Take a fresh look at your lifestyle.

மீண்டும் கல்லூரிக்குப் போவேன்!

- இயக்குநர் வெற்றிமாறனின் கல்லூரிக் கால அனுபவங்கள்

லயோலா கல்லூரி-100
*
காலை நேரம். சென்னை லயோலா கல்லூரிக்குள் நுழைகிறது அந்த பி.எம்.டபிள்யூ கார். அதிலிருந்து இறங்கி கல்லூரிக்குள் நுழைகிறார் அதன் முன்னாள் மாணவரும், தேசிய விருதுகளை அள்ளிக் குவித்த ‘ஆடுகளம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் இயக்குநருமான வெற்றிமாறன்.

“வாங்க.. காலேஜுக்குள் போகலாம்” என உள்ளே அழைத்துப் போகிறார்..

“பத்தாவது வகுப்பு வரை நான் படித்தது ராணிப்பேட்டையில். அடுத்து ப்ளஸ் ஒன் ஒரு வருஷம் வாலாஜாவில் ஒரு பள்ளியில் படித்தேன். அதை முடிப்பதற்குள் பல பிரச்சினைகள்.

ஒழுங்காக பள்ளிக்குப் போகலை. அட்டெண்டன்ஸ் ஒழுங்கா இல்லை. விருப்பமில்லை. கிரிக்கெட் பக்கம் மனசு திரும்பி ஒய்.எம்.சி.ஏ வில் சேர்ந்தேன். அங்கே சேர்ந்த பிறகுதான் கிரிக்கெட் டீமே அங்கு இல்லைன்னு தெரிஞ்சது. அப்புறம் ப்ளஸ் டூ-வை ஒரு வழியா முடிச்சேன்.

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிப்போம்னு முடிவாச்சு. சென்னையில் லயோலா, மாநிலக்கல்லூரி இரண்டுக்கும் ‘அப்ளிகேஷன்’ போட்டேன். லயோலாவில் முதலில் வந்த இரண்டு லிஸ்ட்களில் என்னுடைய பெயர் இல்லை. மூன்றாவது லிஸ்டில் பெயர் வந்து, சேர்ந்தேன்.

சேர்ந்ததும் அங்கிருந்த மாணவர்களுடன் உடனே ஒன்றிணைய முடியலை. காரணம் ஆங்கிலம். அப்போ அவ்வளவா ஆங்கிலத்தைப் சுலபமா பேச முடியலை. சில பேராசிரியர்கள் பேசுற ஆங்கிலத்தைப் புரிஞ்சிக்க முடியலை.

டிசில்வானு ஒரு பேராசிரியர் வகுப்பில் ‘அட்டெண்டன்ஸ்’ எடுக்கிறதே பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்புடன் அவ்வளவு அழகா இருக்கும். இப்படியே போனால் சரியாக இருக்காது என்பதை உணர்ந்து என்னை நானே ‘இம்ப்ரூவ்’ பண்ணிக்கிட்டேன். பொறுப்பா புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். பிறகு போகப் போக பழகிருச்சி.

என்னுடைய வகுப்பில் இருந்த 84 பேரில் நாங்கள் 17 பேர் ஒரு டீமா இருப்போம். அப்பவே கல்லூரி வளாகத்திற்குள் சிகரெட் பிடிக்க முடியாது. ரொம்பவும் கண்டிப்பாக இருப்பார்கள்.

நாங்கள் வெளியே இருக்கும் டீ கடைக்குப் போய் ‘தம்’ அடிச்சுட்டு வருவோம். வகுப்பே புகையிலை நாற்றமடிக்கும். அப்புறம் ஃபில்டர் ஆகி ஏழு பேர் ஒரு செட்டா சின்சியரா தம் அடிச்சு வகுப்புக்கு ‘கட்’ அடிச்சு சுத்திகிட்டு இருந்தோம்.

இருந்தாலும் படிப்பில் கவனமாக இருந்தேன். முதல் செமஸ்டர் தேர்வு எழுதி ரிசல்ட் வந்தப்போ வகுப்பில் மொத்தம் 11 பேர் தான் அனைத்திலும் தேறி இருந்தார்கள். அதில் நானும் ஒருவன். நண்பர்கள் பலருக்கு ஆச்சரியம். எங்கே சுத்தினாலும் படிப்பில் கவனமாய் இருக்க ஆரம்பிச்சேன்.

அப்போ எப்படிப் படிப்பேன்னு சொன்னா இப்ப கேட்க சிலருக்கு வியப்பா இருக்கும்.

தேர்வுக்கு முன்னால் நாலஞ்சு நாட்கள் தூங்காம, விடாமல் சைதாப்பேட்டையில் இருந்த என்னுடைய அறையில் உட்கார்ந்து படிப்போம்.

படிச்சு எங்களுக்குள் ‘டிஸ்கஸ்’ பண்ணிக்குவோம். அப்படியே தேர்வு எழுதப் போயிருவோம். வந்து ஒரு நாள் முழுக்கத் தூங்கிட்டு மறுபடியும் படிப்பு.

அப்போ கல்லூரியில் பல்வேறு விழாக்கள் நடக்கும். அதில் கலை நிகழ்ச்சிகளில் நானும், நடிகர் ஜெகனும் (‘அயன்’ படத்தில் சூர்யாவின் நண்பராக வருவாரே அவர்தான்) சேர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் சில ‘வெரைட்டி’ நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கிறோம்.

‘ஜிப்ரேக்’ன்னு ஒரு நிகழ்ச்சியை பல கல்லூரிகளில் நடத்தி இருக்கிறோம். பல திரைப்படங்களுக்குப் போவோம்.
பொங்கல், தீபாவளின்னா ஒரே நாளில் மூன்று படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன்.

அப்போ கூடுதலா ‘விஸ்காம்’ பிரிவில் ‘டெலிவிஷன் பிரசன்டேஷன்’னு ஒரு கோர்ஸ் எடுத்து படிச்சேன். அப்போ ஃபாதர் ராஜநாயகத்தைச் சந்திச்சேன். சினிமாவில் எனக்கு விருப்பம் இருப்பதை உணர்ந்து உற்சாகப்படுத்துவார்.

கடைசியா 6 நிமிஷங்களில் ஒரு டாகுஃபிக்சன் பண்ணினோம். டென்னிஸ் கோர்ட்டில் பந்து எடுத்துட்டு வரும் சிறு பையன்களைப் பற்றிய படம் அது. ராஜநாயகம் பார்த்துவிட்டு பாராட்டி அப்போது நடந்த ஒரு போட்டிக்கு அதை அனுப்பச் சொன்னார். அனுப்பினோம்.

அதற்கான தேர்வு குழுவில் ஜட்ஜாக இந்த மூன்று பேரில் பாலுமகேந்திராவும், மகேந்திரனும், மதன் காபிரியேலும் இருந்தார்கள். எங்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை.

என்றாலும் மதன் காபிரியேல் எங்களைக் கூப்பிட்டுப் பேசினார். “யார் ஸ்கிரிப்ட் பண்ணினா”ன்னு கேட்டார். நான் பண்ணியதாகச் சொன்னதும் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார். சினிமாவில் விருப்பம் இருந்தாலும் அதற்கான தைரியம் இல்லை.

வழக்கறிஞராக வேண்டும் என்று சொன்னேன். அவர் அதை மறுத்து “சினிமாவில் நீ தைரியமா முயற்சி பண்ணு. உனக்கு எதிர்காலம் இருக்கு” என்று சொன்னார். எனக்குள் நல்ல துவக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் அது.

பி.ஏ-வை முடிச்சு 61 சதவீத மார்க் எடுத்திருந்தேன். முடித்துவிட்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அந்த கேம்பஸ், அங்கே இருந்த நூலகம் என்று அதைப் பற்றிய கனவு எனக்குள் மேலோங்கி இருந்தது. அதற்கு விண்ணப்பித்தேன். நுழைவுத் தேர்வு எழுதினேன். லயோலாவிலும் எம்.ஏ-வுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் லயோலாவில் என்னைக் கூப்பிடவே இல்லை.

சினிமாவில் எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்து என்னைச் சேர்த்துக் கொள்ளத் தயங்கினார் துறைத்தலைவர். அவரிடம் போய் வாதாடி நுழைவுத்தேர்வு எழுதி 94 சதவீத மார்க் எடுத்து அதில் அட்மிஷன் கிடைத்து விட்டது.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இருந்தும் இன்டர்வியூ கார்டு வந்த போது சிறு குழப்பம்.

கடைசியில் திரும்பவும் லயோலாவிலேயே சேர்ந்து விட்டேன்.

தொடர்ந்து அதே கல்லூரியில் எம்.ஏ படித்தபோது பாலுமகேந்திரா விஸ்காம் பிரிவுக்கு விசிட்டிங் பேராசிரியராக வருவார்.

அவர் இரண்டு நாட்கள் ஒர்க்-ஷாப் ஒன்றை நடத்தினார். அதில் கலந்து கொண்டேன். அவருடைய பாணி எனக்குப் பிடித்திருந்தது. அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன்.

அதை ஃபாதர் ராஜநாயகத்திடம் சொன்னேன். அவரும் பாலுமகேந்திரா அசிஸ்ட்டெண்ட்களைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவர் மூலமாக பாலுமகேந்திரா சாரை போய்ப் பார்த்தேன். அவர் என்னை அசிஸ்ட்டெண்டாக உடனே சேர்த்துக் கொண்டார்.

எம்.ஏ. இரண்டாமாண்டு அப்போது படித்துக் கொண்டிருந்த நிலையில், நான் படிப்பை முடிப்பது பற்றி யோசிக்கவில்லை.
“இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது” என்று உடனே முடிவெடுத்து அவரிடம் சேர்ந்துவிட்டேன்.

“என்னடா எம்.ஏ., படிச்சிருக்கேன்னு சொல்றே.. ஒரு கிளாப் கூட அடிக்கத் தெரியலையே”ன்னு கிண்டலாகச் சொல்வார்.

நான் அவரிடம் சேர்ந்தபோது அதுவரை ஆங்கிலத்தில் மட்டும் படித்த நான், அதன் பிறகுதான் தமிழில் படிக்க ஆரம்பித்தேன். அவரிடம் 8 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம்.

என்னுடைய துறைத் தலைவர் சொன்ன மாதிரியே எம்.ஏ.வை என்னால் முடிக்க முடியவில்லை.

பல ஆசிரியர்கள் எவ்வளவோ உதவி பண்ணியிருந்தாலும் ஃபாதர் ராஜநாயகத்தின் மூலம் தான் என்னுடைய வாழ்க்கை சினிமாவை நோக்கித் திரும்பியது என்று சொல்ல வேண்டும். இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தாலே உலகத்தை எதிர் நோக்கும் பலம் யாருக்கும் வந்து விடும். அப்படித்தான் எனக்கும்.

லயோலாவில் படித்த அந்த நான்கரை ஆண்டுகள் என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான கட்டம். என்னுடைய வாழ்க்கையின் போக்கை நிர்ணயித்த காலமும் அதுதான். இத்தனைக்கும் வகுப்புக்கு நான் ரெகுலராகவும் போகமாட்டேன். முதல் ஒரு வகுப்புக்குப் போய்விட்டு டீக்கடைக்குப் போய் விடுவேன் நண்பர்களுடன்.

அட்டெண்டன்ஸ் இல்லாமல் போய் அபராதம் கட்டித்தான் தேர்வு எழுதினேன். ஒருசமயம் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி அழைத்துப் போயிருக்கிறேன். இருந்தாலும் படிப்பை இயல்பாகப் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதும் ஒரு பேப்பர் அரியர்ஸ் இருக்கிறது.

இப்போதும் இந்தக் கல்லூரிக்கு அடிக்கடி வந்திருக்கிறேன். எப்போதும் இந்தக் கல்லூரியுடன், இங்கே என்னுடன் படித்த கரிகாலன் போன்ற நண்பர்களுடன் தொடர்ந்து உறவு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

நண்பர்களுடன் படத்தைத் துவக்குவதற்கு முன்பு விவாதித்திருக்கிறேன். ‘ஆடுகளம்’ கதைக்கரு கூட முன்பே உருவானது தான். என்னுடைய படத்திற்கு தேசிய விருது கிடைத்ததும் முதலில் பாராட்டுக் கூட்டம் நடத்தியது இதே கல்லூரிதான்.

இப்போதும் நான் அரியர்ஸ் வைத்திருக்கிற பேப்பரை இங்கேயே சேர்ந்து படித்து எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக எழுதுவேன். இந்தக் கல்லூரி மாணவனாகத் தான் இப்போதும் உணர்கிறேன்…” – சொன்னவாறே கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வருகிறார்.

எதிரில் டீக்கடை வைத்திருக்கிற நடுத்தர வயதுக்காரர் உரிமையுடன் சென்னைத் தமிழில் வெற்றிமாறனை வரவேற்கிறார். நலம் விசாரிக்கிறார்.

சாலையோரத்தில் டீ குடித்துவிட்டு கல்லூரி மாணவனைப் போல நகர்ந்து போகிறார் வெற்றிமாறன். அவருடைய படத்தில் இருக்கிற இயல்பான எதார்த்தம் அவரிடமும் இருக்கிறது.

– மணா-வின் ‘காலேஜ் கேம்பஸ்’ நூலிலிருந்து.