Take a fresh look at your lifestyle.

நிவாரணம் வாங்கிக் கொடுத்ததா ‘சட்டமும் நீதியும் 2’?

பருத்தி வீரன் சரவணன், வரலக்ஷ்மி சரத்குமார், லாவண்யா, கல்லூரி வினோத், ஆறு பாலா, பிரேம், கவிதா பாரதி நடிப்பில்,

பிரதீப் மரியானுடன் சேர்ந்து எழுதி பாலாஜி செல்வராஜ் இயக்கி, ஜீ 5 தளத்ததில் 23 ஆம் தேதி முதல் காணக் கிடைக்கும் தொடர்.

18 கிரியேட்டர்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரிப்பு. இதே தயாரிப்பாளர், நாயகன், இயக்குநர் கூட்டணியில் முதல் பாகம் சென்ற ஆண்டு வந்தது.

பார் கவுன்சில் தலைவரான பிரபல பெண் வழக்கறிஞரின் (வரலக்ஷ்மி சரத்குமார்) கணவரான உயர் போலீஸ் அதிகாரி (பிரேம்) துப்பாக்கியால் சுடப்பட்டு செத்திருக்க,

அவரைக் கொலை செய்ததாக ஆவடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள், போலீஸ் டிரைவர் (முறையே கவிதா பாரதி, ஆறுபாலா, கல்லூரி வினோத் உள்ளிட்டோர்) கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தாங்கள் குற்றவாளி இல்லை என்று அவர்கள் மறுக்க, கொல்லப்பட்டது பார் கவுன்சில் தலைவரின் கணவர் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதாடக் கூடாது என்று எல்லா வக்கீல்களும் முடிவு எடுக்கின்றனர்.

நோட்டரி பப்ளிக் ஆக இருப்பவரும், மகளின் திருமணம் உள்ளிட்ட விஷயங்களுக்கான பொருளாதாரச் சிக்கலில் இருப்பவரும் நேர்மையானவருமான சுந்தரமூர்த்தியிடம் (பருத்தி வீரன் சரவணன்),

குற்றம் சாட்டப்பட்டு ஜெயில்ல இருக்கும் ஒரு போலீஸ்காரரின் மனைவி வந்து, ”ஏழைகளுக்கு நீதி கிடைக்காதா?” என்று கேள்வி கேட்க, அவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்குகிறார் சுந்தரமூர்த்தி.

கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் அதிகார துஷ்பிரயோகங்கள், நேர்மையின்மை, அவருக்கும் அவரது மனைவியான பார் கவுன்சில் தலைவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது,

கொலையாளிகளாக கைது செய்யப்பட்டிருக்கும் (குற்றம் சாட்டப்பட்டிருக்கும்) போலீஸ்காரர்கள் தரப்பு குற்றங்கள்… என்று பன்முகச் சிக்கல் கொண்டதாக வழக்கு போகிறது.

நேர்மையான வக்கீலான சுந்தரமூர்த்தியை ஆரம்பத்தில் மிரட்டல், அப்புறம் பண ஆசை காட்டுதல் என்று விலைக்கு வாங்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

நடந்தது கொலையா? தற்கொலையா? கைது செய்யப்பட்டிருக்கும் போலீஸ்காரர்கள் குற்றவாளிகள்தானா? கொலை நடந்தது ஏன்? துடிப்பான பெண் உதவி வழக்கறிஞர் (லாவண்யா) துணையோடு சுந்தர மூர்த்தியால் அதை நிரூபிக்க முடிந்ததா? என்பதே இந்த குற்றமும் தண்டனையும் 2.

ஒரு பக்கம் சம்பவம் நடந்தது ஏன்? எதற்கு காண்பதற்கான காட்சிகள், இன்னொரு பக்கம் கோர்ட் விசாரணை என்று பரபரப்பாக போகும் தொடர் இது.

திரைக்கதையின் நான் லீனியர் போக்கு நன்றாக இருக்கிறது. சில இடங்களில் அட என்று பாராட்ட வைக்கிறது.

ஏழை மக்களுக்கு இன்னும் கோர்ட் ஒன்றுதான் புகலிடம் அங்கே பாரபட்சமில்லாமல் தொழில் ரிதியான வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு சட்டத்தின் வழியே நீதி வழங்கப்படும் என்ற அடிப்படைகே கருத்து பாராட்டுக்குரியது.

வாழ்த்துகள் பிரதீப் மரியான் & பாலாஜி செல்வராஜ்.

கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு காட்சிகளின் தேவைக்கு ஏற்ப நேர்த்தி காட்டுகிறது.

விபின் பாஸ்கரின் இசை, அதற்கு மோகன்ராஜ் எழுதி இருக்கும் பாடல்கள், அவற்றை இயக்குநர் பயன்படுத்தி இருக்கும் விதம் யாவும் சிறப்பு.

சராசரிக்கும் அப்பாற்பட்ட நான் லீனியர் கதை சொல்லலை மிகச் சிறப்பாக தொகுத்துக் கொடுக்கிறது ஆதீஸ்வரனின் படத் தொகுப்பு.

ஸ்மார்ட்டான கோர்ட் செட் மூலம் கவனிக்க வைக்கிறார் கலை இயக்குநர் பாவனா கோவர்தன்.

நேர்மையான வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக மிக இயல்பாக, சிறப்பாக, நிதானமாக, நடை உடை பாவனை, வசன உச்சரிப்பு என்று எல்லா வகையிலும் சிறப்பாக நடித்துள்ளார் சரவணன்.

வரலக்ஷ்மி சரத்குமார், லாவண்யா, ‘கல்லூரி’ வினோத், ஆறு பாலா, பிரேம், கவிதா பாரதி எல்லோரும் அவரவர் இயல்பில் நடித்துள்ளனர்.

கவனிக்க வைக்கிறார்கள் பவனும், ‘கல்லூரி’ வினோத்தும்.

பார்ப்பவர் தலைகளில் பாறாங்கல் வைக்காமல் ஒவ்வொரு எபிசோடும் இருபது நிமிடத்தில் முடிவது சந்தோசம்.

பெரிதாக மேக்கிங் இல்லாமல் எழுத்தின் பலத்தில் பயணிக்கும் சீரிஸ்களின் எபிசோடுகள் இவ்வளவுதான் இருக்க வேண்டும்.

மொத்த சீரிஸிலும் ரெண்டே ரெண்டு கெட்ட வார்த்தைதான்.

இப்படிப் பாராட்ட நிறைய விஷயங்கள் உண்டு.

பார்கவுன்சிலில் இருந்து சுந்தர மூர்த்தியை தூக்குவது, அடுத்த சீனிலேயே அதை வசனம் மூலம் புஸ்வானம் ஆக்குவது, பண ஆசை காட்டும் காட்சி… இவை எல்லாம் எபிசோட் முடிவுக்கு உதவுகிறதே தவிர சீரிஸின் விறுவிறுப்புக்கு உதவவில்லை.

இதுதான் கிளைமாக்ஸ் என்றால் சுந்தரமூர்த்திக்கு பண ஆசை காட்டும் காட்சி எதற்கு?

கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் பதினஞ்சே பேர், ரிசார்ட் பார்ட்டியில் இருபதே பேர், கல்யாண ரிசப்ஷன் காட்சியில் பத்தே பேர்… இவையெல்லாம் பட்ஜெட் பஞ்சத்தை சொல்லும் காட்சிகள்.

இவை கூட பரவாயில்லை.

படத்தில் செத்துப் போனவர்கள் மட்டுமல்ல, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட எல்லோருமே அயோக்கியர்கள்.

அவர்கள் செத்தால் நாம ஏன் வருத்தப்படணும்? பொண்டாட்டிகள் அழுவது மட்டுமே போதுமா? அரசியல்வாதிகள் பொண்டாட்டி(கள்) எல்லாம் அழாத அழுகையா?

என்ன செய்து இருக்கலாம்? 1

இந்தக் குற்றவாளிகளுக்குள் நடக்கும் அயோக்கிய சண்டையில் அந்த ரிசார்ட்டில் வேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளியும் மாட்டிக் கொண்டான். அவனும் கொலைக் குற்றவாளிகளில் ஒருவனாக ஜெயிலில் இருக்கிறான்.

நீ கொன்னுட்டு எங்க மேல பழி போடறயா என்று அவனை சக குற்றவாளி போலீஸ்காரர்களே கேட்கிறார்கள். நாங்கள் சொல்கிறபடிதான் சொல்ல வேண்டும் என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

அவன் மனைவி வந்து வக்கீல் சுந்தரமூர்த்தியிடம் கெஞ்சினாள், அழுதாள் என்று சொல்லி இருந்தால்… ஆடியன்ஸோடு இன்னும் கனெக்ட் ஆகி இருக்கும். கிரேட் மிஸ் 1

தீர்ப்பு வந்த உடனேயே எல்லாம் முடிந்த உணர்வு வந்து விடுகிறது. அதற்கு பிறகு அடுத்ததடுத்து இரண்டு எபிசோடுகள் வருவது எழுத்தில் நன்றாக இருந்தாலும் படமாகப் பார்க்கும்போது வால் முளைத்த கதையாக ஆகி விடுகிறது.

என்ன செய்து இருக்கலாம்? 2

கோர்ட்டில் தீர்ப்பு வாசித்த உடன், சுந்தரமூர்த்திக்கு ஒரு போன் வருகிறது என்று கோர்ட்டிலேயே எல்லாவற்றையும் கொண்டு வந்திருந்தால் அதிரி புதிரியாகி இருக்கும்.

படக்குழு ஆசைப்பட்டது போல இது நேரடியாகவே தியேட்டருக்குப் போக வேண்டிய படமாகவும் இருந்திருக்கும். கிரேட் மிஸ் 2.

எனினும் சட்டமும் நீதியும் 2 நிவாரணம் வாங்கிக் கொடுக்கும்.

— சு. செந்தில் குமரன்