‘ஜெயிலர்’, ‘லால்சலாம்’ படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டையன்’.
த.செ.ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இது ரஜினியின் 170 வது படமாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இதில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முதல் கட்டப் படப்பிடிப்பு, நெல்லை மாவட்டம் பணகுடி, சென்னை ஆகியப் பகுதிகளில் நடந்தது. இதன் பின்னர் ரஜினி – அமிதாப் பங்கேற்றக் காட்சிகள் மும்பையில் நடைபெற்றது.
அடுத்தகட்ட ‘ஷுட்டிங்’ ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்தது. இறுதி கட்டப் படப்பிடிப்பு, இப்போது ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘குறி வச்சாச்சு.. ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது..வேட்டைக்கு தயாராகுங்கள்’ என தெரிவித்துள்ளது.
இதற்கான பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த், கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் இருக்கும் இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ‘வேட்டையன்’ திரைப்படம், ஆயுத பூஜை விடுமுறையில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று ஒரு தரப்பு சொல்கிறது.
ஆனால் ரஜினி ரசிகர்களோ, தீபாவளிக்கு முதல் நாள் 30 ஆம் தேதி ‘வேட்டையன்’ ரிலீஸ் ஆகும் என தெரிவித்தனர்.
‘வேட்டையன்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில், ரஜினி தனது 171-வது படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
-பாப்பாங்குளம் பாரதி.