வேரல் கூட்டமொன்றில் பேசிய சாரு நிவேதிதா, ‘இலக்கியவாதிகள் சினிமா குறித்தெல்லாம் எழுதுகிறார்கள்!’ என ஆதங்கப்பட்டார். தொடர்ந்து பேசும்போது, ‘உலக சினிமா குறித்து வேண்டுமானால் எழுதலாம்!’ என்றார்.
மலையாளம், இந்தி, தமிழ், பெங்காலி, மராத்தி எல்லாம் உலகத்துக்கு வெளியில் இருக்கிறதா? – யோசித்தேன்.
இது நடந்த சில நாட்களிலேயே சாரு, உலகப் புகழ்பெற்ற சிம்பொனியான ‘தூத்துக்குடி கொத்தனார்’ பாடல் குறித்து எழுதியிருப்பதாக நண்பர்கள் கூறினார்கள்.
கடந்த ஓர் ஆண்டாக குமுதத்தில் சினிமா குறித்து எழுதுகிறேன். கூடியவரை மாற்றுப் பண்பாட்டைச் சிந்திக்கிற திரைப்படங்களையே எழுதத் தெரிவுசெய்கிறேன்.
குமுதத்தில் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படம் குறித்து எழுதியிருக்கிறேன். இதே படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் விமர்சனம் வந்திருக்கிறது. தி ஹிந்துவில் (ஆங்கிலம்) வந்திருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியிருக்கிறது. ஆனாலும் குமுதத்தில் இப்படம் குறித்து எழுதியிருப்பதுபோல் இந்தியாவில் எந்தவொரு மெய்ன்ஸ்ட்ரீம் மீடியாவிலும் வந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தப்படம்தான் என்றில்லை. ஓர் ஆண்டில் இப்படி நிறைய திரைப்படங்களை முன்வைத்து மாற்று அரசியலை, பண்பாட்டை விவாதித்திருக்கிறேன்.
சமீபத்தில் revelations என்றொரு தென்கொரியப் படம் குறித்து எழுதியிருக்கிறேன். ட்ரெய்ன் டு பூசன்’ இயக்குநர் இயோன் சாங் – ஹோ இயக்கிய படம்.
சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளாகி மனப்பிளவுண்ட பெண்ணொருவரின் வாழ்வை விவரிக்கும் ‘தாயைத்தின்னி’ எனும் தமிழ் நாவல் சமீபத்தில் வெகுவாகப் பேசப்படுகிறது.
இதுவே ஓர் ஆணுக்கு நடந்திருந்தால்? ரெவலேஷன்ஸ் படத்தில் வருகிற யாங் ரே (ஷின் மின்-ஜே) அப்படிப்பட்ட பாத்திரம்.
இளம் வயதில் சிறியதந்தையால் கொடுமைக்கு உள்ளானவன். இதனால் அவனது ஆளுமை சிதைவடைகிறது.
இந்தப் படம் வழக்கமான சைக்கோ படம் அல்ல. குற்றவாளி ஒரு சைக்கோவாக இருப்பது ஆச்சரியமில்லை.
அந்தக் குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பது ஆண்டவரின் ஆணை, என நம்பும் ஒரு ஃபாதருக்குள் இருக்கும் சைக்கோத்தனத்தை வெளிப்படுத்துகிற வகையில் ரெவலேஷன்ஸ் முக்கியமான படம்.
மதத்தை ‘ஆசை நிறைந்த மாயைகளின் ஓர் அமைப்பு’ என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். இந்த நுண்ணரசியலைதான் இப்படம் பேசுகிறது.
இந்தப் படத்தில் பாஸ்டர் சங் மின் – சானுக்கும், குற்றவாளியான யாங்-ரே வுக்கும் இடையே பெரிதாக வித்தியாசமில்லை.
இருவருமே மனநோயாளிகள். ‘துன்மார்க்கன் நிஜ வாழ்க்கையில் செய்வதை, நல்லொழுக்கமுள்ள மனிதன், கனவில் கண்டு திருப்தியுறுகிறான்.’ என்பார் ஃப்ராய்ட். இந்த ஃபாதரும் அப்படிப்பட்டவர்தான்.
மதக்கோட்பாட்டை தீவிரமாக விசுவாசிப்பது, ஒருவித நரம்பியல் நோய். இதை நுணுக்கமாகக் கலைப்படுத்துகிற படைப்பு ரெவலேஷன்ஸ்.
கூடியவரை இதுபோன்ற படங்களையே தொடர்ந்து குமுதம் திரையும் வாழ்வும் தொடரில் கவனப்படுத்துகிறேன்.
குமுதம் ஆசிரியர் குழுவினர் தரும் சுதந்திரம் முக்கியமானது. மேலதிகமாக அவர்கள் என் அழகான புகைப்படங்களையும் போடுகிறார்கள்.
– நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு.