Take a fresh look at your lifestyle.

என் படங்களின் ஹீரோயின்கள் அழகாக இருப்பதற்குப் பின்னால்…!

தமிழ்த் திரையுலகில் மக்களின் எதிர்பார்ப்பைப் பெற்ற இயக்குநர் கவுதம் மேனன். காதல், ஆக்‌ஷன் என இரண்டிலும் தனக்கான இடத்தை ஆழப் பதித்தவர்.

விறுவிறுப்பான, அழகான திரைக்கதையில் கவனம் ஈர்ப்பவர். ‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘என்னை அறிந்தால்’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ என ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

இயக்கத்தைத் தாண்டி தற்போது நடிகராகவும் கலக்கி வரும் கவுதம் மேனனிடம் எடுக்கப்பட்ட நேர்காணலின் ஒரு பகுதி.

இயக்குநர் ஆசை உதித்தது எப்போது?

மணிரத்னத்தின் ‘நாயகன்’ படத்தைப் பார்த்த பிறகு இயக்குநராக ஆசைப்பட்டேன்.

நாமும் இதுபோல சிறப்பான படத்தை எடுத்து ரசிகர்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.

உங்கள் படங்களில் காவல்துறையை உயர்வாக சித்தரிப்பது ஏன்?

ராணுவத்தில் சேர வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. என்.டி.ஏ. தேர்வும் எழுதியுள்ளேன். ஆனால் அம்மா இதை விரும்பவில்லை.

ஆனால் ராணுவத்தின் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் எனக்குப் பற்று உள்ளது. அதே பற்று காவல் துறை மீதும் எனக்குண்டு. அதைத்தான் எனது படங்களில் காட்டி வருகிறேன்.

முன்னணி இயக்குநராக இருக்கும்போது நடிகர் அவதாரம் ஏன்? 

இன்னும் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவோ, சம்பளம் நிறைய வாங்கவேண்டும் என்பதற்காகவோ நான் நடிக்க வரவில்லை. முதலில் எனக்கு நடிப்பதில் உடன்பாடு இல்லை.

என் மேனரிசத்தைப்  பார்த்து இயக்குநர்கள் கொடுத்த வற்புறுத்தலால் தான் சில படங்களில் நடித்தேன். பிறகு சூழ்நிலை காரணமாக நடிகனாக மாறிவிட்டேன்.

படங்களில் காதலை அழகாக காட்டும் நீங்கள், யாரையும் காதலித்தது உண்டா?

காதலிக்காவிட்டால் இப்படிப்பட்ட படங்கள் எடுக்க முடியுமா? ஆனால், யார் என்று மட்டும் கேட்காதீர்கள். என் அனுபவமே நான் இயக்கும் காதல் படங்கள்.

உங்கள் படங்களில் கதாநாயகி கேரக்டரை யாரை மனதில் வைத்து வடிவமைக்கிறீர்கள்?

என் அம்மா தான், நான் அதிகம் நேசிக்கும் பெண்மணி. எனவே என் படங்களில் வரும் கதாநாயகி கதாபாத்திரமும், அவர்கள் அணியும் உடையும் என் அம்மாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டவை.

நன்றி: தினந்தந்தி.