Take a fresh look at your lifestyle.

தீபாவளிப் படங்கள்: சாதாவா, சண்டை நடக்கும் கோதாவா?

தமிழ் சினிமாவுக்கும் தீபாவளிக்கும் காலகாலமாக மறக்க முடியாத பிணைப்பு உண்டு. தீபாவளி அன்று ஒரு சினிமாவுக்கு போவது இங்கு பாரம்பரிய சம்பிரதாயம். படங்களின் வெற்றிக்கு கூட தீபாவளி என்பது ஒரு அளவு கோல்.

ஹரிதாஸ் படத்தின் பெருமையாக சொல்லப்படும் வாக்கியமே , அது மூன்று தீபாவளிகளைக் கண்ட படம் என்பதுதான்.

முன்பெல்லாம் ஒரு தீபாவளி என்றால் பல ஹீரோக்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை களம் இறக்குவார்கள். அவை பலவும் வெற்றி பெறும்.

உதாரணமாக 1983 ஆம் ஆண்டு தீபாவளிக்கு சிவாஜியின் வெள்ளை ரோஜா, கமலின் தூங்காதே தம்பி தூங்காதே, ரஜினியின் தங்கமகன், டி.ராஜேந்தரின் தங்கைக்கோர் கீதம், தேவர் பிலிம்ஸின் அபூர்வ சகோதரிகள் என்று ஐந்து படங்கள் வெளியாகி ஐந்தும் வெற்றிப் படமாகின.

அப்போதெல்லாம் சினிமா மட்டுமே பிரதான பொழுதுபோக்காக இருந்தது ஒரு காரணம் என்றால் படங்களின் தரமும் ஒரு காரணம். இப்போது சினிமா முதன்மைப் பொழுதுபோக்காகவும் இல்லை. படங்களின் தரமும் சரி இல்லை.

இப்போது ஹீரோக்கள், தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, ஆயுத பூஜை இவைகளை ஆளுக்கு ஒன்றாக பிரித்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகிறது என்று பார்ப்போம்.

அதற்கு முன்பு ஓர் எச்சரிக்கையான முன்குறிப்பு.

முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அந்தப் படம் அந்த குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் போவதை பெரிய அவமானமாக நினைப்பார்கள்.

இப்போது அதெல்லாம் இல்லை. எந்த தேதிக்கு வேண்டுமானாலும் தள்ளிப் போடுவார்கள். காரணம் எப்போ யார் எந்தப் படத்தின் மீது வழக்குப் போடுவார்கள் என்பது தெரியாது.

அதே போல முன்பு எல்லாம் ஒரு படம் வருவதற்கு முன்பு இன்ன படம் இன்ன தேதியில் ரிலீஸ் ஆகிறது என்பது எல்லா ரசிகர்களுக்கும் தெரியும்படி விளம்பரப்படுத்தி டைம் கொடுத்து அப்புறம் ரிலீஸ் செய்வார்கள்.

இப்போது ஏதோ ராணுவ ரகசியம் போலவும், பரபரப்பான போக்குவரத்து சாலைக்குள் குறுக்கு சந்தில் இருந்து வந்து குபீர் என்று பாயும்டூ வீலர் போலவும் திடீர் திகீர் என்றெல்லாம் படங்கள் வருகின்றன.

எனவே இந்தப் பட்டியலில் இருந்து எப்போது எந்த படம் வெளியேறினாலும் அல்லது எந்தப் படம் புதிதாக உள்ளே வந்தாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

1. சீன்

சூர்யா தயாரித்துக் நாயகனாக நடிக்க, மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கும் ஆக்ஷன் காமெடி படம் இது.

இந்த இயக்குநர் முன்பே ரோமாஞ்சனம் என்ற மலையாள ஹாரர் காமெடி படத்தையும் ஆவேசம் என்ற மலையாள ஆக்ஷன் காமெடி படத்தையும் எடுத்தவர், அதற்கு முன்பு பைங்கிளி என்ற மலையாள காமெடி படத்துக்கு கதை வசனம் எழுதியவர், கோயம்புத்தூர்காரர்களை திருடர்களாக காட்டிய படம் அது.

பெங்களூரில் ஒரு பிரபல தொழிலதிபரின் பதிமூன்று வயது மகன் கடத்தப்படுகிறான். மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் நான்கு நபர்கள் சந்தேக வளையத்துக்குள் வருகிறார்கள்.

முன்னும் பின்னுமாக சம்பவங்களை பேசும் இந்தப் படம் அதில் உள்ள முரண்களையம் மீடியா அதை எப்படி சித்தரிக்கிறது என்பதையும் சொல்லி குற்றத்துக்கு பின்னால் உள்ள உண்மையைக் கொண்டு வருவதுதான் கதையாம்.

படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கும் நஸ்லின், பிரேமலு என்ற மலையாளப் படத்தில் ஹீரோவாக நடித்தவர்.

அதில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜு தமிழ் சினிமாவையே கட்டி ஆளும்போது, நஸ்லினுக்கு மட்டும் ஆசை இருக்காதா? தமிழ் சினிமா என்பதே மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், இந்தி வாலாக்கள் சம்பாதிக்கத்தானே.

பனிரெண்டு வருடம் முன்பு இயக்குனர் சற்குணத்தோடு சண்டை போட்டுவிட்டு தமிழ் சினிமாக்காரர்களை எல்லாம் கேவலமாக பேசி விட்டுப் போன மலையாள நடிகை நஸ்ரியாதான் இந்தப் படத்தில் கதாநாயகி. மலையாள நடிகர் லால் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மலையாளத்தில் முப்பது படங்களுக்கு இசையமைத்த மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவாளர் எடிட்டர் எல்லோரும் மலையாளிகள்.

அதாவது படத்தில் சூர்யாவைத் தவிர எல்லோரும் மலையாளிகள். ஆனந்தராஜ், ஜான் விஜய் என்று ஒரு சில தமிழ் நடிகர்கள் மட்டும் வலைவீசித் தேடினால் தட்டுப்படுகிறார்கள்.

2. மூக்குத்தி அம்மன் 2

நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து என்.ஜே.சரவணனோடு சேர்ந்து இயக்க 2020 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் மூக்குத்தி அம்மன்.

நாட்டுப்புற சிறு தெய்வங்களை கிண்டல் செய்யும் மேட்டுக்குடி மனோபாவத்தின் வெளிப்பாடே அந்தப் படம். மேலோட்டமாக கும்பிடுகிற மாதிரிபாவலா பண்ணி விட்டு உள்ளுக்குள் கிண்டல் செய்யும் பாணி! அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய கருப்பு படமும் அதே ரகம்தான்.

இந்த மூக்குத்தி அம்மன்2 படம் அதே வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகிறது.

அதே நயன்தாரா நடிக்க உடன் ஊர்வசி, யோகிபாபு, துனியா விஜய், ரெஜினா கஸாண்ட்ரா, மைனா நந்தினி, கருடா ராம், அபிநயா என்று பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் சுந்தர் சி-யின் இயக்கத்தில் வருகிறது. ஊர்வசியும் அபிநயாவும் முதல் பாகத்திலும் இருந்தார்கள்.

படையெடுத்து வரும் எதிரிகளிடமிருந்து ஒரு இளவரசனைக் காப்பாற்ற அவனது தாய் தன்னைத் தியாகம் செய்த பிறகு, அவனைக் காக்க மூக்குத்தி அம்மன் மீண்டும் வருகிறாள்.

இதற்காக மூக்குத்தி அம்மன் மர்மமான புதிய தீய சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டி இருக்கிறது என்பதுதான் படத்தி ஒன்லைன்.

அதாவது மேட்டுக்குடி மனோபாவத்தோடு மூக்குத்தி அம்மன் என்ற நாட்டுப்புற தெய்வத்தை ஆர்.ஜே.பாலாஜி கேவலப்படுத்தியகற்கு பதிலடியாக சுந்தர் சி இயக்கும் இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.

ஆரம்பத்தில் மூக்குத்தி அம்மனின் இரண்டாம் பாகமும் ஆர்.ஜே. பாலாஜி கைக்குதான் வந்திருக்கிறது. ஆனால் அவர் வேறு படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் கதை இயக்குனர் எல்லாம் மாறிவிட்டது. நல்ல வேளை.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய முதல் பாகம், நையாண்டி நகைச்சுவைப் படமாக அமைந்திருந்தது.

ஆனால், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, இயக்குனர் சுந்தர் சி ஒரு பிரம்மாண்டமான புராண-சாகச படமாக உருவாக்கியுள்ளார்.

2,000 ஆண்டுகளை உள்ளடக்கிய இதன் கதைக்களம், பழங்கால தெய்வீகக் கதைகளையும், நவீன காலத்து அமானுஷ்ய நிகழ்வுகளையும் இணைக்கிறது என்கிறார்கள்.

உள்ளூர் அதிகாரிகளையே அச்சமடையச் செய்யும் ஒரு அமானுஷ்யமான ஊருக்குள், துணிச்சலுடன் நுழையும் கண்டிப்பான காவல் அதிகாரியாகவும், மூக்குத்தி அம்மனாகவும் இரு வேடங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.

மர்மமான அரக்க சக்தியாக வரும் வலிமைமிக்க வில்லி கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். பிரமாண்டமான சண்டைக் காட்சிகளில் நயன்தாராவுடன் மோதுகிறார்.

பொதுவாக இந்த மாதிரி பக்திப் படங்கள் எடுக்கும்போது ‘படத்தின் முக்கியப் புள்ளி பக்தி பரவசமாக விரதம் இருந்தார் என்று செய்தி வருவது பரம்பரை வழக்கம். அதில் உண்மையும் உண்டு பொய்யும் உண்டு.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே நயன்தாரா கடுமையான ஆன்மீக விரதத்தைக் கடைப்பிடித்ததாகத் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் சொல்லி இருக்கிறார்.

₹100 கோடி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் பலம் CGI, VFX மற்றும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் என்கிறார்கள்.

3. ராமாயணா பார்ட் 1

ராமாயணக் கதைதான். பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக இந்தியில் எடுக்கிறார்கள். தமிழில் மொழி மாறி வருகிறது.

சுமார் பதினைந்து படங்களை இந்தியில் இயக்கி இருக்கும் நிதிஷ் திவாரி இயக்குகிறார்.

வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில்தான் எடுக்கிறோம் என்று சும்மா ‘கதை’ விடுகிறார்கள். சுத்தப் பொய்.

கம்பராமாயணம் இல்லாவிட்டால் ராமன் ஹீரோவோ, கடவுளோ இல்லை. வால்மீகி ராமாயணப்படி ராமன் சரயு நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒரு சாதாரண கேரக்டர்.

1987 ஆம் ஆண்டு ராமாயணம் டிவி சீரியலை எடுத்து இந்தியா முழுக்க பக்தி அலை பரவ விட்ட, தி கிரேட் ராமானந்த சாகரே சொல்லி விட்டார்:

“கம்பராமாயணம் இல்லை என்றால் ராமனுக்கு இவ்வளவு சிறப்பு கிடைத்திருக்காது. நான் பெரும்பாலும் ராமன் கேரக்டரைசேஷனுக்கு கம்ப ராமாயணத்தையே பயன்படுத்தினேன்” என்று.

படத்தில் ராமனாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். தவிர மஹா விஷ்ணு, பரசுராமராகவும் இவரே நடிக்கிறார்.

சீதையாக நம்ம சாய் பல்லவி. ஒரு தென்னிந்தியப் பெண்ணை சீதையாக போடுவதா என்று இந்தி வாலாக்கள் கொதிக்கிற தார் பேரலுக்குள் குதித்து நீச்சல் அடிக்கிறார்கள். சாய் பல்லவி பற்றி கேவலமாக எழுதுகிறார்கள். நிறைய பாடி ஷேமிங்.

“தக்காளி… படம் வரட்டும்டா. உங்களை எல்லாம் நடிப்புல அலற விடுறேன். சூடம், சாம்பிராணி வாங்கிட்டு வரிசையில் வருவீங்க பாருங்க.” என்று காத்திருக்கிறது சாய் பல்லவி செல்லம்.

ராவணனாக யஷ். இது அவருக்கு முதல் இந்திப் படம். ‘நான் சீதையா இருந்து யஷ் மாதிரி ராவணன் கிடைச்சா நான் ராமனையே போட்டுத் தள்ளுவேன்’ என்று சில கட்டற்ற பாலியல் சுதந்திரப் பெண்கள் சோஷியல் மீடியாவில் கிளுகிளுக்கிறார்கள்.

அனுமனாக சன்னி தியோல், கைகேயியாக லாரா தத்தா, மண்டோதரியாக காஜல் அகர்வால், சூர்ப்பனையாக ராகுல் பிரீத்சிங் (அடப்பாவிகளா!),

ஜடாயுவுக்கு குரல் கொடுப்பவராக அனுபம் கேர், வித்யுத்ஜிவாவாக விபேக் ஓபராய், விபீஷணாக நம்ம ஊர் ஹரிஷ் உத்தமன், ராவணனின் அம்மாவான கைகஷீயாக ஷோபனா என்று மாபெரும் நட்சத்திரக் கூட்டம் படத்தில்.

விபீஷணன் ரோலுக்கு விஜய் சேதுபதி பேசப்பட்டார் அப்புறம் மாறியது. ஜடாயுவுக்கு குரல் கொடுக்க அமிதாப் பச்சன் வருவார் என்றார்கள் அப்புறம் அதுவும் மாறியது.

அமெரிக்காவில் வாழும் ஜெர்மன் கம்போஸர் ஹேன்ஸ் ஃப்ளோரியன் ஸிம்மரோடு சேர்ந்து ஏ.ஆர். ரகுமானும் இசையமைக்கிறார்.

தமிழ்நாட்டு விநியோக உரிமை திங்க் ஸ்டுடியோஸ் கையில்.

மொத்தம் 59000 திரைகளில் படம் வெளியாகிறது. இந்தியாவில் 9000 தான். மற்றது எல்லாம் வெளியே.

மேற்கு வங்காளத்தில் இந்தப் படத்துக்கு டாக்ஸ் ஃபிரீ அறிவித்து இருக்கிறார் முதல்வர் சுவேந்து அதிகாரி.

பெங்களூர், ஹைதராபாத் வரை புரமோஷனுக்கு வந்தார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு பயபுள்ளையும் வரவில்லை.

ராவணன் சீதையைக் கடத்துவதில் இந்த முதல் பாகம் முடியும். இரண்டாவது பாகத்துக்கான வேலையை மார்ச் மாசமே ஆரம்பித்து விட்டார்கள்.

4. அப்பாக்குட்டி

விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள் நடிப்பில் இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் மூலம் புகழ்பெற்ற மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரில்லர், எமோஷனல், ஆக்ஷன் படம். தெலுங்கிலும் நானா குட்டி என்ற பெயரில் வெளிவருகிறது.

தீய சக்திகளால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து நேரிட்ட நிலையில், ஒரு பாசமுள்ள தந்தை, மோதல்களும் துரோகங்களும் நிறைந்த ஆபத்தான பாதாள உலகத்தை எதிர்த்துப் போராடி அவளைக் காப்பாற்றுவதுதான் படத்தின் கதை.

அண்மையில் தனது மகளை அநியாயமாக இழந்த விஜய் ஆண்டனிக்கு இது மிகப் பொருத்தமான கதைதானே?

ஒரு பலவீனமான, உணர்ச்சிகரமான தந்தை-மகள் உறவைச் சுற்றிப் பின்னப்பட்ட ஒரு கடுமையான திரில்லரின் இரட்டைத் தன்மைக்கு பொருத்தமாக அப்பாக்குட்டி என்ற பெயரை வைத்துள்ளதாக கூறுகிறார் மாறன்.

விஜய் ஆண்டனியின் சொந்த இசை நிறுவனமான விஜய் ஆண்டனி மியூசிக், படத்தின் ஆடியோ உரிமைகளை அதிகாரபூர்வமாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமைகளை 5 ஸ்டார் செந்தில் நிறுவனம் பெற்றுள்ளது.

படத்தின் பாடலான “அப்பா போல”, தந்தை-மகள் உறவின் உணர்வுப்பூர்வமான மைய அம்சத்தை வலுவாக முன்னிலைப்படுத்துகிறது.

இசையும் படத்தொகுப்பும் விஜய் ஆண்டனியே.

அக்டோபர் 16 ஆம் தேதியே ரிலீஸ் ஆவதாக இருந்து ஜெயிலர் 2 படம் காரணமாக தள்ளிப் போய் இப்போது இந்த தீபாவளி ரேஸில் தைரியமாக களம் இறங்குகிறது.

எப்படியோ இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

— சு. செந்தில்குமரன்