Take a fresh look at your lifestyle.

ரஜினி-171 போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘ஜெயிலர்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இது அவரது, 170-வது படம். ஏற்கனவே ரஜினியை வைத்து ‘தர்பார்’, ‘லால் சலாம்’ ஆகியப் படங்களைத் தயாரித்த லைகா நிறுவனம், இந்தப் படத்தை தயாரிக்கிறது.

‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

நெல்லை மாவட்டம் பணகுடி, சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் இதன் ‘ஷுட்டிங்’ நடைபெற்றது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர்.

இந்தப் படத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்கள், அடுத்த மாதம் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ரஜினிகாந்த் கையில், கோல்டு கலர் கடிகாரங்கள் செயினைப்போல பின்னப்பட்டு உள்ளன. ரஜினிக்கு பின்புறம் நேரம் காட்டும் கருவி இருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தப் படம் லோகேஷ் கனகராஜின், நெடுநாள் கனவான ‘இரும்புக் கை மாயாவி’ படமா? அல்லது ‘டைம் ட்ராவல்’ படமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

-பாப்பாங்குளம் பாரதி.