‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படங்கள் குறித்த செய்திகள் எப்போதும், சுவாரஸ்யமானவை. அவரது நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘அண்ணாமலை’ பற்றி வெளி உலகுக்கு தெரிந்த தகவல்களை விட தெரியாத தகவல்களே அதிகம்
முதலில், ஊருக்குத் தெரிந்த செய்திகள்.
கே.பாலசந்தர் தயாரித்த இந்தப் படத்தை அவரது உதவியாளர் வசந்த் தான் முதலில் இயக்குவதாக இருந்தது. சில பல காரணங்களால் அவர் விலகிக் கொண்டார்.
இதனால் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு சுரேஷ் கிருஷ்ணாவைத் தேடி வந்தது. இவரும் கே.பி.யின் சீடர்தான்.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்க வேண்டும் என ரஜினியும், சுரேஷ் கிருஷ்ணாவும் விரும்பினர்.
ஆனால், அப்போது பாலசந்தருக்கும், ராஜாவுக்கும் சின்ன மனஸ்தாபம் இருந்தது. இதனால் அண்ணாமலைக்கு இசை அமைக்க அவர் மறுத்து விட்டார். அதன் பிறகே தேவா, இந்தப் படத்துக்குள் நுழைந்தார்.
டைட்டிலில் ரஜினி பெயர் இடம் பெறும்போது, ‘ஹே.. ஹே’ என்ற பின்னணி இசையுடன் இன்றைக்கும் வரும் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி’ எனும் டைட்டில் இசை, அண்ணாமலை படத்தில் தான், தேவாவால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.
படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டபோது, ரஜினியைப் பிடிக்காத சில செய்தியாளர்கள், ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என தங்கள் இதழ்களில் பதிவு செய்தது, சோழா ஓட்டலில் நடந்த அண்ணாமலை வெற்றி விழாவில் இதனை பாலசந்தர் குத்திக்காட்டியது, இதனால் கோபம் கொண்ட சில பத்திரிகையாளர்கள் ‘வாக்-அவுட்’ செய்தது போன்ற பழங்கதைகளும் அண்ணாமலைக்கு உண்டு.
புதிய கதைக்கு வரலாம்.
அண்ணாமலை படத்தில் இடம்பெறும் டூயட் பாடல் கொண்டையில் “தாழம் பூ”. இந்தப் பாடலில் ரஜினி, குஷ்பூ பெயர் இடம் பெற்று இருக்கும். ஆனால், பாடல் எழுதும்போது முதலில் ‘குஷ்பூ’ பெயர் மட்டுமே வரும்படி வைரமுத்து எழுதி இருந்தார்.
தனது பெயரையும் அந்தப் பாடலில் சேர்க்குமாறு ரஜினி சொன்னதால், பாடலைத் திருத்தி எழுதினார் கவிப்பேரரசு.
இது தொடர்பாக வைரமுத்து அளித்த நேர்காணலில் கூறியதாவது :
“இந்தப் பாடலை நான் எழுதி முடித்துவிட்டேன். பல்லவியில் ‘கொண்டையில் தாழம் பூ நெஞ்சிலே வாழைப் பூ, கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ’ என்று எழுதி இருந்தேன். எல்லோரும் குஷ்பூ பெயர் வருதே.. நல்லா இருக்குமா? எனக் கேள்வி எழுப்பினர்.
அந்த நேரத்தில் அங்கு ரஜினிகாந்த் வந்துவிட்டார். அப்போது தேவா சார் ரஜினிக்கு பாடலை பாடிக் காட்டினார். ரஜினி எங்களிடம் ‘பாடலில் குஷ்பூ பெயர் வருகிறது. என் பெயர் இல்லையே? என விளையாட்டாகக் கேட்டார்.
அதன் பின்னரே, ‘வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி’ என்று எழுதினேன்” என்று வைரமுத்து அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி.