தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூரி. கடந்த வருடம் மார்ச் மாதம் வெளிவந்த வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் கதையின் நாயகனாக சூரி நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகர் சூரி.
சூரி 2009-ல் வெளிவந்த ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தில் பரோட்ட போட்டியில் கலந்து கொள்வது போல் இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனுடன் மனம் கொத்திப்பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மான் கராத்தே, அஞ்சான், மருது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
நாகேஷ்:
தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகரான நடிகர் நாகேஷ் தனது நகைச்சுவையாலும் தனது முகபாவங்கள், நடன அசைவுகள், பேசும் விதம் அத்தனையும் நகைச்சுவையால் கலந்திருக்கும் ஒரு அற்புதமான நகைச்சுவை மனிதர்.
அந்தக் கால திரைப்படங்களான காதலிக்க நேரமில்லை, பெரிய இடத்துப் பெண், நவராத்திரி மற்றும் மகளிர் மட்டும் படத்தில் உயிரில்லாத சடலமாகவும் புகழ்பெற்ற நகைச்சுவைக் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாகவும், வில்லனாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் நாகேஷ்.
கவுண்டமணி:
தமிழ் சினிமாவில் செந்தில் – கவுண்டமணி இருவரது கூட்டணியுடன் அமைத்த நகைச்சுவைக் காட்சிகளுக்கு தனி இடமுண்டு. இருவரும் தங்களுக்கு என்று தனி முத்திரைகளைப் பதித்தவர்கள். நடிகர் கவுண்டமணி நகைச்சுவைக் கதாபாத்திரம் தொடங்கி குணச்சித்திரம், கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார்.
பேசப்பட்ட திரைப்படங்களான கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர், இந்தியன், நாட்டாமை, உனக்காக எல்லாம் உனக்காக, சூரியன், சின்னத்தம்பி, ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
இவர் சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 1995ஆம் ஆண்டு வெளியான ராஜா எங்க ராஜா படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு ஜோடியாகவும் ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ உள்ளிட்ட 12 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
விவேக்:
இசை, பரத நாட்டியம், ஆர்மோனியம், வயலின் ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.
1990களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர், பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார்.
துப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டுக் கல்யாணம், தூள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையால் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைத்தவர்.
இவரை சின்னக் கலைவாணர் என்று அழைக்கும் அளவுக்கு இவரது நகைச்சுவைக் காட்சிகள் அமைந்திருக்கும். விவேக் கதாநாயகனாக ‘பாலக்காட்டு மாதவன்’ திரைப்படத்தில் சோனியா அகர்வாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில், குடும்ப நகைச்சுவை கதாபாத்திரத்தில் அனைவரையும் ஈர்த்திருப்பார்.
வடிவேலு:
தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ‘வைகைப்புயல்’என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவுக்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்துபவர்.
நடிகரும் பின்னணிப் பாடகருமான இவர் 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு அசைக்க முடியாத நகைச்சுவை மன்னராகவே சினிமாவில் வளம்வந்தார். விஜய் நடிப்பில் போக்கிரி, பிரண்ட்ஸ் மற்றும் கிரி, ஏய், வின்னர், மருதமலை, தலைநகரம், திமிரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கதாநாயகனாக இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், எலி, தெனாலிராமன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் 24ஆம் புலிகேசியாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் சங்கர் இயக்குகிறார்.
யோகிபாபு:
தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை நாயகனாக வலம் வரும் யோகிபாபு. தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை தொடரான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் நடித்துத் திரைப்பயணத்தைத் தொடங்கியவர்.
யோகி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது பெயருக்கு முன் யோகி என சேர்த்துக் கொண்டு யோகி பாபு என தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.
பையா, கலகலப்பு, அட்டகத்தி, வேலாயுதம், சூதுகவ்வும், பட்டத்து யானை போன்ற படங்களில் நடித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தில் கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு அவரின் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து முதன்முதலில் கதாநாயகனாக ‘தர்மபிரபு’ அடுத்து ‘கூர்க்கா’ படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நாயகனாக இடம்பிடித்தார் யோகிபாபு.
– டி.வி.சோமு