Take a fresh look at your lifestyle.

இயக்குநர் செல்வராகவனிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘பார்ட் 2’!

‘துள்ளுவதோ இளமை’ பார்த்துவிட்டு ‘துள்ளுமோ இளமை?!’ என்று பற்களை நறநறத்தவர்கள் கூட, செல்வராகவனின் அடுத்தடுத்த படங்களைப் பார்த்து விக்கித்துப் போனார்கள்.

ஏனென்றால், அப்படங்களின் திரைமொழி அவ்வாறிருந்தது. ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ என்று நடிகர் தனுஷின் நடிப்புத்திறனைப் பல மடங்காக உயர்த்துவதற்கான பணிகளைச் செவ்வனே செய்தன அவரது திரைப்பரங்கள்.

சகோதரர் என்றில்லை, இதர நாயகர்களான ரவி கிருஷ்ணா, வெங்கடேஷ், கார்த்தி, பார்த்திபன், ஆர்யா, சூர்யா, எஸ்.ஜே.சூர்யா என்று ஒவ்வொருவரது நடிப்புத் திறனையும் பட்டை தீட்டி வேறொரு பரிமாணத்தைத் தந்தது அவரது படைப்பாக்கம்.

இவை போதாது என்று இன்னும் சில அம்சங்களையும் தாங்கித் திரிகின்றன அவர் இயக்கிய படங்கள். அதில் முக்கியமானது, இளமையின் கொண்டாட்டத்தை, திண்டாட்டத்தை, ஏக்கத்தை, துக்கத்தை, குதூகலத்தை, கோபாவேசத்தை வெளிக்காட்டும் உள்ளடக்கம் அவற்றில் நிறைந்திருந்ததுதான்.

‘7ஜி ரெயின்போ காலனி’ கதிர் போலவே, ‘புதுப்பேட்டை’ கொக்கி குமார் போலவோ, ‘ஆயிரத்தில் ஒருவன்’ முத்து போலவோ, தனது பாலியல் கொப்பளிப்பை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கியவர்களை ‘இது சில மனிதர்களது இயல்பு’ என்று தட்டிக் கொடுத்தன செல்வராகவனின் படங்கள்.

ஒருகட்டத்தில் அந்தத் திரிபையே இயல்பென்று இளைய சமூகம் எண்ணத் தொடங்கியது தனிக்கதை.

ஆனாலும், மணிரத்னத்தைப் போன்று அடுத்த தலைமுறையின் காதல் உணர்வில் மாற்றங்களைப் புகுத்தியதில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு.

வித்தியாசமான காட்சிகள்!

‘திரைப்படங்களில் கதையைப் பொறுத்தவரை புதுமைக்கு வேலை இல்லை; திரைக்கதையில் வேறுபாட்டைக் காட்டினால் மட்டுமே உண்டு’ என்று நம்புபவர்களே வித்தியாசமான படைப்புகளைத் தருகின்றனர்.

அந்த வரிசையில், தனது படங்களில் காட்சிகளை வித்தியாசமாக எழுதி, வழக்கத்திற்கு மாறாகப் படம்பிடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் செல்வராகவன்.

‘காதல் கொண்டேன்’ படத்தில் புரபொசரிடம் டஸ்டரால் அடி வாங்கும் தனுஷ், தான் படுத்திருக்கும் பெஞ்ச்சில் இருந்து நேராக எழுந்துவந்து போர்டில் குறிப்பிட்ட கணக்கின் தீர்வை எழுதி முடித்துவிட்டு, திரும்பவும் தனது இருக்கையில் வந்து அமர்ந்து தூங்கத் தொடங்குவார். அது ‘ஹீரோயிசம்’ வேறுமாதிரியாக வெளிப்படுகிற காட்சி.

இதே தொனியில், ‘7ஜி ரெயின்போ காலனி’யில் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை கேட்டுச் சென்ற ரவிகிருஷ்ணாவை ‘உனக்கு ஒண்ணுமே தெரியாதா, அப்படித் தெரிஞ்சதை மட்டும் செய்’ என்று திட்டுவார் சோனியா அகர்வால்.

உடனே, அங்கிருக்கும் உதிரி பாகங்களை எடுத்து ஒன்று சேர்க்கத் தொடங்குவார் ரவிகிருஷ்ணா.

‘புதுப்பேட்டை’யில் தன்னைக் கொல்லத் துணிந்த தந்தையின் வீட்டுக்குச் சென்று, அவரது இரண்டாவது மனைவி, குழந்தைகளிடம் அன்பொழுகப் பேசும் தனுஷ் பாத்திரம்.

அப்போது, அவரது சம்பாத்தியம் எவ்வளவு என்று கேட்டுவிட்டு ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்று ஒரு வசனத்தை உதிர்ப்பார் அவரது தந்தையாக நடித்தவர். இப்போது பார்த்தாலும், அந்தக் காட்சி சிரிப்பை வரவழைக்கும்.

‘7ஜி ரெயின்போ காலனி’யில் ‘மகனுக்கு வேலை கிடைத்துவிட்டது’ என்பதை அறிந்து உள்ளூர சந்தோஷப்படும் விஜயன், அதனை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.

நள்ளிரவில், மனைவியாக வரும் தாரணியிடம் ‘என் பிள்ளைக்கு டிவிஎஸ்ல வேலை கிடைச்சிருக்குடி. இனி எவனாவது என் பிள்ளை வெட்டியா ஊரை சுத்துறான்னு சொல்லுவான்’ என்று பெருமிதம் பொங்கப் பேசுவார்.

சில மணி நேரங்களுக்கு முன் தந்தை காட்டிய அலட்சியத்தை அவமானமாக உணர்ந்த ரவிகிருஷ்ணா பாத்திரம், அந்த பெருமிதத்தை எதிர்கொள்ள முடியாமல் துடித்து அடங்கும்.

அதுநாள்வரை தந்தை மீது இல்லாத மரியாதை, அடுத்த நாள் காலையில் அவரது உடலசைவில் பொங்கிப் பிரவாகமெடுக்கும்.

‘அப்பாவை எவண்டா மதிப்பான்’ என்று சொல்லித் திரிகிற இளந்தாரிகள் மனதில் பொளேரென்று அறையும் அந்தக் காட்சி. அதுதான் செல்வராகவனின் சிறப்பு.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படங்களில் அந்த காட்சி கிறக்கத்தை முழுக்கதையும் தரும் வகையில் உழைப்பைக் கொட்டியிருந்தார் செல்வராகவன்.

அவ்வளவு ஏன், அவரது தோல்விப்படங்களில் கூட சிறப்பம்சங்களைத் தேடிக் கண்டறிந்து கொண்டாடுகிற தீவிர ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் செல்வராகவன்.

‘இரண்டாம் உலகம் மாதிரி காதல் கதை இனி வராது’ என்று சொல்கிறவர்கள் இப்போதும் இருக்கின்றனர்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துல வர்ற பாடல்களுக்கான சிச்சுவேஷனும் சரி, அந்த பாடல்களோட வடிவமைப்பும் சரி, ரொம்பவே வித்தியாசமா இருக்கும்’ என்று கொண்டாடுபவர்கள் பலர்.

செல்வராகவனோடு பணியாற்றிய பல நடிகர் நடிகைகள், ‘அவரோட வொர்க் பண்றது பெரிய சவால்’ என்றே பேட்டியளித்திருக்கின்றனர்.

காரணம், தனது வசனங்களில், காட்சிக்கோணங்களில், திரைக்கதையோட்டத்தில் எந்த இடம் எப்படி அமைய வேண்டும் என்று அவர் மனதில் கற்பனை செய்து வைத்திருக்கிறாரோ, அது போலவே திரையில் வரும்வரை பிடிவாதத்தைத் தொடர்வது அவரது வழக்கம்.

கண்ணசைவு, குரல் செருமல், சின்னச்சின்ன அசைவுகள் தொடங்கி பேரருவியாகப் பிரவாகமெடுப்பது வரை எந்த இடத்தில் என்ன நிகழ வேண்டும் என்று அவர் தீர்மானித்தது போலவே நடிப்புக்கலைஞர்கள் பிரதிபலிக்க வேண்டியிருக்கும்.

அதாவது, தான் உருவாக்கிய உலகத்தின் ஒவ்வொரு ‘இன்ச்’சிலும் ‘தான்’ தெரிய வேண்டுமென்பதே அவரது பார்முலா. அதனைச் சாத்தியப்படுத்த பேருழைப்பு தேவைப்படும்.

‘பார்ட் 2’ எப்போது?

ஒவ்வொரு படத்திற்கும் ‘பாகம் 2’ஐ உருவாக்குவது தற்போதைய ட்ரெண்டாக உள்ளது. ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ‘புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் அடுத்த பாகம் எப்போ’ என்ற கேள்வியை எதிர்கொண்டு வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.

அப்படத்தின் முடிவு, அப்படிப்பட்ட தொடக்கத்திற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனாலும், ரசிகர்கள் அப்படத்தை ஏற்றுக் கொண்டாடி வருவது ஆச்சர்யமான விஷயம்.

இதோ இப்போது ‘7ஜி ரெயின்போ காலனி பாகம் 2’ யை ரவி கிருஷ்ணா, அனஸ்வரா ராஜனைக் கொண்டு உருவாக்கி வருகிறார் செல்வராகவன்.

அடுத்து தனுஷைக் கொண்டு ‘புதுப்பேட்டை 2’ படத்தை உருவாக்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகவும் ஒரு தகவல் சில மாதங்களாகத் திரையுலகில் உலா வருகிறது.

இந்த வரிசையில் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமல்லாமல் யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன போன்ற படங்களும் இருப்பதுதான் ஆச்சர்யம்.

சிறிது காலம் படைப்புலகில் இருந்து விலகி நின்று இந்த உலகை, அதன் இயல்பை ரசித்து வந்தார் செல்வராகவன்.

பிறகு, நடிப்பு வாய்ப்புகள் தேடி வந்தபோது, அதனை ஏற்றுக்கொண்டார். இப்போதும் அதனைத் தொடர்ந்து வருகிறார்.

இடையே, ‘மடை திறந்து பாயும் நதியலை நான்’ என்று சொல்லாமல் செயலில் இறங்கி வருகிறார். அது சாதாரண விஷயமல்ல.

தற்போது தனது 48ஆவது வயதைப் பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். நடிப்பிலும் இயக்கத்திலும் அவர் தனது உழைப்பின் வழியே புதிய சிகரங்களை எட்ட வேண்டும்.

இதுநாள்வரை இருந்த பலவீனங்களை உதிர்த்துவிட்டு, பலங்களைச் சேர்த்து, படைப்பாற்றலின் மகிமையை வெளியே கொண்டுவர வேண்டும். அதற்கான வல்லமையை இயற்கை செல்வராகவனுக்கு வழங்கட்டும் என்பதே நம் விருப்பம்..!

– மாபா