இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தபு. தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் தபு நடித்துள்ளார்.
இந்தி நடிகையான தபு தமிழ், தெலுங்கு, மலையாளம், அனைத்து மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், புதிய படங்களில் நடிப்பதற்கான கதைத் தேர்வில் மூன்று விஷயங்களைக் கடைப்பிடிப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நேர்காணலில் இதைப் பற்றி பேசிய தபு, ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாவதற்கு முன்பு நான் எதிர்பார்க்கும் மூன்று விஷயங்கள் அதில் இருக்கின்றனவா என்று பார்த்த பிறகுதான் கையெழுத்திடுவேன் என்று கூறியுள்ளார்.
அதில், முதல் அம்சம் கதை. “நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருக்க வேண்டும். புதுமையான கதைகளில் நடிக்க எனக்குப் பிடிக்கும். இரண்டாவது அந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு என்ன முக்கியத்துவம் இருக்கும் என்று ஆராய்வேன்.
மூன்றாவதாக அந்தக் கதையை அழகாக படமாக்கி ரசிகர்களுக்கு கொடுக்கும் இயக்குநர் யார் என்று பார்ப்பேன்” என்று கூறியுள்ளார்.
இதைத் தவிர்த்து அந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று பார்ப்பது எனக்கு தேவை இல்லாத விஷயம் என்றும் நடிகை தபு தெரிவித்துள்ளார்.