‘துணிவு’ படத்துக்கு பிறகு ஓராண்டு அரிதாரம் பூசாமல் இருந்த அஜித், ‘விடா முயற்சி’ படத்துக்காக, சில மாதங்களுக்கு முன்பு மேக்கப் போட்டுக்கொண்டார்.
மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றது.
பாதி ஷுட்டிங் நிறைவடைந்துள்ளது.
வேறொரு நாட்டில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில், சென்னையில் ஓய்வு எடுத்து வந்தார், அஜித்.
காது பக்கம் ஏற்பட்டிருந்த வீக்கத்துக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
விரைவில் ஷுட்டிங் கிளம்புவார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ‘பைக் டூர்’’ புறப்பட்டு போய் விட்டார்.
அவர் இப்போது மத்தியபிரதேச மாநிலத்தில் தனது குழுவினருடன் ‘பைக்’ பயணம் செய்து வருகிறார்.
‘விடா முயற்சி’யில் அஜித்துடன் நடிக்கும் ஆரவ் உள்ளிட்ட ‘பைக் ரைடர்ஸ்’ குழு அவருடன் ம.பி.யில் முகாமிட்டுள்ளது.
அங்கிருந்து அஜித் குழு, தினமும் சில போட்டோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறது.
‘பைக் டூர்’ சென்று விட்டு அஜித், ஓய்வு எடுக்கும் போட்டோ கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது.
புதன்கிழமை அஜித்தின் வேறு ஒரு போட்டோ ரிலீஸ் ஆனது.
பந்தயங்களில், விபத்து ஏற்படாமல் எப்படி ‘பைக்’ ஓட்டுவது, பயணத்தின் சூட்சுமங்கள் உள்ளிட்ட விவரங்களை தனது குழுவினருக்கு அஜித் விளக்கும் காட்சிகள் அந்த போட்டோவில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் நேற்றும் அஜித் தொடர்பான ஒரு ’சுவை’யான போட்டோ வெளியாகியுள்ளது.
முகாமில் தங்கியுள்ள அஜித், மணக்க மணக்க பிரியாணி சமையல் செய்யும் போட்டோதான், அது.
அஜித், பிரியாணி சமைப்பதை அவருடன் ’டூர்’ சென்ற நண்பர்கள், வியப்பாக பார்க்கும் காட்சி போட்டோவில் உள்ளது.
மத்தியபிரதேசத்தில் அஜித்தின் ‘பைக்‘ பயணம் ஒரு வார காலம் நீடிக்கும் என தெரிகிறது.
இதன் பின்னர் சென்னைக்கு திரும்பி, இங்கிருந்து, வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்வாரா அல்லது மத்தியபிரதேசத்தில் இருந்தே செல்வாரா என தெரியவில்லை.
‘விடா முயற்சி’ முடிந்ததும், ஜுன் மாதம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட்..பேட் ..அக்லி’படத்துக்கு அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
-பாப்பாங்குளம் பாரதி.