சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், டிராவிட் செல்வம், தேவதர்ஷினி, சதீஷ் நடிப்பில், ராகவ் மிர்தாத் எழுதி இயக்கி இருக்கும் படம். ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் சார்பில் ஜி.எம்.மோர்கன் தயாரிப்பு.
டிரோன் என்றால் பறக்கும் கேமரா என்பது எல்லோருக்கும் தெரியும். ஆண் தேனீ என்றும் அதற்கு ஒரு பொருள் உண்டு. இரண்டுக்கும் பொருத்தமாக படத்துக்கு பெயர் வைத்துள்ளார்கள்.
‘ஜெயிலர்’ படத்துடன் ரிலீஸ் ஆகி இருப்பதால் கவனம் பெறும் படம் இது.
கல்லூரி மாணவர்கள் மூவர் (டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே.தீபக்) கல்லூரிக்கு வெளியே சுற்றி, போலீசிடம் மாட்டிக் கொள்ள, கல்லூரியில் இருந்து பத்து நாள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்.
விஷயம் வீட்டுக்கு தெரியாமல் இருப்பதற்காக, அந்த நாட்களில் அவர்கள் வெளியே தங்க நினைக்க, அவர்களை ‘பிளாக் ஹோல்’ (Block Hole) என்ற வீட்டுக்குள் அனுப்பும் ஒருவன், அங்கே இருக்கும் விஞ்ஞானியிடம் “இவர்களைப் பயன்படுத்தி என்ன ஆராய்ச்சி வேண்டுமானாலும் செய்துகொள்” என்று சொல்லி விடுகிறான்.
மேற்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் (சதீஷ்) பல ஆண்டுகளாக கல்யாணம் செய்ய பெண் தேடுகிறார்.
”நீங்கள் மனப்பூர்வமாக ஒரு பெண்ணிடம் காதலைச் சொன்னால் அந்த பெண் உடனே இறந்து விடுவாள்” என்று அவரிடம் ஒரு ஜோசியர் சொல்லி இருக்கிறார்.
உணர்வுகளுடன் கூடிய பெண் ரோபோவை உருவாக்கி பெரும் பணத்துக்கு விற்று ஆண்களோடு வாழ வைத்து பணம் சம்பாதிக்க அந்த விஞ்ஞானிக்கு ஆசை.
பிளாக் ஹோல் வீட்டுக்குள் போன கல்லூரி மாணவர்கள் தாமாக வெளியே வர முடியாத நிலை.
இருவரில் ஒருவன் மீது (டிராவிட் செல்வம்) உடனிருக்கும் கல்லூரித் தோழிக்கு (அஞ்சலி நாயர்) காதல். 
ஆனால், அவளது கருப்பு நிறம் காரணமாக அவளை கருப்பட்டி என்று அழைக்கிறான். அவனுக்கு அவள் மேல் காதல் எல்லாம் இல்லை.
பிளாக் ஹோல் வீட்டுக்குள் இருக்கும் டிரோன் ஒன்றை, அந்த காதலிக்கப்படும் நபர் இயக்க, அது ஒரு பாழடைந்த வீட்டுக்குள் இருக்கும் ஓர் அழகான பெண்ணை (சித்தி இத்னானி) காட்ட, அவள் மேல் அவனுக்கு காதல் வருகிறது. விஞ்ஞானி உருவாக்கும் பெண் ரோபோவுக்கு இவளுக்கு ஒரே தோற்றம்.
தான் விரும்பும் காதலன் வேறொரு பெண்ணை காதலிப்பதில் ஒருதலைக் காதல் தோழிக்கு வருத்தம்.
ஒரு நிலையில் அந்தக் காதலன் பிளாக் ஹோல் (Block Hole) வீட்டுக்குள் இருந்து வெளியேற வழி கண்டுபிடித்து ரகசியமாக வெளியேறி காதலியை சந்திக்கப் போகிறான். காதலி அவளது சூனியக்கார பாட்டியின் (தேவதர்ஷினி) பிடியில் இருக்கிறாள்.
”வயதானாலும் அழகு போனாலும் என் தோல் சுருங்கினாலும் உன் காதல் மாறாமல் இருக்குமா?” என்று காதலி கேட்க, அவனும் சம்மதிக்க, அப்போது ஒரு திடீர் திருப்பம்.
காதலியும் சூனியக்கார பாட்டியும் ஒரே நபர்தான். பெண்ணை உடல் அழகை வைத்து காதலிக்காமல் மனப்பூர்வமாக காதலிக்கும் நபருக்காக ஆறாயிரம் ஆண்டுகளாக காத்திருக்கும் கறுப்பு நிறப் பெண் அவள்.
அழகிய தோற்றத்தில் இளைஞர்களைக் கவர்ந்து, “வயதானாலும் அழகு போனாலும் என் தோல் சுருங்கினாலும் உன் காதல் மாறாமல் இருக்குமா?” என்று கேட்டு,
அப்போது தலையாட்டி விட்டு உண்மையான உருவத்தை காட்டியதும் பின் வாங்கும் நபர்களை எல்லாம், அவள் பொம்மைகளாக மாற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வீட்டில் தொங்கவிட்டு இருக்கிறாள்.
அவளிடம் இவனும் சிக்கிக் கொள்ள, அவனைத் தேடி பிளாக் ஹோல் வீட்டுக்குள் இருக்கும் நண்பன் வர, அவனும் சூனியக்காரியின் போலி இளவயது அழகில் மயங்கி காதல் போதையில் உளறி மாட்டிக் கொள்கிறான். இன்ஸ்பெக்டரும் வந்து மாட்டிக் கொள்கிறார்.
நண்பர்களைக் காப்பாற்ற ஒருதலைக் காதல் தோழி அங்கு வருகிறாள். பெரும் சண்டைக்கு பிறகு சூனியக்காரிக்கும் ஒருதலைக் காதல் தோழிக்கும் இருக்கும் ஓர் ஒற்றுமை ஓர் எதிர்பாராத திருப்பத்தை உருவாக்க, நடந்தது என்ன என்பதே படம்.
ஒரு பிரபலமான குட்டிக்கதை உண்டு.

பயண வழிப்பாதையில் ஒருவன் ஒரு வீட்டில் அழகான பெண்ணை சந்தித்து காதலிக்கிறான்.
ஆனால், அவள் பனிரெண்டு மணி நேரம் அழகியாகவும் பனிரெண்டு மணி நேரம் வயது மிகவும் முதிர்ந்த தோல் சுருங்கிய பெண்ணாகவும் இருப்பாள். எனினும் அவனுக்கு காதல் மாறவில்லை. கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான்.
அவள் அவனிடம் ”என்னோடு நீ இரவில் மட்டுமே உறவு வைத்துக் கொள்ள முடியும்; நான் இரவில் அழகிய இளம்பெண்ணாக இருந்தால் பகலில் கிழவியாக இருப்பேன். என்னை உன் மனைவி என்று ஊர் உலகத்தில் எல்லோரிடமும் சொல்ல வேண்டும். பகலில் அழகாக இருக்க வேண்டும் என்றால் இரவில் சூனியக்கார கிழவியாக இருப்பேன். எது வேண்டும் சொல்” என்று கேட்பாள்.
இரவில் அழகிய பெண்ணாக இருந்தால் பகலில் மானம் போகும். பகலில் அழகிய பெண்ணாக இருந்தால் தாம்பத்யம் நடக்காது.
ஒரு நிலையில் அவன், “எப்போது இளம் பெண்ணாக இருக்க வேண்டும் . எப்போது கிழவியாக இருக்க வேண்டும் ‘என்பதை நீயே முடிவு செய்து கொள். உன் உடல்; உன் தோற்றம்; உன் உரிமை” என்பான்.
உடனே அவள், “எப்போது நீ ஆண் என்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளாமல் முடிவெடுக்கும் உரிமையை எனக்கே கொடுத்தாயோ, அப்போதே நான் எப்போதும் இளம் பெண்ணாக இருப்பேன்” என்று முடிவு செய்வாள்; அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பது கதை.
இந்தக் கதையில் இருந்து இன்ஸ்பயர் ஆகி இந்தப் படத்தை எழுதி இருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.
மிகச் சாதாரணமாக துவங்கி நாடகத்தனமான காட்சிகள் ஓவர் ஆக்டிங், எப்போதாவது சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள் என்று போனாலும் இன்னொரு பக்கம் ஃபேண்டஸி விஷயங்கள்.
ஆஸ்ட்ரோ பிசிக்ஸ், ரோபோ உலகம் என்று படம் போகிறது. இடைவேளை சமயத்தில் சிக்கிக்கிட்டமோ என்ற உணர்வு வந்தது நிஜம்.
ஆனால், இரண்டாவது பகுதியில் படம் எழுந்து உட்காருகிறது. அதிலும் கடைசி அரை மணி நேரம் அருமை.
வித்தியாசமாக முயன்று இருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத். கிளைமாக்ஸை அட்டகாசமாக எழுதி இருக்கிறார்.
அந்த ஏரியாவில் வசனங்களும் அபாரம். தன்னிடம் சிக்கியவர்களை சூனியக்காரி அடைத்து வைக்கும் காடு, மலை, பங்களா எல்லாம் அவளது வீட்டில் மினியேச்சர் வடிவங்களாக இருப்பது சிறப்பான கற்பனை.

ஆனால், படத்தின் ஆரம்பம் முதலே அந்த அக்கறை, நேர்த்தி இருந்திருக்க வேண்டும்.
ஹரியின் இசையில் ‘நான் டெர்ரரு (terror), நீ எர்ரரு (error) பாடல் மற்றும் பின்னணி இசை இரண்டும் கவனிக்க வைக்கிறது.
ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.
ஆர் கிஷோரின் கலை இயக்கம் படத்துக்கு பெரிய பலம். ஆனால், அவரது தயாரிப்பு வடிவமைப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
அந்த டிரோன் பார்ப்பதற்கு ஏதோ பறந்து வருகிற, தட்டு இட்லி மாதிரி சொதப்பலாக இருந்தாலும் பொதுவில் பால்கன் கவுதமின் வி எஃப் எக்ஸும் பாராட்டுக்குரியது.
சூனியக்காரி மற்றும் அழகிய இளம்பெண் இருவருக்குமான ஹர்ஷிகா ரமேஷின் ஆடை அணிகலன் வடிவமைப்பு அருமை. மதினா கிரிபாபுவின் மேக்கப்பும் சிறப்பு.
ஆனால், சில காட்சிகளில் மேக்கப்பில் சிதி இத்னானியை கைவிட்டு இருக்கிறார்கள்.
பாலாஜியின் வண்ணப் பயன்பாடு மிக சிறப்பு.
ஹரிஷின் ஒலிப்பதிவியல், அருண் மணியின் ஒலி வடிவமைப்பு இரண்டும் மிக சிறப்பு.
தான் கருப்பு என்பதால், தான் காதலிக்கும் நண்பன் தன்னை புறக்கணிப்பதை அறிந்து, கண்ணாடி முன் நின்று ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டு தனக்கு தானே புத்தி சொல்லிக் கொள்ளும் காட்சி முதல், கடைசி காட்சி வரை நடிப்பில் பின்னி இருக்கிறார் அஞ்சலி நாயர்.
கேஷுவல் உடல் மொழிகள், ஏக்கப் பார்வை, உடைந்து உருகி மீண்டும் இறுகிச் சேர்வது என்று அசத்தி இருக்கிறார்.
கன்னக்குழி விழும் பால் வண்ண அழகுச் சிலையாக மட்டுமின்றி சில காட்சிகளில் மிரட்டும் சொரேர் முகபாவனைகளிலும் கவர்கிறார் சித்தி இத்னானி.
சூனியக்காரியாக சும்மா அதிர வைக்கிறார் தேவதர்ஷினி. மிரட்டல், கோபம், ஆங்காரம், ஏக்கம், கண்ணீர் என்று ஆக்ரோஷமாக நடித்து சூனியக்காரியை சிறப்பாக உணர வைக்கிறார்.
இப்படி நடிகைகள் எல்லாம் படத்தில் வீடு கட்டி விளையாடி இருக்க, நடிகர்கள் எல்லாம் ஜஸ்ட் வசனம் பேசி விட்டுப் போகிறார்கள்.
அதுவும் டைரக்டர் ஆக்ஷன் சொன்னதும் ஒரு சிலருக்கு உடம்பில் சரக்கென்று மின்சாரம் பாய்வதை நாமே உணர முடிகிறது. எனினும் அனைவரும் புதுமுகங்கள் என்பதால் பரவாயில்லை.
அதே நேரம் காதல், மிரட்டல் என்று போகும் படம் கடைசியில் எடுக்கும் திருப்பம், அதில் உள்ள உயரிய சிந்தனை, சமூக சிந்தனை மனதுக்குள் ஒரு நெகிழ்வையும் இந்தப் படத்துக்கு ஒரு மரியாதையான உயரத்தையும் தருகிறது.
அந்த ஏரியாவில் ராணித் தேனீ போலவும் சிறப்பான உயரத்திலும் பறக்கிறது இந்த டிரோன்ஸ்.
ட்ரோன்ஸ். ஸ்டார்டிங் டிரபுள். ஆனால், ஃபைனலாக பாஸ்.
— சு. செந்தில்குமரன்
