திரைத் தெறிப்புகள்-31:
*
கவியரசர் கண்ணதாசனுக்கே உரித்தான சிறப்பு அம்சமாக அவருடைய சில பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய பாடல் வரிகள் தற்போதுள்ள சூழ்நிலைக்குக்கும் கன கச்சிதமாகப் பொருந்துகின்றன.
1962-ஆம் ஆண்டில், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர் இசையமைப்பில் ‘பலே பாண்டியா’ திரைப்படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் இப்படித் துவங்கும்.
“யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியலை.
அட அண்டங் காக்கைக்கும், குயில்களுக்கும்
பேதம் புரியலை.
பேரெடுத்து உண்மையைச் சொல்லிப்
பிழைக்க முடியல்லே.
இப்போ – பீடிகளுக்கும், ஊதுபத்திக்கும்
பேதம் தெரியலை…”
என்ற பாடலை திரைப்படத்தில், எதிர்பாராமல் சிறைக்குள் சிக்கிக் கொள்கிறவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருக்கிற காட்சி கண்ணுக்குளேயே நிற்கிறது.
இந்தப் பாடலில் மிக எளிமையாக,
“நாளை எங்கே, யாரிருப்பார்?
அதுவும் தெரியலை.
இப்போ – நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்
பேதம் புரியலை…”
– என்றும்,
“உண்மை இங்கே கூட்டுக்குள்ளே
கலங்கி நிக்குதடா
அட ..உருட்டும், புரட்டும் சுருட்டிக் கொண்டு
வெளியில் நிற்குதடா
அட.. என்னத்தச் சொல்வேனடா- தம்பி!
என்னத்தச் சொல்வேன்டா…”
-என்று நகரும் பாடலின் அடுத்த வரிகள் இவை.
“மூடருக்கும் மனிதர் போல
முகம் இருக்குதடா.
மோசம் நாசம் வேஷமெல்லாம்
நிறைந்திருக்குதடா.
காலம் மாறும். வேஷம் கலையும்.
உண்மை வெல்லுமடா..
கதவு திறந்து பறவை பறந்து
பாடிச் செல்லுமடா
அட என்னத்தச் சொல்வேண்டா
தம்பி என்னத்தச் சொல்வேன்டா”.
என்று நிறைவடையும் இந்தப் பாடல் காட்சி இடம்பெற்ற திரைப்படம் – அப்போது சிவாஜி கணேசன் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய சூழலில், மிகக் குறுகிய காலத்தில் அவசரத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலைப் பாடிய டி.எம்.சௌந்தரராஜன் அவ்வளவு குழைவான பாவத்துடன் பாடியிருக்கும் விதம் – இப்போது கேட்டாலும், பார்த்தாலும், ரசிக்க வைக்கிறது.