Take a fresh look at your lifestyle.

‘சங்கம’த்திற்கு தனிக்கவனம் எடுத்துக்கொண்ட ரஹ்மான்!

‘சங்கமம்’ படத்தின் பாடல்களைக் கேட்டு கொண்டிருந்தபோது, அந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அளித்த ஒரு பேட்டியை பார்க்க நேர்ந்தது.

‘சங்கமம்’ படத்திற்காக அவர் முதன்முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியபோது, அவர் மறுத்துவிட்டாராம்.

“சுரேஷ், இந்த வகை இசையை என்னைவிட சிறப்பாக செய்யக்கூடியவர்கள் இளையராஜா அல்லது எம்.எஸ். விஸ்வநாதன். இதை நான் தொடவே முடியாது… மன்னிக்கவும். கதை அருமையாக இருக்கிறது. ஆனால் வேறு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சுரேஷ் கிருஷ்ணாவுக்கு, எதிர்பாராத விதமாக ரஹ்மானிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அவர், “நான் அஜ்மீருக்கு செல்கிறேன். நாளை என் முடிவை சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மறுநாள் இரவு ரஹ்மான் மீண்டும் அழைத்து, “சுரேஷ், நான் இந்தப் படத்தை செய்யப் போகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. மற்ற எல்லா வேலைகளிலிருந்தும் ஐந்து நாட்கள் விடுப்பு எடுக்கிறேன். நீங்களும், நானும், வைரமுத்து அவர்களும் மட்டும் எங்காவது தனியாகச் செல்வோம்” என்று கூறியிருக்கிறார்.

அதாவது, “இதைத் தனிக்கவனம் எடுத்து முழுமையாகச் சிறப்பாக உருவாக்க வேண்டும்” என்ற மனநிலையிலேயே அவர் இருந்ததாக தோன்றுகிறது.

அந்த சில நாட்கள் எவ்வளவு அற்புதமான அனுபவமாக இருந்தன என்பதை சுரேஷ் கிருஷ்ணா விவரிக்கிறார்.

ரஹ்மானின் பணிப்பற்று, அர்ப்பணிப்பு மற்றும் இசை மீதான காதலை அவர் வெகுவாகப் பாராட்டுகிறார்.

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரஹ்மான் மிக நுணுக்கமாகக் கேட்பாராம். அந்தக் காட்சி நடைபெறும் இடம், காலநிலை, பயன்படுத்தப்படும் பொருட்கள், மனநிலை, மாட்டுவண்டி காட்சி, நடன நிகழ்ச்சிகள் என ஒவ்வொரு சிறு விவரத்தையும் ஆராய்ந்திருக்கிறார்.

பிறகு அந்தச் சூழல்களுக்கு ஏற்றவாறு, முழு இரவும் விழித்திருந்து, படிப்படியாக இசையமைத்திருக்கிறார்.

அவர் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா திருப்தியடைந்த பிறகே, வைரமுத்துவை அழைத்து பல்லவியும் மற்ற வரிகளையும் எழுதச் சொல்லியிருக்கிறார்கள்.

வெறும் ஐந்து நாட்களிலேயே, தொடர்ந்து நான்கு பாடல்களை இசையமைத்து முடித்த ரஹ்மான், ஒரு பாடலை மட்டும் முழுமையடையாமல் விட்டுவிட்டு, தாளம் படவேலைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

பின்னர் மும்பையிலிருந்து, அந்த இறுதிப் பாடலின் இசைக் கோர்வையை ஒரு சி.டி.யில் பதிவு செய்து சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அனுப்பியிருக்கிறார். அந்த இசைக் கோர்வையின் நீளம் சுமார் 30 நிமிடங்கள்! ஆம், முழு 30 நிமிடங்கள்.

அதில் இருந்து தமக்குப் பிடித்த பல்லவி, சரணம் மற்றும் பகுதிகளைத் தேர்வு செய்யும்படி அவர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் கூறியிருக்கிறார்.

அந்த 30 நிமிட இசையைக் கேட்டபோது, உண்மையிலேயே கண்களில் கண்ணீர் வந்ததாக சுரேஷ் கிருஷ்ணா கூறுகிறார்.

அந்தப் பாடல்தான் “முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்”.

மூலப் பதிவு ஆங்கிலத்தில்: Nidhish Bharadwaj

  • Kiruthiehan Mathiruban Facebook