நடிகர் கவுண்டமணிக்கு 84 வயதாகிறது. இப்போதும் சுறு சுறுப்பாக இருக்கிறார். அவர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’.
இது, முழு நீள அரசியல் – நகைச்சுவை திரைப்படம். மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இந்தப் படத்தை விரைவில் வெளியிட ஆயத்தம் ஆகி வருகிறது, படத் தயாரிப்பு நிறுவனமான ‘சினி கிராஃப்ட் பிலிம்ஸ்’.
சென்னையில் உள்ள பரணி ஸ்டூடியோவில், ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் ‘டப்பிங்’ பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் ‘டப்பிங்’ பேசி படக்குழுவை பிரமிப்பில் ஆழ்த்தினார்.
பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடித்த ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, சிம்ரன் நடித்த ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை டைரக்டு செய்த சாய் ராஜகோபால், இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடித்துள்ளார். நடப்பு அரசியலை பேசும் இந்தப் படத்தில் தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும், அவருடன் இணைந்து யோகி பாபுவும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர, சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், ஆனந்த்பாபு மகன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், எஸ்.ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்ராயன், லேகாஸ்ரீ, டிகேஎஸ், சதீஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது.
கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி – யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படும் என்று தெரிவித்தார், இயக்குநர் சாய் ராஜகோபால்.
– பாப்பாங்குளம் பாரதி.