Take a fresh look at your lifestyle.

சமூகத்தைப் பிரதிபலிக்கும் ‘P.T. சார்’ படம்!

- கலை இயக்குநர் அமரன்

ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் ‘P T சார்’. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரித்திருந்தார்.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினில் பெரும் வரவேற்பைக் குவித்த இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். விழாவில் இயக்குநர் கே.பாக்கியராஜ், நடிகர் இளவரசு, கலை இயக்குநர் அமரன், படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன், நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கலை இயக்குநர் அமரன்: “இயக்குநர் கார்த்திக் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை, நாம் தவறவிடுவதை, நம் மனதைத் தாக்கும் நிகழ்வை மையமாக வைத்து, அழகான திரைக்கதை அமைத்திருந்தார்.

ஆண் எனும் கர்வம் அழியவேண்டும் என நினைப்பவன் நான், நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்களைக் கவனிக்கையில் நான் ஆணாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். நாம் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் படம் தான் இது” என்றார்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்:

இந்தக் கதையை யோசித்த போது ஹராஸ்மெண்ட் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள் ஆனால் அதன் பிறகு பெண்கள் படும் கஷ்டத்தைச் சொல்லலாம் என நினைத்தேன்.

நிறையப் பேர் படம் பார்த்துவிட்டு “எங்களுக்கும் இது நடந்துள்ளது இப்படம் நல்லத் தெளிவைத் தந்துள்ளது” என்று கூறுகிறார்கள். மிகப்பெரிய மகிழ்ச்சி.