திரைத் தெறிப்புகள்: 15
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும்,
“நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை”
– என்று துவங்கும் அருமையும் எளிமையுமான இந்தப் பாடலை எழுதி இருப்பவர் கவியரசு கண்ணதாசன்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் – மிகவும் குழைவான பாவத்துடன் பாடியிருப்பார் டி.எம்.சௌந்தரராஜன்.
அந்தக் காலத்திலேயே “A” சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தில் மனநலம் குன்றியவராக நடித்திருப்பார் நடிகர் திலகம். அவரைக் குணப்படுத்தும் பாதுகாவலராக அருமையாக நடித்திருப்பார் ஜெயலலிதா.
மாடி வீட்டின் தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிவாஜி தன்னுடைய இயலாமையே வெளிப்படுத்தி தன்னைப் புரிந்துகொள்ளக் கோரும் விதத்தில் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப்பாடல்.
“நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே
உனக்கும் உள்ளம் புரியவில்லை”
என்று நகரும் பாடலின் தொடர்ச்சியாக கீழ்க்கண்ட வரிகள் இடம்பெற்றிருக்கும்,
“வந்து பிறந்துவிட்டேன்
ஆனால் வாழத் தெரியவில்லை…”
என்கின்ற வரிகளும்,
“என்னைப் படைத்த தெய்வம்
இன்னும் கண்ணைத் திறக்கவில்லை”.
என்று நிறைவடையும் பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும், நடிகர் திலகம் காட்டி இருக்கும் முகபாவங்களும், எம்.எஸ்.விஸ்வநாதனின் அற்புதமான இசையும் அவ்வளவு நளினமான ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இந்தப் பாடலை காணொளிக் காட்சியில் பார்க்க விரும்புகிறவர்கள் மேலும் சில படங்களுக்கான ‘திரைமூலம்’ இது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.