Take a fresh look at your lifestyle.

‘மச்சாண்ட மாலாஹ’ – 90’ஸ் கிட்ஸ்களுக்கு..!

‘குடும்பச் சித்திரம்’ என்ற வார்த்தை தொண்ணூறுகளின் இறுதிவரை பிரபலமாக இருந்தது. டூரிங் டாக்கீஸ்களில் ஒரு படம் வெளியிடப்படும்போது மஞ்சள், பச்சை, நீலம், இளஞ்சிவப்பு வண்ணச் சுவரொட்டிகளில் அந்தப் படத்தின் பெயர், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

அதில் மேற்சொன்ன வார்த்தை இருந்தால் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வருமென்பது ஒரு நம்பிக்கை.

வி.சேகர், விசு போன்ற இயக்குநர்கள் தமிழ் திரையுலகில் அதில் கெட்டியாக இருந்தார்கள். மலையாளத்திலும் ராஜசேனன், சத்யன் அந்திக்காடு, பாலச்சந்திர மேனன் போன்ற பல இயக்குநர்கள் அப்படிப்பட்ட கற்பனைக் கதைகளை ‘யதார்த்தம்’ என்று எண்ணும் வகையில் திரையில் தந்தார்கள்.

இப்போது அப்படங்களைப் பார்த்தால், ‘சீரியல்’ என்று சொல்லிவிடுவார்கள் ஜென்ஸீ கிட்ஸ்கள். ஆனால், 90ஸ் கிட்ஸ்கள் அதனை ரசிப்பார்கள்.

கிட்டத்தட்ட அப்படிப்பட்ட தொனியில் இப்போது ஒரு திரைப்படம் வெளியானால் எப்படியிருக்கும்? அப்படியொரு திரையனுபவத்தைத் தருகிறது, போபன் சாமுவேல் இயக்கியுள்ள மலையாளத் திரைப்படமான ‘மச்சாண்ட மாலாஹ’.

இதில் சௌபின் ஷாஹிர், தியான் சீனிவாசன், நமீதா ப்ரோமோத், சாந்தி கிருஷ்ணா, மனோஜ் கே.யு., வினீத் தட்டில் டேவிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சரி, இப்படம் சமகாலத்திற்கு ஏற்றதாக இருக்கிறதா?

  ‘ம.மா.’ கதை!

சூது வாது ஏதுமறியா ஒரு அப்பாவி ஆண் சஜீவன் (சௌபின் ஷாஹிர்). கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராகப் பணியாற்றுகிறார்.

அதில் வேலை செய்யும் பெண் நடத்துனர் சந்திரிகாவோடு (ஆல்பி) அவருக்குக் காதல்.

அப்பெண்ணுக்கும் இஷ்டம் என்று தெரிகிறது.

தனது சகோதரி, மைத்துனர் சகிதம் சந்திரிகாவைப் பெண் பார்க்கச் செல்ல முடிவு செய்கிறார் சஜீவன். அந்தத் தகவலைத் தெரிவிக்கலாம் என்றால், அவர் வேலைக்கு வரவே இல்லை.

நான்கைந்து நாட்கள் கழித்து, கழுத்தில் தாலியோடு வருகிறார் சந்திரிகா. ‘என்ஆர்ஐ மாப்பிள்ளைன்னு சொல்லி திடீர்னு கல்யாணத்தைப் பண்ணிட்டாங்க’ என்று சொல்லி ‘சாரி’ கேட்கிறார். அதனைக் கேட்டதும் சஜீவன் மனமொடிகிறார்.

அதையடுத்து, ‘தான் உண்டு தனது வேலையுண்டு’ என்றிருக்கிறார் சஜீவன்.

ஒருநாள் பேருந்தில் ஏறும் ஒரு பெண்ணுடன் அவருக்கு ‘முரண்’ ஏற்படுகிறது. அதுவும் ‘போம்மா உன் வேலைய பார்த்துக்கிட்டு’ என்று கோபப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது.

உடனே, சஜீவனின் மேலதிகாரியிடம் அவர் புகார் செய்து விடுகிறார். அப்பெண்ணின் பெயர் பிஜி (நமீதா ப்ரமோத்).

முதலில் பிஜி மீது சஜீவனுக்கு கோபம் பெருகுகிறது. பின்னர், இருவரும் அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ஒருகட்டத்தில் சஜீவன் அவர் மீது காதல் வயப்படத் தொடங்குகிறார். ஆனால், பிஜியிடம் அப்படி எந்த மாற்றமும் இல்லை.

இந்த நிலையில், பிஜி எனும் பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாகத் தனது சகோதரி, மைத்துனரிடம் (திலேஷ் போத்தன்) சொல்கிறார் சஜீவன். உடனே அப்பெண் பற்றி அவரது மைத்துனர் விசாரிக்கிறார்.

அவருக்கு அந்தச் சம்பந்தத்தில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை. காரணம், பிஜியின் தாய் குஞ்சிமோள் (சாந்தி கிருஷ்ணா) பற்றிக் கேள்விப்படுகிற தகவல்கள்.

கறார் பேர்வழியான குஞ்சிமோள், ‘ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாள் ஆக்கிருவா’ என்ற பழமொழிக்குப் பொருத்தமாகத் திகழ்பவர். அவரது கணவரோ (மனோஜ். கே.யு.) ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்றிருப்பவர்.

நண்பரோடு (வினீத் தட்டில் டேவிட்) சேர்ந்து பிஜியைப் பெண் பார்க்கச் செல்லும் சஜீவன், குஞ்சிமோள் சொல்லும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறார். அதில் முதலாவது, ‘வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்’ என்பது.

அதனைக் கேள்விப்பட்டதும், சஜீவனின் மைத்துனர் அதிர்கிறார். அவரும் ‘வீட்டோட மாப்பிள்ளை’ ரகம் என்றபோதும், மச்சான் செல்கிற (?!) வீடு சரிவராது என்கிற எண்ணம் அவரிடத்தில் இருக்கிறது. அனைத்துக்கும் மேலாக, தனது நண்பனாக, சகோதரனாக, சஜீவனை அவர் காண்கிறார்.

ஆனாலும், அனைவரது கருத்துகளையும் புறந்தள்ளிவிட்டு பிஜியின் கரம் பற்றுகிறார் சஜீவன். அதன்பிறகே பிஜி மற்றும் குஞ்சிமோளின் உண்மையான முகம் அவரது அப்பாவி மனதுக்குப் புரிகிறது.

அதுவரை வாழ்வில் சந்தித்திராத சில சங்கடங்களை எதிர்கொள்கிறார். கூடவே, பிஜியின் சந்தேகங்களையும் கெடுபிடிகளையும் சகிக்க நேர்கிறது.

அனைத்துக்கும் மேலே ஒரு பேருந்து விபத்தில் சிக்கி, ‘சீரியசான’ நிலைமைக்கு ஆளாகிறார் சஜீவன். அவரது இரு சிறுநீரகங்களும் பழுதாகின்றன. அப்போது, அவருக்கு மாற்று சிறுநீரகம் தரத் தயாராகிறார் பிஜி.

சிகிச்சை முடிந்து சில நாட்களுக்குப் பிறகு, சக்கர நாற்காலியில் வரும் பிஜியைப் படுக்கையில் இருந்தவாறே பார்க்கிறார் சஜீவன். மனம் நெகிழ்கிறார்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் பிஜியிடம் மன மாற்றம் சிறிதும் நிகழவில்லை என்பதை அவர் உணர்கிறார். ‘நான் கொடுத்த கிட்னி கெட்டுப்போகாம இருக்குற அளவுக்கு, நீ ஒழுங்கா நடந்துக்கணும்’ என்று குரலை உயர்த்துகிறார் பிஜி.

அதன்பிறகு சஜீவன் நிலை என்னவானது? இருவருக்குமான உறவு நீடித்ததா அல்லது விரிசல் விழுந்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

அரதப்பழசான’ ட்ரீட்மெண்ட்!

‘வீட்டோட மாப்பிள்ளை’ என்பதனை வைத்து தமிழிலும் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. சேரன் முதன்முதலில் நாயகனான ‘சொல்ல மறந்த கதை’ அப்படியொன்றுதான். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய அதன் மூலக்கதையானது ‘மருமக்கள் வழி மான்மியம்’ பற்றிப் பேசியிருக்கும்.

‘மச்சான்ட மாலாஹ’ அந்த கருத்தாக்கத்தைப் பேசவில்லை என்றபோதும், அப்படியொரு சூழலுக்கு உள்ளான ஒரு அப்பாவி ஆணின் மனநிலையைச் சொல்கிறது. அதே வீட்டில் இருக்கும் அவரது மாமனார் பாத்திரமும் கூட அப்படித்தான் திரையில் வெளிப்படுகிறது.

‘வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை’ என்பது போன்ற தலைப்புச் செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் தலையெடுக்கும் நிலையில், அதனைப் படித்துவிட்டு பொதுவிடங்களில் அதற்கு நேரெதிரான தகவல்களைச் சில ஆண்கள் விவாதிக்கிற தொனியில் உள்ளது ‘ம.மா.’ திரைக்கதை.

‘அது எப்படிச் சரியாகும்’ என்பவர்கள், இந்தப் படத்தினைச் சிறிதளவும் ஏற்க மாட்டார்கள்.

‘எங்கியாவது ஒரு இடத்துல இப்படியும் நடக்குதுன்னு சொல்றதுல என்ன தப்பு’ என்பவர்கள் ‘ம.மா.’ படத்தை முழுமையாகக் கண்டுவிட்டு கருத்து கூறுவார்கள். நாம் இரண்டாவதைக் கைக்கொள்வோம்.

சஜீவன் பாத்திரத்திற்கு தனது நடிப்பு மூலம் உயிரூட்டியிருக்கிறார் சௌபின் ஷாஹிர். அவருக்கான ‘விக்’ உள்ளிட்ட சில ஒப்பனை அம்சங்கள், அவரை இப்பாத்திரத்தோடு பொருத்திப் பார்ப்பதில் தடைகளாக இருக்கின்றன.

தான் ஏற்ற பிஜி பாத்திரத்திற்கு நியாயம் செய்யும்விதமாகத் தோன்றியிருக்கிறார் நமீதா ப்ரமோத். கிளைமேக்ஸ் காட்சிகளில் எதிர்கொள்கிற மன மாற்றங்களைத் திரையில் காட்டுவதில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார்.

திரைக்கதையாசிரியர் ஏற்படுத்திய ஏமாற்றம் அது. ஆகையால், அதனைப் புறந்தள்ளிவிடலாம்.

சாந்தி கிருஷ்ணாவுக்கு இதில் எதிர்மறை பாத்திரம். முடிந்தவரை அதனைத் திரையில் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.

இந்தப் படத்தில் நமக்கு ஆறுதல் தரும் வகையில் நாயகனின் சொந்த மச்சானாக வரும் திலேஷ் போத்தனும், மாமனாராக வரும் மனோஜ் கே.யு.வும் கலக்கியிருக்கின்றனர்.

குறிப்பாக ஆங்காங்கே ‘காமெடி கவுண்டர்கள்’ கொடுத்து நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார் மனோஜ்.

ஆல்பி பஞ்சிகரன் தொடக்க காட்சியில் வந்து நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். படம் முழுவதும் அப்படிப்பட்ட சிரிப்பைத் தருகிறார் டேவிட் வினீத் தட்டில். என்றாலும், அவரது பாத்திரம் ‘டெம்ப்ளேட்’டாக இருக்கிறது.

இரண்டாம் பாதியில் வரும் தியான் சீனிவாசன் ஆங்காங்கே காமெடி செய்து எரிச்சல் ஊட்டுகிறார்.

விவேக் மேனனின் ஒளிப்பதிவு கேரளக் கிராமிய இடங்களை அழகுறக் காட்டியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் ரதீஷ்ராஜ் இப்படத்தில் வரும் தேவையற்ற காட்சிகளை ஒதுக்கித்தள்ளத் தவறியிருக்கிறார். அதேநேரத்தில், திரைக்கதைக்குத் தேவையான சில காட்சிகள் விடுபட்டுப் போயிருப்பதைக் குறிப்பிட்டாரா என்று தெரியவில்லை.

முடிந்தவரை கதையில் வரும் களங்கள் யதார்த்தம் எனத் தெரிய மெனக்கெட்டிருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் சஹஸ் பாலா.

இசையமைப்பாளர் ஊஸேபச்சனின் பாடல்கள் மெலடிகளாக இருந்தாலும், பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. பின்னணி இசை காட்சிகளில் நிறைந்திருக்கும் நெகிழ்ச்சி நம்மைத் தொற்ற வகை செய்திருக்கிறது.

ஜெக்சன் ஆண்டனி இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார். அதற்குத் திரைக்கதை வசனம் அமைத்திருக்கிறார் அஜீஷ் பி.தாமஸ். இவர் ‘விக்ருதி’ எனும் படத்திற்கு எழுத்தாக்கம் செய்தவர். அப்படமும் இப்படியொரு வழக்கத்திற்கு மாறான பார்வையைக் கொண்டதுதான்.

‘பணமே முக்கியம்’ என்றெண்ணுவதோடு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கிற ஒரு பெண்மணி, அவரது தாக்கத்தில் வளரும் மகள், அவர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறும் மருமகன் என்று மூன்று பாத்திரங்களைப் பிரதானப்படுத்துகிறது ‘ம.மா’ திரைக்கதை. அது தனிப்பட்ட குணாதிசயமாகச் சொல்லப்படாமல், மரபு வழியில் தொடர்வதாகக் காட்டியிருப்பது இக்கதையின் பலவீனம்.

‘பூவா தலையா’ பாணியில் அமைந்த பழைய படமொன்றில் இப்படிப்பட்ட கதை இருப்பது நம்மை ‘ஜெர்க்’ ஆக வைக்காது. ஆனால், இப்படத்தில் அப்படிப்பட்ட சித்தரிப்பை ஏற்க முடிவதில்லை.

போலவே, இரண்டாம் பாதியில் நாயகி பாத்திரம் என்ன நினைக்கிறது என்பது திரையில் தெளிவாக வெளிப்படவில்லை.

அது இக்கதையின், திரைக்கதையின் மிகப்பெரிய மைனஸ்.

அதனால், இயக்குநர் போபன் சாமுவேலின் காட்சியாக்க முயற்சியும் கூடப் பலவீனப்பட்டிருக்கிறது.

’பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடக் கூடாது எனும் நோக்கில் அவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாகவே சட்டம் உள்ளது.

அதேநேரத்தில், சில பெண்கள் அதைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்’ என்று இப்படத்தில் நாயகனுக்கு ஆதரவாக ஒரு பெண் வழக்கறிஞர் பேசும் வசனமொன்று வருகிறது.

அந்த வசனத்தை ஏற்கும் அளவுக்காவது, திரைக்கதை கனகச்சிதமாக அமைந்திருந்தால் பரவாயில்லை. அது நிகழவில்லை என்பதுதான் நமது வருத்தம்..!

-உதயசங்கரன் பாடகலிங்கம்.

#மச்சாண்ட_மாலாஹ_விமர்சனம் #Machante_malakha_review #மலையாளப்_படம் #Malayalam_movie #இயக்குநர்_போபன்_சாமுவேல் #Director_Boban_samuel #சௌபின்_ஷாஹிர் #Soubin_Shahir #தியான்_சீனிவாசன் #Dhyan_Sreenivasan #நமீதா_ப்ரோமோத் #Namitha_Pramod #சாந்தி_கிருஷ்ணா #Shanti_krishna #மனோஜ்_கேயு #Manoj_KU #வினீத்_தட்டில்_டேவிட் #Vineeth_Thattil_david