Take a fresh look at your lifestyle.

கடுமையான பயிற்சியில் ஈடுபடும் சூர்யா!

சூர்யா இப்போது சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றது. சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.

இதனைத் தொடர்ந்து அவர் சுதா கொங்கரா இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இது சூர்யாவின் 43 வது படம்.

சூர்யா – சுதா கூட்டணி, இதற்கு முன்னர் ‘சூரரைப் போற்று’ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்திருந்தது.

சூர்யாவின் புதிய படம் 1960 களில் தமிழகத்தை உலுக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கதைக்களமாகக் கொண்டு, உண்மை சம்பவங்களின் தொகுப்பாக உருவாக இருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

இதில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா நடிக்க உள்ளனர்.

படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ் குமார். அவர் இசையமைக்கும் 100வது படம் இது. ஜி.வி.பிரகாஷுக்கு முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது இதே கூட்டணியில் உருவான ‘சூரரைப் போற்று’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவராக நடிப்பதால், சூர்யா, தற்போது கடுமையான பயிற்சிகள் எடுத்து வருகிறார். உணவுக் கட்டுப்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் படத்தின் ஷுட்டிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் ஆரம்பமாகிறது.

எடையைக் குறைக்க பயிற்சி எடுத்து வருவதால், படப்பிடிப்பில் சூர்யா தாமதமாக கலந்துக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.