வாரப் பத்திரிகைகளும் சரி, தமிழ் சினிமா உலகமும் சரி, காலம் சென்ற வாசன் அவர்களை நன்றியோடு நினையாமல் இருக்க முடியாது.
இரு துறைகளிலும் அவர் ஒரு முன்னோடி. வழிகாட்டி.
கட்டுக்கடங்காத உற்சாகம்; அந்த உற்சாகத்தைச் சாதனையாக உருவாக்கத் தெரிந்த ஆற்றல்; புத்திக்கூர்மையுடன் திட்டம் வகுத்துச் செயலாற்றினால் எந்தத் துறையிலும் உச்சிக்கு ஏறிவிட முடியும் என்ற உரம்; உரத்திற்குத் துணை நின்ற சலியாத உழைப்பு.
‘வாசன்’ என்கிற வார்த்தையில் இவையெல்லாம் அடங்கியிருந்தன. வாழ்க அவர் நினைவு!’’
– எஸ்.எஸ். வாசனின் மறைவுக்கு இப்படி அஞ்சலி செய்து தலையங்கம் எழுதியிருந்தது குமுதம் (11.9.1969).
பெரியார் நடத்திய ‘குடி அரசு’க்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கிற ஏஜெண்ட்டில் துவங்கி ஆனந்த விகடன், ஜெமினி ஸ்டுடியோ, படத் தயாரிப்பு என்று தன்னுடைய வாழ்க்கையை துடிப்பானதாக்கிக்கொண்ட வாசன் படத் தயாரிப்பில்கூட தனக்கென்று தனி முத்திரையை உருவாக்கினார்.

தமிழ், இந்தி, தெலுங்கு கன்னடம், குஜராத்தி, ஏன் ஆங்கிலம், பிரெஞ்சில்கூட ஒரு படத்தைத் தயாரித்தது ‘ஜெமினி’.
1941-ல் ‘மதன காமராஜன்’ படத்தின் மூலமாகப் படங்களைத் தயாரித்த ஜெமினியைப் பலரும் நிமிர்ந்து பார்க்க வைத்தது ‘மங்கம்மா சபதம்’ (1943).
இதற்கடுத்து இந்தியாவைக் கடந்தும் வியக்க வைத்த படம் ‘சந்திரலேகா’ (1948). இதை வாசனே இயக்கியிருந்தார்.
பிரமாண்டமான தயாரிப்புக்குப் பெயர்போன இந்தப் படம் பல இந்திய மொழிகளில் வெளியாகி ஆங்கிலத்திலும் துணைத் தலைப்புகளுடன் வெளியானது.
“சந்திரலேகா மூலம் புதுயுகத்தை ஆரம்பித்துவிட்டார் வாசன். பிரேக் என்கிற ஐரோப்பிய நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச சினிமாப் படக் கண்காட்சிக்கு இந்தியாவின் சிறந்த படமாக சந்திரலேகா இந்திய சர்க்காரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது” என்று 1949 ஜூலையில் தலையங்கத்தில் வாழ்த்தியிருக்கிறது ‘குண்டூசி’ சினிமா இதழ்.
இத்துடன் 1939லேயே ஆசியாவிலேயே முதன்மையான லேபரட்டரியை உருவாக்கியது ஜெமினி. ஒளவையார், வஞ்சிக்கோட்டை வாலிபன், வாழ்க்கைப் படகு, ஒளி விளக்கு என்கிற பல படங்களைத் தந்த ஜெமினி இறுதியாகத் தயாரித்த படம் எல்லோரும் நல்லவரே.
இந்தியாவுக்கு அப்போது வரும் விஐபிகள் பார்க்க விரும்பும் இடங்களில் ஜெமினியும் இடம் பெறுமளவுக்குத் திரைப்படத் தயாரிப்பில் சிறந்திருந்த ஜெமினி ஆதரித்த, உயர்த்திவிட்ட கலைஞர்கள் அநேகம்.
சினிமாத் தொழிலை நேசித்த கலைஞரான வாசன் சினிமாக் கலைஞர்களைப் பற்றி மலிவான விமர்சனங்கள் வந்ததும் வருத்தத்துடன் இப்படி எழுதினார்.

“சினிமாத் தொழிலைப் பற்றியும் அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் பற்றியும் இழிவாகக் கருதுவதும் பேசுவதும் பாஷனாகப் போய்விட்டது.”
“ஓய்வு என்பதே அறியாமல் அல்லும் பகலுமாக உழைத்தவர். இறுதியாக ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டார்” என்று வாசன் மறைந்ததும் கருப்பு அட்டையுடன் தலையங்கம் எழுதியது ஆனந்து விகடன் (7.9.1969)
சென்னை அண்ணாசாலையின் இதயம் போன்ற பகுதியில் பச்சை அடர்ந்த மரங்களுடன் வெள்ளையான சிறு கோட்டை மாதிரியான வாசல் முகப்பு, மேலே ஜெமினி ஸ்டுடியோ என்கிற எழுத்துக்கள் நடுவில் இடுப்பில் சிறு துணியுடன் வாய் உப்பிக் குழலூதும் இரு சிறுவர்களின் சிலை.
பறவைகளின் கூச்சலுடன் இருந்த இடம் மாறிப் போய் விட்டது 1975க்குப் பிறகு. அடுக்குமாடிக் கட்டிடங்களாக அந்தப் பரப்பே இப்போது உருமாறி விட்டாலும் சிலவற்றை இன்னொன்றால் நிரப்ப முடிவதில்லை. ஜெமினியும் அப்படித்தான்.
– நன்றி: விகடன் வெளியீடாக வந்த ‘எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலரிலிருந்து…’