Take a fresh look at your lifestyle.

ஹைக்கூ: 3 வரிகளல்ல, 3333 வரிகள் கொண்ட கவிதை!

ஏகன், ஸ்ரீதேவி அப்பாலா, அறிமுகம் ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் நடிப்பில் ஹரிஹரன் ராமோடு சேர்ந்து எழுதி, யுவராஜ் சின்னசாமி இயக்கி இருக்கும் படம்.

ஹைக்கூ என்பது ஜப்பானிய இலக்கியத்தில் துவங்கிய மூன்று வரிகளில் முடியும் ஒரு கவிதை வடிவம்.

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோரின் தயாரிப்பு.

உலக அளவில் திருக்குறளுக்கு அடுத்தபடியாக குறைந்த வரிகள் கொண்ட செய்யுள் / கவிதை வடிவம் இது.

தான் படிக்கும் கல்லூரியில் லேடீஸ் டாய்லெட்டில் தவறாக நுழைந்த காரணத்துக்காக, கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறான் ஓர் இளைஞன் (ஏகன்).

நண்பர்கள் அவனுக்கு வேறு கல்லூரி தேட, நிகழ்வு ஆண்டு முதல் கோ எஜூகேஷனாக மாறி இருக்கும் பெண்கள் கல்லூரி ஒன்றுதான் கிடைக்கிறது. அங்கு இவன் ஒருவன்தான் மாணவன். மற்றவர்கள் எல்லாம் மாணவிகள்.

அங்கு படிக்கும் ஒரு பெண்ணுக்கும் (ஸ்ரீதேவி அப்பாலா) அவனுக்கும் காதல் வருகிறது. அந்த பெண்ணின் அப்பா சாதி வெறி பிடித்தவர். நாயகன் நாவிதர் சமூகம். அது ஒரு பிரச்சனை. படித்து முடித்த பின்னும் நாயகனுக்கு வேலை கிடைக்கவிலை என்பது இரண்டாவது பிரச்சனை.

இவை கூடப் பரவாயில்லை. காதலியின் அக்காவின் கணவன் காதலியை தவறாகப் பார்ப்பது பற்றி காதலனிடம் காதலி கூறுகிறாள். அதுவே பிரச்சனையாகிறது.

அக்கா, அக்காவின் கணவன், அவர்களது பிள்ளை ஆகியோரோடு அவள் எங்கு போனாலும் ‘உடன் போகக் கூடாது’ என்கிறான்.

தவிர்க்க முடியாமல் அவள் போனால் ”உன் மாமாவுக்கு நீ சம்மதம் சொல்லி விட்டாயா?” என்ற ரீதியில் பேச,

ஒரு நிலையில் அந்தக் காதல் முறிகிறது. அவள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறாள்.

இந்த நிலையில் அவனுக்கு வேலை கிடைத்து ஒரு ஐ.டி கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறான். அங்கு ஒரு பெண் (பெமினா ஜார்ஜ்) புதிதாக வேலைக்கு சேர்கிறாள்.

அவள் நகருக்கு தனியாக வந்து வேலை செய்த நிலையில் அவளுக்கு சில உதவிகள் செய்த ஒருவன், அதையே சாக்காக வைத்து காதலிப்பதாக சொல்ல, அவளும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள, காதல் என்ற பெயரில் அவன் அவளை ஆபீஸ் வேலையைக் கூட செய்ய விடாமல் அடித்து, மனோ ரீதியாக சித்திரவதை செய்து அடிமை போல் நடத்த,

அவளுக்கு நாயகன் உதவ, கொடுமைக்கார காதலன் விலக, நாயகனுக்கும் அவளுக்கும் காதல் வருகிறது.

ஒரு நிலையில் அவள் அவனிடம் பழைய காதலைப் பற்றிக் கேட்க அவன் சொல்ல, அவளுக்கு ஓர் உண்மை புரிகிறது.

அவனது பழைய காதலிக்கு என்ன பிடிக்குமோ அதையே அவன் இவளுக்கும் செய்வதும் பழைய காதலிக்கு என்ன எல்லாம் பிடிக்காதோ அதை எல்லாம் இவளுக்கு அவன் செய்யாததும், புதிய காதலிக்கு புரிய வருகிறது.

முதல் காதலியின் இன்னொரு ஜெராக்ஸ் ஆக அவன் தன்னை பார்ப்பதையும் தான் ஒரு டூப்ளிகேட் ஆக இருப்பதையும் விரும்பாத அவள் மனம் உடைகிறாள்.

மேலும் விவரங்களுக்கு இந்தப் புதிய காதலி நாயகனின் பழைய காதலியை பார்க்க,

தன்னை தனது முதல் காதலன் எப்படிக் கொடுமை செய்தனோ அதே ரீதியில் பழைய காதலியை நாயகன் கொடுமை செய்து இருப்பது புதிய காதலிக்குத் தெரிய வருகிறது.

அதேநேரம் பழைய காதலியின் சில பொருட்களை நாயகன் பொக்கிஷமாக வைத்திருப்பதும் புதிய காதலிக்கு தெரியவர, இருவரும் பிரிய, அப்புறம் என்ன ஆச்சு என்பதே படம்.

இந்தக் கதையைப் படித்து முடித்த உடனே ஒரு விஷயம் கவர்ந்திருக்கும். எஸ்! இரண்டாவது கதாநாயகியின் காதல் ஒரிஜினாலிட்டி பற்றிய குணாதிசயம். படத்தின் பெரும்பலம் அதுதான்.

படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகள் கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது. ‘நண்பேன்டா’ காட்சிகளையும் சிறப்பாக அமைத்து இருக்கிறார் இயக்குநர்.

சித்துகுமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம். சிறப்பாக செய்திருக்கிறார் சித்துகுமார்.

பிரயேஷ் குமாரின் ஒளிப்பதிவு, காட்சியின் உணர்வு உருவாக்கத்துக்குத் துணை நிற்கிறது.

பிரேம் கருத்தமலையின் கலை இயக்கமும் சிறப்பே.

ஒரு இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ள இளைஞனை, தனக்கு என்ன வருமோ அந்த வகையில் இயல்பாக பிரதிபலிக்கிறார் ஏகன்.

கதாநாயகிகள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நன்றாக நடித்து அசத்துகிறார்கள்.

தங்க முலாம் பூசிய பெரிய அப்பளம் மாதிரி ஜொலிக்கிறது ஸ்ரீதேவி அப்பலாவின் முகம். கொஞ்சம் அதிகமாக கிரீம் பூசிய வெண்ணிலா ஐஸ் கேக் மாதிரி இருக்கிறார் ஃபெமினா ஜார்ஜ்.

முன்னவருக்கு கன்னங்கள் அழகு என்றால் பின்னவருக்கு காலேஜ் ஹாஸ்ட்டல் பில்டிங் மாதிரி இருக்கிற முழுசான பல் வரிசை (மேக்கப் கொஞ்சம் அதிகம் இருப்பதால் கிரீம் அதிகம் பூசிய மாதிரி தெரிகிறது) சிறப்பு.

அதே நேரம் படத்தில் இவற்றைவிட அதிகமாக பிரச்சனைகளும் இருக்கிறது.

லேடீஸ் டாய்லெட்டுகுள் ஹீரோ வேண்டும் என்றே போகவில்லை. தெரியாமல் போய் விடுகிறான். அதற்கு எதற்கு கல்லூரியை விட்டு நீக்கும் தண்டனை?

தவிர நாயகனின் நண்பர்களுக்கு மட்டும் தெரியும் விஷயம் கல்லூரிக்கு தெரியும் விதமும் அர்த்தமில்லாமல் நாடகத்தனமாக இருக்கிறது.

மற்ற எந்தக் கல்லூரியிலும் அவனுக்கு சீட் கிடைக்காத நிலையில் பெண்கள் கல்லூரியில் அவனுக்கு சீட் கிடைக்கிறதாம். அது கூடப் பரவாயில்லை.

அந்த பெண்கள் கல்லூரி அந்த ஆண்டுதான் கோ எஜுகேஷன் கல்லூரியாக மாறி இருக்கிறதாம். அதனால் அவனைத் தவிர ஆண்கள் யாரும் அங்கே சேரவே இல்லையாம்.

ஒரு மகளிர் கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாறினால் அங்கே அட்மிஷன் வாங்க பசங்க குவிவார்கள் என்பது தெரியாதா? படக் குழுவில் அத்தனை இளைஞர்கள் இருந்தும் ஒருவருக்கு கூடவா இது தோன்றவில்லை.? அநியாயம்!

சரி அதை வைத்து ஏதாவது சுவையாக செய்வார்கள் என்று பார்த்தால் சுமாரான ஓரிரு காட்சிகளை தவிர, மற்றவை எல்லாம் சவசவ.

மகளிர் கல்லூரியில் படிக்கும் ஒரே ஒரு இளைஞன், அங்கே ஒரே ஒரு பெண்ணைத்தான் காதலித்தான் (பின்னாளில் அதுவும் புட்டுக்குது) என்று ஒரு கதை எழுதுவதற்கு பதில் சாப்பிட்டு தூங்கி இருக்கலாம் தம்பிகளா!

அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்தக் கல்லூரி விஷயமும் முடிந்து விடுகிறது. எனில் அந்த கதைப்போக்கு இந்தப் படத்துக்கு எதற்கு?

நீ ஒருவன் தான் இங்கே மாணவன் என்று நாயகனிடம் சொல்லும் அந்த இளம் டீச்சர் செம்மையாக இருந்தார் என்பதைத் தவிர்த்த்து விட்டுப் பார்த்தால், மகளிர் கல்லூரியில் படிக்கும் ஒரே ஒரு இளைஞன் என்ற அந்த மொத்த விஷயமும் படத்துக்கு தேவை இல்லாத ஆணிதான்.

ஆனால், அதைத்தான் டிரைலரில் படத்தின் முக்கிய விஷயம் போல சொன்னார்கள். தப்பான பாணி.

முதல் காதல் பிரிந்தது பற்றி இரண்டாம் காதலியிடம் சொன்ன நாயகன், ‘தான் முதல் காதலியை கொடுமைப்படுத்தியதை மட்டும் தன்னிடம் சொல்லாமல் மறைத்தான்’ – என்ற ஒரு விஷயமே இரண்டாம் காதலி விலகுவதற்கு போதுமானது.

எந்தக் கொடுமையால் நாம் நமது முதல் காதலனை பிரிந்தோமோ அதே கொடுமையை நாயகனும் அவனது முதல் காதலிக்கு செய்திருக்கிறான் என்ற விஷயம்தானே இரண்டாம் காதலி குரல் எழுப்ப வேண்டிய விஷயம்.

ஆனால் ‘இப்ப அவன் மாறி இருக்கலாம்’ என்று அதை ஜஸ்ட் லைக் தட் கடந்து போகிறார்கள்.

அப்போ இரண்டாம் காதலியின் முதல் காதலன் கூட நாளைக்கு மாறலாம். அப்புறம் ஏன் அவனை பிரியனும்?

இப்படி இரண்டாம் பகுதி முழுக்க சேம் சைடு கோல் போட்டுக் கும்மியடிக்கிறார்கள்.

இதுவே பிரச்சனை இல்லை என்றால் அதற்கு பின் எதுவுமே பெரிய பிரச்சனை இல்லையே?. படத்தை எதற்கு இழுக்கணும்?

விளைவாக, ஒரு நிலையில் திரைக்கதை என்னும் வண்டி பிரேக் டவுன் ஆகி நின்று விட, என்ன செய்வது என்று தெரியாமல் சும்மா மாண்டேஜ்களால் நேரம் கடத்துகிறார்கள். இதனால் சக்தி பிரனேஷின் படத்தொகுப்பும் பலமிழக்கிறது.

சரி அதுதான் போகட்டும். நாயகன் இரண்டாவது காதலியிடம் ஐ லவ் யூ சொல்ல, அவள் சிலிர்க்கும் அந்த ஒரு நொடியில் படத்தை முடித்திருந்தால்கூட நன்றாக இருந்திருக்கும். ஆனால்.. அப்போதும் முடிக்கவில்லை.

இந்த ஹைக்கூ – 3 வரிகள் அல்ல, 3333 வரிகள் கொண்ட கவிதை.

— சு. செந்தில்குமரன்