Take a fresh look at your lifestyle.

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி படத்துக்கு சிக்கல்!

தலைப்பை மாற்றச் சொல்லும் சென்சார்

ஒரு படத்தின் தலைப்புக்கு பல்வேறு ரூபங்களில் எதிர்ப்பு கிளம்புவது வழக்கம். சிவாஜி கணேசன் நடித்த படத்துக்கு ‘சாப்பாட்டு ராமன்’ என முதலில் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது ரசிகர்கள் எற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்தப் படத்தின் தலைப்பு பின்னர் ‘ராமன் எத்தனை ராமனடி’ என மாற்றப்பட்டது.

சென்சார் கெடுபிடியால் ரஜினியின் ‘நான் மகாத்மா அல்ல’ என்ற டைட்டில் ‘நான் மகான் அல்ல’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

இதேபோல் பிரபல மலையாள நடிகரும், மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கும் சிக்கல் உருவாகியுள்ளது. அவர் நடித்து முடித்துள்ள புதிய படத்துக்கு ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் அதை சட்டப் போராட்டத்துடன் எதிர்கொள்ளும் சம்பவங்களை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

பிரவீன் நாராயணன் இயக்கியுள்ள இந்த மலையாளப் படம் வரும் 27ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் செயல்படும் மத்திய அரசின் ‘சென்சார் போர்டு’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியிருந்தது. படத்தின் தலைப்பில் சீதா தேவியின் பெயரான ஜானகி இடம்பெற்றிருப்பதால், மறுதணிக்கைக்கு மும்பையில் உள்ள சென்சார் வாரியத்துக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது.

அவர்கள், படத்தின் தலைப்பை மாற்றுமாறு இயக்குநர் பிரவீன் நாராயணனை வலியுறுத்தியுள்ளனர். அவருக்கு தலைப்பை மாற்றுவதில் உடன்பாடு இல்லை.

இதுகுறித்து இயக்குநர் பிரவீன் கூறியதாவது:

“சென்சார் வாரியத்தின் திருவனந்தபுரக் கிளை படத்துக்கு அனுமதியளித்தது. தலைப்பில் ஜானகி என இருப்பதால், அது தொடர்பான ஆலோசனைக்கு மும்பை தணிக்கைக் குழு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். சீதாதேவின் பெயர் இருப்பதால், தலைப்பை மாற்றும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அவ்வாறு மாற்றினால், படத்தின் சில காட்சிகள் மற்றும் வசனங்களையும் மாற்ற வேண்டி வரும். என்ன செய்வதென்று தெரியவில்லை. அதிகாரிகளின் கெடுபிடியால், படத்தை திட்டமிட்டபடி வரும் 27ம் தேதி வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” என புலம்புகிறார் இயக்குநர்.

மத்திய அமைச்சர் படத்துக்கே சோதனையா என கேரள சினிமா உலகம் திகைத்து நிற்கிறது.

– பாப்பாங்குளம் பாரதி