுப்பதாக இருந்தார். ஆனால், அந்தப் படம் கை விடப்பட்டது. அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார்;
“பிரபுவை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் குஷ்புவை, பிரபு திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஒரு வதந்தி பரவி இருந்தது. ஆனால், பிரவுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது.
அந்த நேரத்தில் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு விருந்துக்காக நான் சென்றேன். அப்போது, பிரபுவை வைத்து நான் படம் இயக்குவது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது மனைவி என்னிடம் தெரிவித்தார். நான் இயக்கிய திரைப்படங்கள், அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.
ஆனால், அந்தப் படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக குஷ்புவை நடிக்க வைக்க வேண்டாம் என்று அவரது மனைவி என்னிடம் தெரிவித்தார்.
எனக்கு ஷாக். பிரபு மனைவியே இவ்வாறு கூறியதால், அந்தப் படத்தில் குஷ்புவிற்கு பதிலாக மீனாவை நடிக்க வைக்க முடிவு செய்தேன்.
இந்த மாற்றம் பிரபுவுக்கு பிடிக்கவில்லை. அவர் என் மீது கோபமடைந்தார். இதனால் அந்தப் படத்தையே மூட்டைக் கட்டி வைத்து விட்டேன்.
என்னால், ஒரு குடும்பத்தினருக்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
எனக்குக் கொடுத்த சம்பளத்தைத் திருப்பி செலுத்த வேண்டிய நிலை வந்தது. எனினும் ஒரு குடும்பத்தின் பிரச்சனை தடுக்கப்பட்டதால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று கூறியுள்ளார் குடும்பப் படம் எடுக்கும் இயக்குநர் வி. சேகர்.
– பாப்பாங்குளம் பாரதி.