Take a fresh look at your lifestyle.

என்றைக்கும் உங்களுக்கு நான் பழைய ரஜினி தான்!

கே.பாலசந்தரிடம் நெகிழ்ந்த ரஜினி!

திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்ட சமயம் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மகளான புஷ்பா கந்தசாமி அளித்த நேர்காணல்.

***
“அப்பாவுக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும். அப்படி அவருக்குப் பிடித்தவர்களில் ஒருவர் ‘ரஜினிகாந்த்’ – நினைவுகளின் பரவசத்தோடு சொல்கிறார் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மகளான புஷ்பா கந்தசாமி.

“அவரை முதலில் நான் பார்த்தப்போ எனக்குப் பதினைஞ்சு வயசிருக்கும். ‘அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தது. கமலோடு சேர்ந்து பல புதிய படங்களை அப்பா பண்ணிக்கிட்டிருந்த நேரம் அது.

வித்தியாசமான படங்களை அப்பா பண்ணிக்கிட்டிருந்தார். ரஜினியைப் பற்றி அப்பா வீட்டில் பேசிக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது.

ஒரு புதுமுகம் வந்திருக்கார். அப்பாவுக்கு அவரைப் பிடிச்சிருக்குன்னு யூனிட்டில் இருக்கிறவர்களும் பேசிக்கிட்டிருந்தாங்க.

மார்ச் மாதம் ஹோலிப் பண்டிகை கொண்டாடுற ஒரு நாளில் தான் சிவாஜி ராவ்ங்கிற பெயரை ‘ரஜினிகாந்த்’ன்னு மாத்தி வைச்சார் அப்பா.

அப்போ இருந்து மார்ச் மாசம் அந்த நாளில் எங்க வீட்டுக்கு வந்து அப்பா கிட்டே ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போறதை வழக்கமா வைச்சிருந்தார் ரஜினி.

அபூர்வ ராகங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை முதலில் பார்த்தேன்.

அவுட்டோரில் புதுவீட்டில் அவர் கதவைத் திறந்துட்டு வர்ற ஷாட். அதுவே ஒரு ‘கிளாசிக் ஷாட்’டைப் போல அமைஞ்சிருச்சு.

அப்பா ரஜினியை வைச்சு ஏதோ மேஜிக் கிரியேட் பண்ணப் போறார்ன்னு மட்டும் தெரிஞ்சது.

ரஜினியை நடிக்க வைக்கிறதுக்கு முன்னாலே அவரை நடிக்கச் சொல்லி அப்பா கேட்டப்போ அதில் சிவாஜி சாரோட நடிப்புச் சாயல் இருந்திருக்கு.

“ஏற்கனவே ஒரு சிவாஜி பிரமாதமாப் பண்றார். நீயும் அவரை மாதிரிப் பண்ணாதே. உன்னோட ஒரிஜினல் இயல்புபடி நீ பண்ணு. அது தான் சரியா இருக்கும்’’ன்னு சொல்லியிருக்கார் அப்பா.

அடுத்து ‘மூன்று முடிச்சு’ படம். அதில் ரஜினி ஒரு ஸ்டைலிஷான வில்லன். அப்போ நல்லா புஷ்டியாகவும், ஸ்மார்ட்டாகவும் இருப்பார் ரஜினி.

சிகரெட்டைத் தூக்கிப் போடுற ஸீன் எல்லாம் இருந்துச்சு. கமல், ஸ்ரீதேவி எல்லாரும் நடிச்சிருந்தாலும் ரஜினியோட ‘ஆன்ட்டீ ஹீரோ’ நடிப்பு வித்தியாசமா இருக்கும்.

அந்தப் படம் வந்தால் ஒரே நாளில் ரஜினி அவ்வளவு தூரம் பாப்புலர் ஆகிவிடுவார்ன்னு நம்பினார் அப்பா. அதே மாதிரி தான் நடந்துச்சு. ரஜினி பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அப்பாவுடன் அடுத்து ‘அவர்கள்’ படம் பண்ணினார். ஸேடிசமான கேரக்டர் அதில். அதையும் நல்லாப் பண்ணியிருந்தார்.

ஏறத்தாழ வில்லனைப் போன்ற ரோல்களில் தான் ரஜினி நடிப்பாரா என்கிற இமேஜ் இருந்த நேரம். அதை மாற்றுவதற்காவே ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினியை மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைத்தார் அப்பா.

மீசையை எடுத்து காமெடியாக டபுள் ரோல் பண்ணினது நல்லா இருக்கும். தனக்கு காமெடி வருமா? மீசை எடுத்தால் அது எடுபடுமான்னு எல்லாம் தயங்கியிருக்கார் ரஜினி.

அப்பா “கண்டிப்பா உனக்கு காமெடி நல்லா வரும்’’னு நம்பிக்கைக் கொடுத்து நடிக்க வைச்சிருக்கார்.

அவர் மீசையை எடுக்கிறப்போ படுற பாட்டைப் படத்திலேயே காட்டியிருப்பாங்க. ரஜினியோட ரியாக்சன் தமாஷா இருக்கும். அந்தப் படமும் வெற்றி.

பிறகு ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘பைரவி’ன்னு பல படங்கள் வந்துருச்சு. ‘முள்ளும் மலரும்’ வந்து பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டது.

‘தப்புத் தாளங்கள்’ படத்தில் நடிக்க அப்பா கூப்பிட்டப்போ எந்தத் தயக்கமும் காட்டாம உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அப்போ அவர் பிரபலமாகி விட்டார். படப்பிடிப்புத் தளத்தில் முன்பு மாதிரி ரஜினியைக் கூப்பிடுறதா, இல்லை புதிசா மரியாதை காட்டுறதான்னு ஒரு தயக்கம் அப்பாவுக்கு இருந்திருக்கு.

நடிக்க வைக்கும்போது முன்பு மாதிரித் திட்ட முடியுமான்னு ஒரு சந்தேகமும் இருந்துருக்கு. நேரே ரஜினி கிட்டேயே அதைக் கேட்டிருக்கார்.

“என்ன ரஜினி.. இப்போ பாப்புலராயிட்டே. வளர்ந்துட்டே. நான் முன்னே மாதிரி உன்னைத் திட்ட முடியுமா?.’’

“என்ன சார்.. என்றைக்கும் எப்பவும் உங்களுக்கு நான் பழைய ரஜினி தான் சார்.. நீங்க எப்பவும் போல என்கிட்டே இருக்கணும் சார்’’ன்னு ரஜினி சொன்னப்போ அப்பா நெகிழ்ந்து கண் கலங்கிப் போயிருக்கார்.

முதலில் இருந்து அப்பாவுடைய கடைசிக்காலம் வரை இருவருக்கும் இடையிலான ‘ரிலேசன்ஷிப்’ அப்படித்தான் இருந்துச்சு.

‘அவள் ஒரு தொடர்கதை’ தெலுங்கில் அப்பா எடுத்தபோது அதில் ரஜினி ஒரு ரோலில் நடித்தார். ‘அக்னி சாட்சி’ படத்தில் சின்ன ரோலில் நடிச்சிருப்பார்.

அதுக்கப்புறம் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்ச பிறகு அதில் நடிக்க ஆரம்பிச்சார். ‘நெற்றிக்கண்’ முதல் படம். விசு இயக்கினார்.

பிறகு புதுக்கவிதை, வேலைக்காரன், சிவா என்று அடுத்தடுத்து எங்க பேனரில் நடித்தார். ‘அண்ணாமலை’யும் எங்க பேனரில் நடிச்ச படம் தான். ரஜினிக்குப் பெரும் புகழைக் கொடுத்த படம். அதிலே இருந்து தான் அவருடைய ‘கேரியர்’ மாற ஆரம்பிச்சது.

அந்தச் சமயத்தில் நிர்வாகப் பொறுப்பில் நான் தலையிட்டிருந்தேன். எங்களோட படத் தயாரிப்பு குறித்த நேரத்தில், குறித்த ஷெட்யூலில் முடிந்துவிட வேண்டும் என்பதில் அப்பா கவனமாக இருப்பார்.

ஷூட்டிங் ரஜினியால் பாதிக்கப்பட்டது என்கிற நிலைமை எப்போதும் வந்ததில்லை. சரியான ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவார் ரஜினி.

சிவாஜி கார்டனில் ‘முத்து’ படம் ஷூட்டிங். அது எங்களோட தயாரிப்பு. ரஜினி சார், நான் எல்லோரும் உள்ளே உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கோம்.

தீடீர்னு பேசிக்கிட்டிருந்த ரஜினி எழுந்து நிக்க ஆரம்பிச்சுட்டார்.

என்னன்னு நாங்க புரியாம பார்த்தால் தூரத்தில் காரில் இருந்து அப்பா இறங்கிக்கிட்டிருந்தார். “டைரக்டர் வந்துட்டார்”ன்னு அதுக்குள் எழுந்துட்டார் ரஜினி. அந்த அளவுக்கு அப்பா மேலே பிரியம் வைச்சிருந்தார்.

எங்க பேனரில் அவர் நடிச்சப்போ அடிக்கடி எங்களிடம் “அப்பாவுக்கு ஓ.கே.வா?’’ன்னு கேட்டுக்கிட்டே இருப்பார். எங்க அப்பா ஸ்பீடா நடக்கிறதைப் போலவே ரஜினியோட பாடி லாங்வேஜூம் இருக்கும். இரண்டு பேர் கிட்டேயும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கும்.

முத்து படத்தை யமாஷீட்டாங்கிற பேராசாரியர் சப்-டைட்டில் போட்டு ஜப்பானில் ரிலீஸ் பண்ணினார். என்னோட கணவர் தான் மார்க்கெட்டிங்கைக் கவனிச்சார்.

படம் அங்கே பெரிய ஹிட். ‘டான்ஸிங் மகாராஜா’ ங்கிற பெயரோடு அங்கே ரிலீஸ் ஆன முத்து படம் ரஜினிக்கு நிறைய ஜப்பானிய ரசிகர்களை உருவாக்கியிருச்சு.

அவ்வளவு பேர் படத்தைப் பார்த்திருக்காங்க. இப்போ மறுபடியும் அதில் சில தொழில்நுட்ப மாற்றங்களைப் பண்ணிட்டு மறுபடியும் அங்கே ரிலீஸ் பண்ணப் போறாங்க.

கடைசியில் ரஜினியை வைச்சு நாங்க பண்ணின படம் ‘குசேலன்’. அப்புறம் பெரிய பேனர் படங்களில் நடிக்க ஆரம்பிச்சுட்டார். அப்பா ஒரு புரோகிராமில் ரஜினியை ‘இன்டர்வ்யூ’ பண்ணினதை இப்போ பார்த்தால கூட அவ்வளவு ஸ்வீட்டா இருக்கும்.

அப்போ அதில் “உனக்குப் பிடிச்ச டைரக்டர் யாரு?’’ ன்னு அப்பா கேட்டப்போ ‘மகேந்திரன்’ ன்னு பதில் சொல்வார் ரஜினி. “ஏம்ப்பா.. என்னைச் சொல்ல மாட்டீயா?’’ன்னு விளையாட்டா அவரிடம் கேட்டிருப்பார் அப்பா.

அப்பா மேலே மிகுந்த மரியாதை வைச்சிருந்தாலும், உரிமையோடு அப்பா கிட்டே அவரால் அப்படிச் சொல்ல முடிஞ்சது.

சந்திரமுகி, சிவாஜின்னு மற்ற டைரக்டர்களோட நடிச்ச படம் முடிஞ்சதும் அப்பாவை ப்ரீவ்யூக்குக் கூப்பிட்டுக் கருத்துக் கேட்பார் ரஜினி.

அப்பா சொன்ன சொல்லுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பார். அப்பா அவரைப் பார்க்க விரும்பினா உடனே எங்க வீட்டுக்கு வந்துடுவார்.

அவரோட பேச்சு அரசியலாக்கப்பட்டு சில சிக்கல்கள் வந்தப்போ அப்பாவுக்கு கஷ்டமா இருந்திருக்கு.

அவர் மேலே அக்கறை இருந்திருக்கு. “அரசியலில் உன்னாலே இருக்க முடியுமா? உனக்கு ஒத்து வருமா? கொஞ்சம் தள்ளிப் போடேன்’’ன்னு கூட அப்பா சொல்லி வெயிட் பண்ணச் சொல்லியிருக்கார்.

ரஜினிக்கு இடையில் உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில் சேர்ந்தப்போ அப்பா ரொம்பவும் ‘டிஸ்டர்ப்’ ஆகியிருந்தார்.

சிங்கப்பூருக்கு அவர் கிளம்புறதுக்கு முன்னாடி “சிகிச்சை முடிஞ்சு நல்லபடியா வருவேப்பா’’ன்னு நம்பிக்கையோட போனில் பேசி அனுப்பி வைச்சார்.

அதே மாதிரி ரஜினி உடல்நலம் தேறித் திரும்பியதும் அப்பாவைப் பார்க்க வீட்டுக்கே வந்துட்டார்.

அப்பா மருத்துவமனையில் இருக்கும்போதே ரஜினி வந்திருந்தார். அவரை நினைவுபடுத்துறதுக்கு அப்பா கஷ்டப்பட்டப்போ ரஜினிக்குச் சங்கடமாப் போச்சு. மிகவும் வருத்தப்பட்டார்.

அவரைக் கடைசிக் காலத்தில் அந்தத் தோற்றத்தில் பார்க்க அவருக்குக் கஷ்டமா இருந்திருக்கலாம்.

அப்பா இறந்தப்போ பெசன்ட் நகர் மயானம் வரை வந்திருந்தார் ரஜினி. இன்றைக்கு வரைக்கும் அவரோட குடும்பத்தோட தொடர்பு இருந்துக்கிட்டே இருக்கு. லதா அடிக்கடி வருவாங்க.

இப்போ, “நீ நல்லா தமிழ் கத்துக்க.. அப்புறம் உன்னை உயர்த்துறது என் பொறுப்பு”ன்னு ரஜினி சொன்னதைக் கேட்டப்போ எங்க குடும்பத்திலே இருந்தவங்களுக்கு அழுகையே வந்துருச்சு.

அப்படிப்பட்ட குணம் கொண்ட ரஜினி அரசியலுக்கு வர்றப்போ அவருக்கு எந்த விதத்தில் நாம உதவ முடியும்னு தான் நாங்க யோசிச்சிக்கிட்டிருக்கோம். அவருக்கு வீடியோ, ஃபிலிம் மூலமாகத்தான் உதவ முடியும்.

தன்னையும், தன்னுடைய ஹெல்த் பத்தியும் சரியா உணந்தே அவர் அரசியலுக்குள் இறங்க முடிவெடுத்திருப்பார்.

அவருடைய எண்ணம் பலிக்கணும்னு நினைக்கிறோம்.

கடவுள் அருள் அவருக்கு இருக்கு.. ரசிகர்களோட பலம் இருக்கு.. மக்களோட ஆதரவும் இருக்கும்.. நீண்ட காலமா அவரைப் பார்த்துக்கிட்டிருக்கிற நாங்க அப்படித்தான் நினைக்கிறோம். பார்ப்போம்.”

– தனது தந்தையைப் போலவே நம்பிக்கையுடன் பேசுகிறார் புஷ்பா கந்தசாமி.
*
– மணா