Take a fresh look at your lifestyle.

சல்மான்கானுக்குத் தயாரான கதையில் அல்லு அர்ஜுன்!

‘ராஜாராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, தமிழில் மெர்சல், தெறி, பிகில் என வரிசையாக வெற்றிப் படங்கள் கொடுத்தார். இதற்கு முன் பாரதிராஜா, ஷங்கர் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்கள்.

தமிழில் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தவர் இந்திக்குச் சென்றார். அங்கு ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.

இதனைத் தொடர்ந்து, தனது ‘தெறி’ படத்தை இந்தியில் தயாரித்தார். ‘பேபி ஜான்’ என்ற அந்தப் படத்தை அட்லீ இயக்கவில்லை. பேபி ஜான் பெரும்தோல்வி அடைந்தது. அட்லீக்கு பல கோடிகள் நஷ்டம். ஆனாலும் அவர் அசரவில்லை.

ஜவானை அடுத்தும் அட்லீ, இந்திப் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டினார். சல்மான்கானிடம் கதை சொன்னார். அவருக்கு கதை பிடித்துப்போனது. ஓகே சொல்லிவிட்டார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தது.

படத்தில் இன்னொரு நாயகனாக ரஜினி அல்லது கமலை நடிக்க வைக்க அட்லி முயற்சி மேற்கொண்டார். ஆனால் இருவருமே மறுத்து விட்டார்கள். இதனால் அந்தத் திட்டம் ‘பனால்’ ஆனது.

இப்போது அதே கதையில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார். கதையைக் கேட்டதும் உடனடியாக கால்ஷீட் கொடுத்து விட்டார் அல்லு அர்ஜுன். நேரடியாக தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ‘டப்’ செய்து வெளியிடப்பட உள்ளது.

கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் நிகழ்காலம் என இரு காலக்கட்டங்களில் நடக்கும் கதை. இன்னொரு நாயகனாக யார் நடிக்கவுள்ளார் என்பது முடிவாகவில்லை.

இந்தப் படத்தில் மூன்று நாயகிகள் உள்ளனர். அவர்களும் முடிவாகவில்லை. நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.