Take a fresh look at your lifestyle.

நல்ல படம் கண்டிப்பாக மக்களைச் சென்றடையும்!

'போகுமிடம் வெகுதூரமில்லை' இயக்குநர் நம்பிக்கை

கடந்த ஆகஸ்ட் மாதம் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடிப்பில் வெளியான படம், ‘போகுமிடம் வெகுதூர மில்லை.  இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்துடன் ரசிகர்களிடையே பாராட்டையும் பெற்றது.

ஓடிடி-யில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை அடுத்து, புதிய படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார், இயக்குநர் மைக்கேல் கே ராஜா.

இது குறித்து பேசிய மைக்கேல் கே ராஜா, “ஒரு நல்ல படம் மக்களைக் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். படம் வெளியானதுமே பார்த்துவிட்டு திரைத் துறையினர் பலர் பேசினார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி, 10 நிமிடம் பார்க்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், கதை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது. வாழ்த்துகள்’ என்றார்.

இயக்குநர் அகத்தியன் உட்பட பலர் பேசினார்கள். இது தியேட்டருக்கான படம் என்றாலும் ஓடிடி-யில் இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

ஓடிடி தளம் இல்லை என்றால் அடுத்த கட்டத்துக்கு நான் நகர்வது என்பது கடினமாகி இருக்கும்.

அடுத்து இயக்கும் படத்தை இன்னும் சிறப்பாகப் பண்ண வேண்டிய பொறுப்பை இந்தப் படத்துக்கான வரவேற்பு கொடுத்திருக்கிறது. அதனால் நிதானத்துடனும் கவனமாகவும் புதிய படத்துக்கான வேலையில் இறங்கி உள்ளேன்” என்றார்.