Take a fresh look at your lifestyle.

வார் 2 – ‘டங்குவார்’ அந்துபோச்சு சாமி!

202

ஒரு திரைப்படத்தை ரசிக்க அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இந்த கேள்விக்குப் பதில் சொல்லத்தான் ரசிகர்கள் காலம்காலமாகக் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

ஏனென்றால், பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகவும் மிகநேர்த்தியாகவும் ஆக்கப்படுகிற சில திரைப்படங்கள் அவர்களது ரசனையை விட்டு விலகிச் செல்கின்றன.

சில திரைப்படங்களில் சொல்லத்தக்கப் பல குறைகளைப் புறந்தள்ளிவிட்டு, அவற்றில் இருக்கிற நிறைகளைக் கொண்டாடுகின்றனர்.

இரண்டுக்குமான வித்தியாசத்தைக் கூர்ந்து நோக்கினால், எந்தப் படத்தோடு அவர்களால் மனதார ஒன்ற முடிகிறது என்பதை அடிக்கோடிட வேண்டியிருக்கிறது.

சரி, ‘வார் 2’ படம் பற்றிப் பேசுகையில் இதை ஏன் குறிப்பிட வேண்டும்? விஷயம் இருக்கிறது, அப்படியொரு ஒன்றுதலை ரசிகர்கள் இப்படத்தில் பெற்றார்களா என்பதுவே கேள்வி.

‘வார் 2’ கதை!

ரா உளவுப்பிரிவில் பணியாற்றும் மேஜர் கபீர் தலிவால் (ஹ்ரித்திக் ரோஷன்) நாட்டைச் சிதைக்க நினைக்கும் அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தை எப்படி முறியடித்தார் என்று சொன்னது ‘வார்’ திரைப்படம்.

‘வார் 2’ அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது.

சில ஆண்டு காலமாக ராவை விட்டு விலகி ‘ப்ரீலான்சர்’ ஆகச் சில குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார் கபீர். அவரது மேலதிகாரியான கர்னல் சுனில் லூத்ரா (அசுதோஷ் ராணா) அதன் பின்னிருக்கிறார்.

இந்தியாவைச் சிதைக்கத் திட்டமிடும் கலி கார்ட்டெல் எனும் சிண்டிகேட் குழுவில் இருப்பவர்களைக் கண்டறிந்து கணக்கு தீர்ப்பதற்காக, கபீரை ‘நாட்டுக்கு எதிரான துரோகி’யாக முன்னிறுத்துகிறார் சுனில்.

இந்த விஷயத்தில், சுனிலுக்கு ஒருவர் உதவிகரமாக இருக்கிறார். அவரது அடையாளம் நமக்குத் தெரியவில்லை.

இந்த நிலையில், ஜப்பானில் சில விஐபிக்களை கொன்றுவிட்டு ஜெர்மனி செல்லும் கபீரைச் சிலர் கடத்துகின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடத்தில் அடைத்து வைக்கின்றனர். அதனைச் செய்தது கலி கார்ட்டெல்லை சேர்ந்தவர்கள்.

‘நீ எங்களுக்காக வேலை செய்ய வேண்டும்’ என்று அழைத்து வந்தவர்கள், கபீர் முன்னே சுனில் லூத்ராவை நிறுத்துகின்றனர். ‘இவரைச் சுட்டுக்கொன்றால் அடுத்த கட்டத்திற்கு நீ செல்ல முடியும்’ என்கின்றனர்.

‘ஷூட் மீ மை பாய்’ என்று குருதிப்புனல் கமல் பாணியில் கத்தாமல், ‘இண்டியா பர்ஸ்ட்’ என்று சுருக்கமாகச் சொல்கிறார் சுனில். உடனே, கபீர் அவரைச் சுடுகிறார்.

இந்த வீடியோ ரா மற்றும் இந்திய அரசுக்கு கலி கார்ட்டெல் குழுவினரால் அனுப்பி வைக்கப்படுகிறது. அதனைக் காண்கிற சுனிலின் மகள் காவ்யா (கியாரா அத்வானி) கொதிக்கிறார்.

கபீரின் முன்னாள் காதலியான அவர், இப்போது விமானப்படையில் ‘விங் கமாண்டர்’ ஆக இருக்கிறார்.

கபீரின் கதையை முடிக்கிற உத்வேகத்தில், ‘ராவில் கபீரை தேடுகிற ஆபரேஷனில் நானும் இணைய வேண்டும்’ என்கிறார். உடனே ராவும் அதனை ஏற்றுக் கொள்கிறது.

இந்த நேரத்தில், ‘எளிதாகப் பிடிக்க கபீர் ஒன்றும் சாதாரண ஆள் அல்ல’ என்று கருதும் ரா மேலதிகாரிகள், அதற்காக விக்ரம் சலபதியை (ஜுனியர் என்.டி.ஆர்.) அந்தக் குழுவில் சேர்க்கின்றனர். விக்ரமுடன் இணைந்து பணியாற்றுகிறார் காவ்யா.

கபீரின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று காவ்யாவின் கணிப்பை விட ஒருபடி அதிகமாகவே சிந்திக்கிறார் விக்ரம்.

இந்த நிலையில், கலி கார்ட்டெல்லில் சேர்வதாக நடித்து தான் மேற்கொள்கிற முயற்சிகள் குறித்து தகவல்கள் தரும் வகையில் ரா அமைப்பில் யாரோ ஒரு துரோகி இருப்பதாக உணர்கிறார் கபீர்.

அதனை அறிய முயற்சிக்கிறபோது, கபீர் விக்ரமை நேருக்கு நேர் சந்திக்கிற சூழல் உருவாகிறது. அப்போது, இருவரும் ஏற்கனவே சில ஆண்டுகள் பழகி வந்ததும் அவருக்கு நினைவுக்கு வருகிறது.

கபீர், விக்ரமின் கடந்த காலம் எத்தகையது? இருவரும் நேருக்கு நேர் மோதக் காரணம் என்ன? இறுதியில், நாட்டை அழிக்க நினைக்கும் கலி கார்ட்டெல் ஒழிக்கப்பட்டதா?

இப்படிச் சில பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘வார் 2’வின் மீதி.

சுருக்கமாகச் சொன்னால், ‘ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர்’ கதைகளில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ, இதற்கு முன்னர் வந்த அத்தகைய படங்களில் எதுவெல்லாம் இருந்ததோ, அவையனைத்தும் இப்படத்தில் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில் ‘க்ளிஷேக்களின் குவியல்’ ஆக இருக்கிறது ‘வார் 2’.

என்ன, காட்சியாக்கத்தில் இருக்கிற பளபளப்பு, கதை சொல்வதிலாவது புதிதாக ஏதோ இருக்குமென்ற எதிர்பார்ப்பைத் தொடக்கத்தில் ஏற்படுத்துகிறது. அப்படியொரு விஷயம் படத்தில் இல்லை என்று உணர்வதற்குள் ‘எண்ட் கிரெடிட்’ திரையில் வந்து விடுகிறது.

ஆதலால், ‘டங்குவார் அந்து போச்சு சாமி’ என்று சலிப்புடன் இருக்கையில் இருந்து எழுந்து தியேட்டரை விட்டு வெளியேற வேண்டியிருக்கிறது.

அசத்தல் ‘விஎஃப்எக்ஸ்’!

ஆதித்ய சோப்ரா எழுதிய கதைக்கு ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைத்திருக்கிறார். அப்பாஸ் டயர்வாலா வசனம் எழுதியிருக்கிறார்.

எழுத்தாக்கத்தில் பெரிய புதுமைகள் இல்லாதபோதும், தனது காட்சியாக்கம் வழியே படத்திற்கு உயிரூட்ட முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் அயான் முகர்ஜி.

ஒளிப்பதிவாளர் பெஞ்சமின் ஜாஸ்பர், தயாரிப்பு வடிவமைப்பாளார்கள் ரஜத் பொட்டார், அம்ரிதா மஹால் நகாய் அதற்கு உறுதுணையாக நின்றிருக்கின்றனர். இது போக விஎஃப்எக்ஸ், டிஐ கலைஞர்கள் பங்களிப்பும் கணிசமாக உள்ளது.

குறிப்பாக, விஎஃப்எக்ஸ் அசத்தலாக அமைந்திருப்பது இப்படத்தின் பெரும்பலம்.

படத்தில் ஒவ்வொரு சண்டைக்காட்சியும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதற்கேற்ப ஸ்பிரோ ரஸாடோஸ், ப்ரான்ஸ் ஸ்பில்ஹாஸ், அனல் அரசு, ஓ சீ யங், க்ரெய்க் மெக்ரே, சுனில் ரோட்ரிக்ஸ் ஆகிய ஸ்டண்ட் இயக்குனர்கள் இதில் அக்காட்சிகளை வடிவமைத்திருக்கின்றனர்.

பனி மலை குகையில் நிகழ்வதாக வருகிற ஸ்டண்ட் காட்சியும் ஸ்பெயின் நகர தெருக்களில் ஆக்கப்பட்டுள்ள கார் சேஸிங்கும் சட்டென்று மனம் கவர்கின்றன.

ப்ரீதம் இசையில் பாடல்கள் ‘ஓகே’ ரகம்.

சஞ்சித் பல்ஹரா, அங்கித் பல்ஹராவின் பின்னணி இசை, பரபர ஆக்‌ஷன் காட்சிகளில் மேலும் வேகம் சேர்த்திருக்கிறது.

இன்னும் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை எனப் பல தொழில்நுட்ப அம்சங்கள் நம் கண்களால் காண்கிற காட்சிகளை மேலும் செறிவுபடுத்துவதற்கான வேலைகளைச் செய்துள்ளன.

இத்தனை பேரையும் ஒருங்கிணைத்து, ஒரு ‘கலர்ஃபுல் பிலிம்’ தருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் அயான் முகர்ஜி. அதில் புதுமை இருக்கிறதா என்பதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை.

நாயகனாக ஹ்ரித்திக் ரோஷன் தோன்ற, அவருக்கு வில்லனாக நடித்திருக்கிறார் ஜுனியர் என்.டி.ஆர்.

நேரடியாக இதைச் சொன்னால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் விரட்டியடிப்பார்கள் என்பதால், ஜுனியர் என்.டி.ஆருக்கு நிறையவே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனாலும், அந்தக் காட்சிகள் நம் மனதைத் தொடுவதாக அமையவில்லை.

ஹ்ரித்திக் ரோஷன் புஜ பலம் காட்டியவாறு நடந்து செல்கிறார். க்ளோஸ் அப்பில் கேமிராவைப் பார்த்து வசனம் பேசி தன் கண்ணழகைக் காட்டுகிறார். சில ரசிகர்கள் ‘இது போதுமே’ என்று கைத்தட்டல்களை அள்ளியிறைக்கின்றனர்.

விமானப்படை அதிகாரியாகத் திரையில் கியாரா அத்வானி அறிமுகமாகும்போது, நம்மையும் அறியாமல் சிரிப்பு வருகிறது. குறை அவரிடமா, நம்மிடமா எனத் தெரியவில்லை. ரசிகர்கள் குதூகலிக்கும் நோக்கில், ஒரு பாடல் காட்சியில் அவர் பிகினியில் தோன்றுகிற ஷாட்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன.

அவரது இருப்பு குறித்துச் சொல்ல, இப்படத்தில் அது போன்ற இடங்களே உள்ளன.

இது போக அனில் கபூர், ரேஷ்மா பாம்பேவாலா, அசுதோஷ் ராணா, வருண் படோலா, விஜய் விக்ரம் சிங், கே.சி.சங்கர், அரிஷ்டா மேத்தா உட்படச் சுமார் இரண்டு டஜன் பேராவது தலைகாட்டியிருப்பார்கள். அவர்களில் ஒரு சிலரே நம் மனதில் பதிகின்றனர்.

படத்தைத் தயாரித்த யஷ்ராஜ் பிலிம்ஸ் அடுத்ததாக ‘ஆல்ஃபா’ எனும் ‘ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர்’ரை அடுத்த ஆண்டு வெளியிட இருக்கிறது. அதற்கான முன்னோட்டமாக, ஒரு ஷாட்டில் பாபி தியோலும் காட்டப்பட்டிருக்கிறார்.

இது போன்ற விஷயங்கள் ஒரு ‘கமர்ஷியல் படத்திற்கு ப்ளஸ்’ எனில், அது போன்ற சிறப்பம்சங்கள் ‘வார் 2’வில் ஓரளவுக்கு இருக்கின்றன.

இந்தப் படத்தில் ‘புதிது’ என்று சொல்லும்படியாக ஒரு காட்சி கூட இல்லை; கதாபாத்திரச் சித்தரிப்பு கூட ‘ஜேம்ஸ்பாண்ட்’ வகையறா படங்களில் இருந்து இரவல் பெற்றது தான்.

கதையிலாவது திருப்பங்களை புகுத்தி அசத்தியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

அப்படியென்றால் ‘வார் 2’வில் என்ன இருக்கிறது? இதுபோன்ற பிரமாண்டமான தயாரிப்புகளில் காதைக் கிழிக்கும் சத்தத்துடன் சண்டைக்காட்சிகளும் அதற்கு முன்பாக கட்டுமஸ்தான உடலழகைக் காட்டியவாறு ஹீரோ ‘ஸ்லோமோஷன்’னில் வருகிற ஷாட்களும் நிச்சயம் இருக்கும். அது இப்படத்திலும் உண்டு.

‘அதைப் பார்த்து விசிலடிக்கத்தானே ஓடிப்பிடிச்சு ரிசர்வ் பண்றோம்’ என்று சொல்லும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் ‘வார் 2’. போலவே, ‘இது போன்ற விஷயங்கள்தானே இன்னிக்கு தேதிக்கு எண்டர்டெய்ன்மெண்ட்’ என்பவர்களும் கூட இப்படத்தைக் கண்டு குதூகலிக்கலாம்.

மற்றபடி, கர்ஸரை அழுத்தி காட்சிகளைத் தாவித் தாவி பார்க்க நினைப்பவர்கள் ஓடிடியில் வெளியாகும் வரை ‘பொறுமை’ காக்கலாம்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்