விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு சிக்கிரம் மறந்திருக்க முடியாது.
பல ஆண்டுகளாகப் பிரிந்திருக்கும் காதலனும், காதலியும் கல்லூரியில் நடக்கும் ரீ யூனியன் நிகழ்சியில் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொள்வதை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, அவர்களின் அன்பைச் சொல்லியிருந்தது ‘96’.
அதேபோல் இரு மனங்களில் ஒரு நாள் பயணத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள மலையாளப் படம் ‘சின்ன சின்ன ஆசை’.
இரு படங்களுக்கும் இடையில் ஒரே வித்தியாசம் மட்டும்தான் இருக்கிறது. ‘96’ படத்தில் திரிஷாவும், விஜய் சேதுபதியும் முன்னாள் காதலர்கள்.
ஆனால், ‘சின்ன சின்ன ஆசை’ படத்தில் நாயகனும், நாயகியும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள். 50 வயதைக் கடந்தவர்கள்.
தஞ்சாவூரில் இருந்து ஆன்மிக யாத்திரைக்காக வாரணாசிக்கு ஒரு குழுவுடன் செல்லும் நாயகி மதுபாலா, யதேச்சையாக குழுவிடம் இருந்து பிரிந்து விடுகிறார்.
தனிமையில் செய்வதறியாமல் தவிக்கும் அவருக்கு, தன் மகளை சந்திக்க வாரணாசிக்கு வரும் இந்திரன்ஸ் உதவி செய்கிறார். மதுபாலா பிரிந்த குழுவினரை தேடி அவருடன் வாரணாசி முழுக்க சுற்றுகிறார்.
மதுபாலா தமிழிலும், இந்திரன்ஸ் மலையாளத்திலும் பேசினாலும், இருவரின் உணர்வுகளும் ஒரு கட்டத்தில் இணைகின்றன.
சிறுவயது முதல் மற்றவர்களுக்காகவே வாழ்ந்து, தனக்கான வாழ்க்கையை தொலைத்த மதுபாலாவின் சின்னச் சின்ன ஆசைகளில் பலவற்றை ஒரே நாளில் நிறைவேற்றிக் கொடுக்கிறார் இந்திரன்ஸ்.
அது மதுபாலாவின் மனதை நெகிழ வைக்கிறது. கூடவே மனைவியை இழந்த பிறகும் திருமணம் செய்யாமல் மகளுக்காக வாழும் இந்திரன்சின் குணம் மதுபாலாவுக்கு பிடித்துப் போகிறது.
ஒரு கட்டத்தில் தனது குழுவினரைக் கண்டுபிடித்த பின்னும் அவர்களுடன் செல்லாமல், அடுத்த நாள் காலைவரை இந்திரன்சுடன் சேர்ந்து வாரணாசியை சுற்றிவர முடிவெடுக்கிறார்.
இருவரின் நட்பைப் பற்றி அறிந்துகொள்ளும் இந்திரன்சின் மகள் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க விரும்புகிறார்.
அவரது ஆசை நிறைவேறியதா? இந்திரன்சும் மதுபாலாவும் இணைந்தார்களா என்பதே இப்படத்தின் கிளைமேக்ஸ்.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஹோம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் என்ற இமேஜில் இருந்து குணச்சித்திரமாக மாறிய இந்திரன்ஸ், இப்படத்தில் மாதவன் மாஷ் என்ற கதாபாத்திரத்தில் பார்வையாளர்களை கட்டிப் போடுகிறார்.
படம் முழுக்க அவருக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார் மதுபாலா.

ஆரம்பத்தில் அழுகாச்சி கதாபாத்திரமாக அறிமுகமாகும் அவர், பின்னர் காதல் வயப்படுவது, இரவில் வாரணாசியில் பரத நாட்டியம் ஆடுவது என்று கலகலப்பான கதாபாத்திரமாக மாறி ரசிகர்களை கவர்கிறார்.
கதையின் தன்மையை உணர்ந்து மதுபாலாவும் இந்திரன்சும் இயல்பாக நடித்துள்ளதால் அவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களைக் கவர்கிறது.
பெரிய அளவில் திருப்பங்களோ, அதிரடி காட்சிகளோ இல்லாமல் பீல்குட் காட்சிகளை வைத்தே ரசிகர்களை கவர முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குநர் வர்ஷா வாசுதேவ்.
படம் முழுக்க அவருக்கு துணையாக நின்று வாரணாசியை அழகான கோணங்களில் சுற்றிக் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் பயிஸ் சித்திக்.
மென்மையான காதல் படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் இது. ஹாட்ஸ்டார் ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
நாயகி தமிழிலும், நாயகன் மலையாளத்திலும் மற்ற பாத்திரங்கள் இந்தியிலும் பேசினாலும், காதலுக்கு மொழி தடையில்லை என்பதால் மொழிமாற்றம் செய்யப்படாமலேயே ரசிக்க முடிகிறது.
– ராதா