Take a fresh look at your lifestyle.

“பணம் இருக்கும் மனிதரிடம் – மனம் இருப்பதில்லை”!

திரைத் தெறிப்புகள் – 50:
*
வாழ்வின் வெற்றி என்பதைப் பொதுவாக எதை வைத்து எடைபோட நாம் பழகியிருக்கிறோம்.

ஒருவரிடம் சேரும் அளவுகடந்த சொத்தை வைத்தா? அல்லது அவரது புகழை வைத்தா? அல்லது அவரது கல்வித் தகுதி, அதிகாரப் பொறுப்பை வைத்தா?

இப்படிப் பல கேள்விகளை எழுப்ப வைத்திருக்கிறது கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடல்.

1962-ம் ஆண்டு வெளிவந்த ‘அன்னை’ திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பின்னணியில் பாடி, திரையில் ஆடி நடித்திருப்பவர் ஜே.பி. சந்திரபாபு.

சந்திரபாபு பாடிய பாடல்களில் மிகவும் ரசிக்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக இதைச் சொல்லலாம்.

தத்துவார்த்த ரீதியிலான பாடலாக இருந்தும், தன்னுடைய உடல் மொழியாலும், நடன அசைவுகளாலும் அமர்க்களப் படுத்தியிருப்பார் சந்திரபாபு.

“புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை….”

அதாவது, வெற்றி பெறுபவர்கள் அனைவருமே தாங்கள் வாழ்வதற்குப் பல தந்திரங்களைக் கையாளுகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது இந்தப் பாடல்.

“பணம் இருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை.
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை….”

என்கிற கவிஞரின் வரிகள் இன்றைக்கும் நம் கண்ணுக்கு முன்னால் உள்ள யதார்த்தம்.

பணம் ஒருசேரக் குவித்திருப்பவர்களிடம், தான் சம்பாதிக்கக் காரணமான மக்களுக்குச் சிறிதளவு கூட செலவழிக்க மனம் வருவதில்லை.

உதவுகிற மனம் இருப்பவர்களிடம் பணம் இருப்பதில்லை என்பதை, நம்மைச் சுற்றி வாழும் சமூகம் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

‘பணம் இருந்தால் மட்டும் சொந்தம்’ என்பதற்கான சொல்லுக்கு அர்த்தம் இருக்கிறது என்பதையும் சொல்லாமல் சொல்கின்றன இந்த வரிகள்.

“பணம் படைத்த வீட்டினிலே
வந்ததெல்லாம் சொந்தம்.
பணம் இல்லாத மனிதருக்கு
சொந்தமெல்லாம் துன்பம்…”

அடுத்தடுத்த வரிகள், குடும்ப அமைப்பின் முரண்களை மென்மையாகச் சொல்லியிருக்கின்றன.

“பருவம் வந்த அனைவருமே
காதல் கொள்வதில்லை.
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே
சேர்ந்து வாழ்வதில்லை.
சேர்ந்து வாழும் அனைவருமே
சேர்ந்து போவதில்லை.”

தொடர்ந்து, இரு பாலினத்தவர்களுக்கு இருக்கும் கனவுகளைப் பற்றிய வரிகளோடு நிறைவு பெறும் இந்தப் பாடலைத் தனக்கே உரித்தான லாவகமான தொனியில், கச்சிதமாகப் பாடியிருப்பார் சந்திரபாபு.

எப்போதாவது மனதில் சோர்வு தலை காட்டும்போது இந்தப் பாடலை ஒரு தடவைக் கேட்டுப் பாருங்கள்.

நம் மனதிலிந்து கருமேகம் நகர்வது நமக்கே தெரியும்.

*

– யூகி.