எம்ஜிஆருடன் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன் என மூன்று படங்களிலும், சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, வாணி ராணி உள்பட 10 படங்களிலும் நாயகியாக நடித்தவர் வாணிஸ்ரீ.
தவிர ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அன்றைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.
தெலுங்கு, கன்னட படங்கள் தனி. அறுபதுகளின் இறுதியிலிருந்து எழுதுபதுகளின் இறுதிவரை தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த வாணிஸ்ரீ துணை நடிகையாக வாழ்க்கையை தொடங்கியவர்.
நாயகிக்கு தோழியாக நடித்தவர்களில் 99.9 சதவீதம் பேர் அதுபோன்ற வேடங்களில் நடித்தே தங்கள் காலத்தை ஓட்டியாக வேண்டும்.
விதிவிலக்காக ஒன்றிரண்டு பேரே நாயகியாகி புகழ்பெறுவதுண்டு. வாணிஸ்ரீ அவர்களில் ஒருவர்
1972-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி வெளிவந்த வசந்த மாளிகை திரைப்படத்தினை டி.ராமாநாயுடு தயாரித்து கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கிருப்பார்.
இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா மற்றும் பலர் நடித்து இருப்பார்கள்.
இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இதில் ஆனந்த் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனும், லதா என்ற கேரக்டரில் வாணிஸ்ரீயும் நடித்திருப்பார்கள்.
பாடல்கள் அனைத்திலும் மகிழ்ச்சி, காதல், கொண்டாட்டம், ஏக்கம் போன்றவை சிவாஜியின் நடிப்பில் கலந்து கரைந்திருக்கும்.
பாடலிலும், நடிப்பிலும் வசந்த மாளிகை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய படைப்பு.
இது சிவாஜி மற்றும் வாணிஸ்ரீயின் சினிமா பயணத்தில் ஒரு மைல்கலாக அமைந்தது.
‘வசந்த மாளிகை’ படம் குறித்து நாயகி வாணிஶ்ரீயிடம் எடுக்கப்பட்ட பேட்டி.
வசந்த மாளிகை வாய்ப்பு எப்படி வந்தது?
வசந்த மாளிகை படத்துல நான் புக் ஆகுறப்போ எனக்கு 17 வயசு. படம் முடிஞ்சு ரிலீஸாகுறப்போ 18 வயசு. தெலுங்குல ‘பிரேம் நகர்’, தமிழ்ல ‘வசந்த மாளிகை’. ரெண்டு மொழியிலேயும் நான்தான் ஹீரோயின்.
தெலுங்குலயும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு அந்தப் படம். தமிழ்ல ‘வசந்த மாளிகை’ எடுக்கணும்னு நினைச்சப்போ ஜெயலலிதாவை ஹீரோயினா செலக்ட் பண்ணியிருக்காங்க.
ஆனா, துரதிர்ஷ்டவசமா ஜெயலலிதாவோட அம்மா அந்த நேரத்துல இறந்துபோயிட்டாங்க. அவங்க ஷூட்டிங் வருவாங்களோ, இல்லியோன்னு யோசிட்டு படத்தோட புரொடியூசர் ராமநாயுடு சார் என்னை நடிக்கக் கேட்டார்.
சிவாஜிங்கிற இமயமலைக்கு பக்கத்துல நான் ஒரு ஐஸ் கட்டியாச்சேன்னு பயந்தேன். தெலுங்குல நீதானேம்மா நடிச்சே. பயப்படமா நடின்னு உற்சாகப்படுத்தினார் ராமநாயுடு சார்.
எங்கம்மாவும், “ஒரு சாவித்திரி, ஒரு சரோஜாதேவி மாதிரி ஒரு வாணிஶ்ரீ தான். நீ யாருக்கும் குறைச்சல் கிடையாது. இந்த கேரக்டரை வாணிஶ்ரீ மாதிரி யாரும் பண்ண முடியாதுன்னு நீ சொல்ல வைக்கணும்னு” என்னை மோட்டிவேட் பண்ணாங்க. நானும் யெஸ் சொல்லிட்டேன்.
‘வசந்த மாளிகை’யில் அந்த ஹேர்ஸ்டைல் உங்க ஐடியாவா?
அந்தப் படம் கமிட்டான உடனே என்னோட நடிப்பு, என்னோட ஃபிகர், என்னோட மேக்கப், என்னோட ஹேர்ஸ்டைல், என்னோட புடவை, என்னோட டான்ஸுனு எல்லாத்துலேயும் வித்தியாசம் காட்டணும்னு 24 மணி நேரமும் யோசிச்சிருக்கேன். டான்ஸெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
அந்த நேரத்துல எனக்கு லவ் அஃபையர்ஸ் எதுவும் கிடையாது. போன்ல பேசிக்கிட்டே இருக்கிற பழக்கமும் என்கிட்ட இல்ல. ஸோ, என் நினைப்பு முழுக்க வசந்த மாளிகை, வசந்த மாளிகைதான்னு இருந்துச்சு.
அந்தப்படத்துல சொந்தக்குரல்லதான் பேசினீங்களா?
ஆமா… அந்தப்படத்துல என்னோட மேக்கப், டிரெஸ்ஸிங், ஹேர்ஸ்டைல் எல்லாம் எப்படி சக்ஸஸ் ஆச்சோ, அதே மாதிரி என்னோட தமிழ் பேசுற விதமும் சக்ஸஸ் ஆச்சு.
என் கேரக்டருக்கு நான்தான் குரல் கொடுப்பேன்னு ஆரம்பத்துலேயே சொல்லிடுவேன். மீறி டப்பிங்னு சொன்னா படமே வேண்டாம்னு சொல்லிடுவேன்.
சிவாஜி சார்கூட, ‘வாணி நிஜமா சொல்லு நீ தமிழ்ப்பொண்ணு தானே’ன்னு கேட்டிருக்கிறார்.
என்னோட தமிழைப் பார்த்து சிவாஜி சார் ஆச்சர்யப்பட்டார்ங்கிறது எவ்ளோ பெருமையான விஷயம்.
நெல்லூர் தமிழ்நாட்ல இருந்தப்போ தான் நான் பிறந்தேன். அப்போ நான் தமிழ்ப் பொண்ணுதானே.
‘உயர்ந்த மனிதன்’, ‘சிவகாமியின் செல்வன்’னு சிவாஜி சார்கூட நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். வாணிஶ்ரீ நரி முகத்துல முழிச்சிட்டு வந்திருக்கா. அதான் தொடர்ந்து லக் அடிக்குதுன்னு எல்லோரும் சொன்னாங்க.
என்னைப் பொறுத்தவரைக்கும் நான் சினிமாவுக்காகவே படைக்கப்பட்டேன். இந்த ஜென்மத்துல இல்ல… பல ஜென்மமா சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்பட்டு நடிகையாக முடியாம இறந்துப் போயிருப்பேன்னு நினைக்கிறேன்.
அதான், இந்த ஜென்மத்துல நடிகையாகிட்டேன். இதோ ‘வசந்த மாளிகை’ ரிலீஸாகி 52 வருஷம் கழிச்சு இப்போவும் அந்தப் படம் பற்றி எல்லாரும் பேசுறது எவ்ளோ பெரிய கொடுப்பினை” என்கிறார் வாணிஶ்ரீ நெகிழ்ச்சியாக.
ஆ. சாந்தி கணேஷ்
நன்றி : விகடன்