Take a fresh look at your lifestyle.

யார் இந்த தாதா சாகேப் பால்கே?

2

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இன்று இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் விருது வழங்கப்படுகிறது.

அவருக்கு முன்னதாக சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கே.பாலசந்தர் உள்ளிட்டோருக்கும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தாதா சாகேப் பால்கே என்பவர் யார்? அவர் இந்திய சினிமாவுக்காக என்ன செய்தார் என்பதை தெரிந்துகொள்வோம்.

நாசிக் நகருக்கு அருகில் உள்ள திரும்பகேஸ்வர் (Trimbakeshwar) எனும் ஊரில் 1870-ம் ஆண்டு பிறந்தவர் தாதாசாகேப் பால்கே.

மும்பையில் பள்ளிப் படிப்பையும், வதோதராவில் கல்லூரிப் படிப்பையும் முடித்த பால்கே, சூரத் நகரில் ஒரு புகைப்படக்காரராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

1899-ல் சூரத் நகரில் பரவிய பிளேக் நோயில் பால்கேவின் மனைவியும் மகனும் உயிரிழக்க, சோகத்துடன் மும்பைக்கே திரும்பியுள்ளார்.

அங்கு காவேரிபாய் என்பவரை குடும்பத்தினர் மணமுடித்த தாதாசாகேப் பால்கே, ஒரு கட்டத்தில் அகழ்வாராய்ச்சி மையத்தில் வேலை பார்த்துள்ளார். பின்னர் அச்சகத் தொழிலில் ஈடுபட்டு, அதையும் மூடினார்.

இந்தச் சூழலில் 1910-ம் ஆண்டு, ஈஸ்டர் தினத்தன்று மும்பையில் உள்ள ‘அமெரிக்கா இந்தியா சினிமாட்டோகிராபி’ என்ற தியேட்டரில் இயேசுநாதரின் வாழ்க்கையை மையப்படுத்திய வெளிநாட்டு குறும்படம் ஒன்றைப் பார்க்கச் சென்றுள்ளார்.

அது வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தியேட்டரில் தன் கண் எதிரே மனிதர்களின் பிம்பங்கள் நகர்வதையும், ஓடுவதையும் மெய்மறந்து பார்த்துள்ளார் சரஸ்வதிபாய்.

படம் முடிந்த பிறகு, அந்த தியேட்டரின் புரொஜக்‌ஷன் ரூமுக்குள் காவேரிபாயை அழைத்துச் சென்ற பால்கே, படம் எப்படி திரையில் தெரிந்தது என்பதை விளக்கியுள்ளார்.

இதைக் கேட்டு அவர் வாய்பிளந்து நிற்க, “இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி? இதே போல ஒரு படத்தை நானும் எடுக்கப்போறேன்” என்று தனது கனவை வெளிப்படுத்தி உள்ளார்.

பால்கேவின் இந்த முடிவை அவரது மனைவி வரவேற்றாலும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர். இதனால் குடும்பத்தின் செல்வம் கரைந்து போய்விடும் என்று எச்சரித்துள்ளனர். ஆனால், சினிமா எடுக்கும் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார் பால்கே.

கணவரின் சினிமா கனவு நனவாக பிறந்த வீட்டில் இருந்து தான் கொண்டுவந்த நகைகள் அனைத்தையும் பால்கேவிடம் கொடுத்த அவர், அதை வைத்துக்கொண்டு ஐரோப்பாவுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

மனைவியின் நகையை விற்றுக் கிடைத்த பணத்தில், ஜெர்மனி சென்ற பால்கே, கேமரா மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான கருவிகளை வாங்கியுள்ளார்.

பின்னர் லண்டன் சென்றவர், திரைப்படங்களை எடுப்பது பற்றிய நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துள்ளார்.

சினிமா பற்றிய நுணுக்கங்களை கற்றபோதிலும், அதற்குத் தேவையான கருவிகளை வாங்கி வந்தபோதிலும் தாதா சாகேப் பால்கேவின் திரைப்படக் கனவு அத்தனை எளிதில் நனவாகவில்லை.

படம் தயாரிக்க போதுமான பணம் கிடைக்காததால் மிகவும் கஷ்டப்பட்டார் பால்கே.

கடைசியில் தன் சொத்துகளையும், மனைவின் சொத்துகளையும் விற்று சினிமா எடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

அடுத்தகட்டமாக நடிகர்கள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. போட்டோ எடுத்தாலே ஆயுள் குறையும் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க யார்தான் முன்வருவார்கள்.

நாடகக் கலைஞர்கள் பலரை பால்கே அணுகியும், யாரும் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நீண்ட வற்புறுத்தல்களுக்கு பிறகு நடிக்கவைக்க முடிவெடுத்தார் பால்கே.

நடிகர்கள் கிடைப்பதற்கே இத்தனை பாடென்றால் கதாநாயகி கிடைக்க அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ஒரு கட்டத்தில் அவரது துயரங்களைப் பார்த்த சரஸ்வதி பாய், தானே படத்தின் நாயகியாக நடிக்கவும் முன்வந்துள்ளார்.

ஏற்கெனவே படப்பிடிப்புக்கு வரும் கலைஞர்களுக்கு சரஸ்வதிபாய்தான் சமைத்துப் போட வேண்டும் என்பதால், அவரை நாயகியாக்க யோசித்தார் பால்கே.

கடைசியில் மும்பை ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றி வந்த அன்னா சலுன்கே (Anna Salunkhe) என்ற பெண்ணை வற்புறுத்தி நாயகியாக நடிக்க சம்மதிக்க வைத்தார்.

இப்படியாக பல்வேறு தடைகளைக் கடந்து 1913-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி மும்பையில் உள்ள ஒலிம்பியா தியேட்டரில் இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’ பிரபலங்கள் பார்ப்பதற்காக திரையிடப்பட்டது.

பின்னர் அதே ஆண்டு மே மாதம் 3-ம் தேதி மும்பையில் உள்ள காரனேஷன் சினிமா என்ற அரங்கில் இப்படம் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.

இந்திய சினிமாவின் தந்தை என்ற புகழையும் தாதா சாகேப் பால்கேவுக்கு பெற்றுத்தந்தது.

அன்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் பயணம், இன்று ஜெட் வேகமெடுத்து ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவு வளர்ந்துகொண்டு இருக்கிறது.

– பி.எம்.சுதிர்