Take a fresh look at your lifestyle.

என்னுடைய தீராக் காதல் என் ரசிகர்கள் தான்!

‘வீர தீர சூரன் - 2' பட விழாவில் நெகிழ்ந்த விக்ரம்

விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், ‘வீர தீர சூரன்: பார்ட் 2′. அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

வரும் 27-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், “நான் படத்தைப் பற்றிப் பேசுவதை விட படம் உங்களிடம் நிறைய பேசும். நாங்கள் சொல்ல வேண்டிய விசயங்கள் அனைத்தும் படத்தில் இருக்கிறது.

‘சித்தா’ என்றொரு படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, இயக்குநர் அருண் குமாரை அவரது பெயரைக் கூறி அழைத்ததை விட ‘சித்தா’ என்றுதான் அழைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு அந்தப் படம் என்னை பாதித்தது.

‘சித்தா’ சிறந்த படம். அவர் எந்தப் படத்தை இயக்கினாலும் அதை வித்தியாசமாக இயக்குகிறார். ‘சித்தா’ படத்தைப் பார்த்த பிறகு இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

அது தான் ‘வீர தீர சூரன்’. என்னுடைய ரசிகர்கள் நீண்ட நாட்களாக சீயான் விக்ரம் வேற மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

அது போன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று நானும் காத்திருந்தேன். அப்போது தான் இயக்குநர் சொன்ன கரு எனக்குப் பிடித்திருந்தது.

அவருடைய ஸ்டைலும் எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம்.

ரசிகர்களுக்காக ரகளையான ஒரு படம். ஆனால் ஒரு எமோஷனலான படம். ‘சேதுபதி’ மாதிரி ரகளையான ஒரு படத்தில் சித்தா மாதிரியான உணர்வுப்பூர்வமான விசயம் சேர்ந்தால் அந்த மாதிரி படம்தான் ’வீர தீர சூரன்’.

இந்தப் படத்திற்கான பயணத்தின் போது என்னுடன் அருண் இருந்தார் என்பது மிகப்பெரிய பலமாக இருந்தது. அருண் குமார் என்னுடைய வாழ்க்கையில் ஒரு நண்பராகிவிட்டார். எஸ்.ஜே. சூர்யா ஒரு ராக் ஸ்டார். ஓய்வே இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது கூட எங்கள் படத்தின் தெலுங்குப் பதிப்பிற்காக டப்பிங் பேச உள்ளார்.‌

இந்தப் படத்தை நாங்கள் எந்த அளவிற்கு நேசித்து உருவாக்கினோமோ அதே அளவிற்கு தயாரிப்பாளர் ரியா ஷிபுவும் நேசத்துடன் ஆதரவளித்தார். அற்புதமான தயாரிப்பாளர்.

ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பணியாற்றிய படங்களில் எல்லாம் அனைத்து பாடல்களும் ஹிட்.

எல்லா இன்டர்வியூவிலும் அவருடைய இசை இன்னொரு கதாநாயகன் என்று சொல்லி இருக்கிறேன். 

நான் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு மிகப்பெரிய ரசிகன். அவர் படங்களில் நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவருடன் இணைந்து பணியாற்றும்போது தான் அவருடைய நடிப்பை ரசித்தேன். அவர் இந்தப் படத்தில் அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். 

சுராஜ் படத்தில் மட்டுமல்ல இன்டர்வியூலும் கலக்குகிறார். அது ஒரு மீம் கன்டென்ட்டாக மாறிவிட்டது. அவரும் ஒரு சிறந்த நடிகர். படத்தில் இடம்பெறும் 15 நிமிட நீளமான காட்சி ஒன்றில் அவர் வசனம் பேசிக்கொண்டே அற்புதமாக நடித்திருக்கிறார். 

துஷாரா விஜயன், கலைவாணி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒரு சண்டைப் பயிற்சி கலைஞர் கூட நடிக்க தயங்கும் காட்சியில் இவர் துணிச்சலாகவும், அற்புதமாகவும் நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு அவர் நடிப்பு பேசப்படும். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. 

இந்தப் படம் என் அன்பான ரசிகர்களுக்கானது. நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை. இது உண்மை நான். ஒவ்வொரு விசயத்தை செய்யும் போது உங்களை நினைத்துதான் செய்கிறேன். என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான்” என்றார்.