‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மானும், ‘நடனப்புயல்’ பிரபுதேவாவும் இணைந்த முதல் திரைப்படம் – ஜென்டில்மேன்’.
ரஹ்மானின் துள்ளல் இசையில் உருவான ‘சிக்கு புக்கு ரெயிலே’ பாடலுக்கு கவுதமியுடன் சேர்ந்து பிரபுதேவா ஆடிய ‘டான்ஸ்’ அந்தப் படத்துக்கு ஆரவாரமான நுழைவு வாயிலாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி உடனடியாக இணைந்த ‘காதலன்’ திரைப்படம், காதலர்களால் என்றும் கொண்டாடப்படும் படமாக உள்ளது.
‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேட்ஸ்’ என இந்தக் கூட்டணியில் வெளியானப் படங்களும், பாடல்களுக்கும் 90 களில் பெரிதும் பேசப்பட்டவை.
கடைசியாக 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மின்சார கனவு’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர்.
தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய படத்தை அறிமுக இயக்குநர் என்.எஸ். மனோஜ் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்கள் அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
‘இது, ரசிகர்கள் கொண்டாடும் வகையில், இனிமையான பாடல்களுடன் கூடிய, நகைச்சுவை படமாக இருக்கும். பிரபுதேவா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருவருமே இந்தப் படத்தில் இணைந்ததை ‘திரில்’ அனுபவமாக உணர்ந்தனர்’ என்கிறார் இயக்குநர், மனோஜ்.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 6-வது முறையாக இணைவதை குறிக்கும் வகையில் #ARRPD 6 என இந்தப் படத்துக்கு தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப்படம் தொடர்பான அறிவிப்பு போஸ்டரில், பிரபுதேவாவின் ‘முக்காலா முக்காபுலா’ பாடலின் நடன அசைவும், பின்னணியில் ஏ.ஆர். ரஹ்மானின் படமும் இருப்பது போல வடிவமைப்பட்டுள்ளது.
-பாப்பாங்குளம் பாரதி.