Take a fresh look at your lifestyle.

மோடி வேடத்தில் நடிக்க மாட்டேன்!

நடிகர் சத்யராஜ் மறுப்பு

நடிகர் சத்யராஜ் தந்தை பெரியாரின் கொள்கைகளில் பற்றுக்கொண்டவர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியால் ‘இனமுரசு’ என்று அழைக்கப்படுபவர்.

பல பொது மேடைகளில் பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளையும் திராவிட இயக்கத்தின் சிறப்பையும் எடுத்துரைப்பவர்.

அதிலும், குறிப்பாக முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது, அரசின் சார்பில் 95 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பெரியாராக நடித்தவர்.

பல காட்சிகளில் பெரியாரின் உடல்மொழி எப்படி இருக்கவேண்டும் என்று, கலைஞர் அவர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

இப்படி தீவிர பெரியாரிஸ்ட்டாக தன்னை வெளிப்படுத்தும் சத்யராஜ், நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மோடியாக நடிக்கப் போகிறார் என்றும், இத்திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தயாராகப் போகிறது என்றும் செய்திகள் பரவின.

‘பெரியாரின் கொள்கைக்கு நேர்மாறான மோடியின் வேடமேற்றா சத்யராஜ் நடிக்கப் போகிறார்?’ என்று ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால், “பிரதமர் மோடி வேடத்தில் நடிக்கப்போவதாகப் பரவும் தகவல் வெறும் வதந்தி. நான் மோடி வேடத்தில் நடிக்கமாட்டேன். நான் ஒரு பெரியாரிஸ்ட்” என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார் நடிகர் சத்யராஜ்.

அதுசரி… ‘மோடி பயோபிக்’கில் மோடியைத் தவிர, சிறப்பாக வேறு யார் நடித்துவிட முடியும்?

நன்றி: முரசொலி