Take a fresh look at your lifestyle.

யாரும் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்!

அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்.சி

சமீபத்தில் விகடன் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி அவர்களுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது. அதில், சுந்தர்.சி தனது திரைவாழ்க்கை குறித்து பல அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

மணிவண்ணனிடன் உதவி இயக்குனராக இருந்தபோது நடந்ததாக அவர் சொன்ன ஒரு சம்பவம் கேட்பதற்கு அத்தனை சுவாரஸ்யமாகவும் நம்பிக்கைக் கொடுப்பதாகவும் இருந்தது.

கதை விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் இளைப்பாறுதலுக்காக மணிவண்ணன் தன்னுடைய உதவி இயக்குனர்களுடன் கிரிக்கெட் ஆடுவது வழக்கமாம். சுந்தர்.சி க்கும் கிரிக்கெட் பிடிக்கும் என்பதால் ஆர்வமாக ஆடுவாராம்.

ஒரு கதைவிவாதத்தின் போது அப்போது புதிதாக இயக்குனர் குழுவில் இணைந்திருந்த இராசு மதுரவனை மணிவண்ணன் கிரிக்கெட் ஆட அழைத்திருக்கிறார்.

‘நான் கதை எழுத, படம் எடுக்கத்தானே வந்திருக்கிறேன்..’ என்கிற தோரணையில் எனக்கு கிரிக்கெட்டெல்லாம் ஆட தெரியாது எனக் கூறியிருக்கிறார் மதுரவன்.

‘அப்ப டைரக்சன் மட்டும் என்ன உன் குலத்தொழிலா.. நாலு பந்த பொறுக்கி போட்டா எல்லாம் கத்துக்கலாம் வாய்ய்ய்ய்ய்யா…’ என தனது பாணியிலேயே நக்கலாக கூறி அவரை கிரிக்கெட் ஆட வைத்துவிட்டாராம்.

‘நாலு பந்த பொறுக்கி போட்டா எல்லாம் கத்துக்கலாம்..’ என மணிவண்ணன் அன்று கூறியதை என்னால் இன்று வரை மறக்கமுடியவில்லை என்கிறார் சுந்தர்.சி.

எவ்வளவு பெரிய விஷயத்தை போகிற போக்கில் அடித்து விட்டிருக்கிறார். இங்கே யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.

நன்றி: விஜே ஸ்ரீ ராம் & ஆனந்த விகடன்