Take a fresh look at your lifestyle.

தினமும் திட்டு வாங்கி அழுத முதல் ஹீரோயின்!

நடிகை ரேணுகாவின் அனுபவம்

‘அயன்’ படத்தில் சூர்யாவின் ‘அம்மா’வை மறக்க முடியாது. இதுபோன்ற, பக்கத்து வீட்டுப் பெண் மாதிரியான தோற்றத்தில், இயல்பான நடிப்பில் கவர்பவர் நடிகை ரேணுகா.

‘சம்சார சங்கீதம்’ படத்தில் அறிமுகமான இவர், ‘கல்கி’, ‘மகளிர் மட்டும்’, ‘தங்கைக்கு ஓர் தாலாட்டு’, ‘திருடா திருடா’, ‘தேவர் மகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

வெள்ளித்திரையுடன், சின்னத்திரையிலும் பிரகாசித்த ரேணுகா, பாலசந்தரின் ‘பிரேமி’ மற்றும் ‘கங்கா யமுனா சரஸ்வதி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஆகிய தொடர்களில் இல்லத்தரசிகளைக் கவர்ந்தார்.

இவர் ஒரு பாடகி என்பது பலருக்குத் தெரியாது.

தனது சினிமா தொடக்க காலம் குறித்து ரேணுகா முன்பு அளித்த பேட்டி…

“நான் எப்படி நடிகையாக மாறினேன் என்று இப்போதும் எனக்கு வியப்பாக இருக்கிறது. என்னுடைய சொந்த ஊர் திருச்சி, ஸ்ரீரங்கம்தான்.

அப்பா வக்கீல், நான் அப்போதே பி.ஏ. பொருளாதாரம் படிந்தேன்.

அப்பா திடீரென இறந்த பிறகு ஏற்பட்ட சூழ்நிலையால்தான் நாங்கள் சிறுவயதிலேயே வேலை தேடி சென்னைக்கு வந்தோம்.

அங்கே கோமல் சுவாமிநாதனின் குழுவில் நாடகக் கலைஞராக வேலைக்கு சேர்ந்தேன்.

அப்போது, தமிழ் நடிகைகள் என்றால் அந்த அளவுக்கு வரவேற்பு கிடையாது.

அந்த நேரத்தில் டி.ராஜேந்தர் சார் அவருடைய திரைப்படத்துக்கு கதாநாயகி தேடிக் கொண்டிருந்தார். அந்தப் படம்தான் ‘சம்சார சங்கீதம்’.

அந்தப் படத்துக்கு நான் தேர்வானேன். அதன் படப்பிடிப்பு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு போனது.

அப்போது, எனக்கு டயலாக் வரலைன்னு டி.ராஜேந்தர் கச்சாமுச்சான்னு திட்டுவாரு. அதனால நான் படப்பிடிப்பில் அழாத நாளே கிடையாது.

இப்ப இருக்கிற மாதிரி அப்ப எல்லாம் டிஜிட்டல் கிடையாது. அப்போ பக்கத்துலயே ‘கிர்’ என்று கேமரா சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும்.

டி.ராஜேந்தர் சார் ஒருமுறை சொல்லும் டயலாக்கும், மறுமுறை மாறிவிடும். அப்படி கஷ்டப்பட்டு பேசி முடித்து கடைசி நேரத்தில் பார்க்கும்போது, எனக்கே கஷ்டமாத்தான் இருந்தது.

இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்சு அழகா பேசி இருக்கலாம்னு தோணுச்சு. ஆனால், படமே முடிஞ்சு போன பின் என்ன செய்ய?

எப்படி இருந்தாலும், டி.ராஜேந்தர் சார் வேற லெவல் குருதான். அவரை யாராலும் அடிச்சுக்கவே முடியாது. அந்த அளவுக்கு எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுப்பார்.

அதற்கு முன்பு நான் எட்டு ஆண்டுகள் நாடகங்களில் நடித்திருக்கிறேன்.

குறிப்பாக, தண்ணீர் தண்ணீர், நள்ளிரவில் பெற்றோம், இருட்டிலே தேடாதீங்க போன்ற நாடகங்கள்.

நான் இந்தியா முழுக்க பல மேடைகளில் நடித்திருக்கிறேன்.

அதற்குப் பிறகு, எனக்கு பட்டர்பிளை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான்தான் அந்த விளம்பரத்தில் முதல் முதலாக நடித்தது.

இப்போதும் என்னுடைய போட்டோதான் அதன் விளம்பரத்தில் இருக்கிறது. அது எனக்கு சந்தோஷமாக உள்ளது.”