திரையுலகிற்குப் புதிதாக வரும் புதுமுகங்களுக்கு சினிமா பிரபலங்கள் சொன்ன அறிவுரை:
*****
திரையுலகிற்குப் புதிதாக வரும் புதுமுகங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். திரையுலகில் நடிக்க வந்துள்ள புதுமுகம் உங்களிடம் வந்து அறிவுரை கேட்டால். நீங்கள் என்ன சொல்ல விரும்புவீர்கள்.
இந்தக் கேள்வியை, புது முகங்களின் சார்பில் சில அனுபவம் வாய்ந்த புகழ்ப்பெற்ற நடிகர்களிடம் கேட்டோம்.
அவர்களது அனுபவத்தின் பிரதிபலிப்பு அவர்கள் சொன்ன பதிலில் ஒலித்திருக்கின்றன. புது முகங்களுக்கு அந்த அறிவுரை பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
ஜெமினி கணேசன்:
திரையில் நடிக்க வேண்டுமே தவிர வெளியுலகில், வாழ்க்கையில் நடிக்கக் கூடாது. சில சமயங்களில் வெளி உலகில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
வியாதியைக் குணமாக மருந்தில் அளவோடு விஷத்தைக் கலப்பது போல அந்த நடிப்பை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும்.
சுயநலத்திற்காக மட்டுமே வெளியில் நடிப்பவன் கலைஞன் அல்ல. மலிவான வியாபாரியைப் போன்றவன் அவன்.
பலவித களியாட்டங்களில் ஆரோக்கிமாக ஈடுபடலாம். அதற்காக அளவுக்கு மீறி ஈடுபட்டு உள்ளத்தையும், உடலையும், தொழிலையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது. மற்றபடி யாருடைய மனமும் புண்படாதபடி நடந்து கொள்ள வேண்டும்.
நடிப்பு என்பதே செயற்கையானதுதான். அதற்கு மேல் ஒரு செயற்கைத் தன்மையை நம் முன் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
லட்சுமி:
எந்தச் சூழ்நிலையிலும், எதற்காகவும் எதையும் அடகு வைக்கக் கூடாது. உன் எண்ணங்களிலிருந்து விடுபடாமல், நீ நீயாகவே இரு.
இது இதற்கெல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான் என்று என்றுமே எண்ணாதீர்கள்.
ஆர்.எஸ். மனோகர்:
தொழிலில் கவனம் செலுத்தி, நமக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தை நன்கு உணர்ந்து நடிக்க வேண்டும். அந்தக் காட்சியில் தமக்கு மனநிறைவு தரும்படி நம்மால் எந்த அளவுக்கு சிறப்பான நடிப்பைத் தரமுடியுமோ அந்தளவுக்கு சிறப்பான நடிப்பைத் தர வேண்டும்.
நன்றி: பிரபல சினிமா மாத இதழ்.