Take a fresh look at your lifestyle.

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்!

திரைத் தெறிப்பு – 33 :

*
தமிழ்த் திரை இசையில் மிகவும் தனித்துவமானது கணீரென்று ஒலிக்கும் இந்தக் கொடுமுடிக் குரல். அதிகபட்சமான உச்சத்தில் பாடுகிற இயல்பைப் பெற்ற கே.பி. சுந்தராம்பாளின் அதிர்வூட்டும் குரல் முதலில் நாடகத்தில் ஒலித்து, பிற்காலத்தில் திரை இசைக்கு வந்திருக்கிறது.

ஜெமினி-யின் ‘ஔவையார்’ துவங்கி, அந்தக் காலத்தில் அவர் பாடிய பல பாடல்கள் மிகவும் பிரபலம்.

அந்த வரிசையில் தான் 1964-ம் ஆண்டு வெளிவந்த ‘பூம்புகார்’ திரைப்படத்தில் கவுந்தியடிகளாகத் தோன்றி இந்தத் தத்துவார்த்தமான பாடலைப் பாடியிருப்பார் கே.பி.எஸ்.

பாடல் துவங்குவதற்கு முன்பே திரைப்படத்தின் சாரத்தைப் போல இந்த வரிகள், மணியோசையைப் போல ஒலிக்கும்.

“ஒருவனுக்கு ஒருத்தியென்ற
உயிர்மூச்சை உள்ளடக்கி..
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை – அதுவும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்
திருக்குறளை மறவாதே..
திசை தவறிப் போகாதே…”

என்று வாழும் நெறியைச் சொல்லியபடியே துவங்கும் பாடல், அடுத்து மிக எளிமையானபடி வாழ்வின் இயல்பான நதி ஓட்டத்தை இப்படிச் சொல்கிறது.

“வாழ்க்கை எனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்.
மானிடரின் மனதினிலே
மறக்க வொண்ணா வேதம்…”

என்று தத்துவ விசாரத்திற்கு இட்டுச்செல்லும் இந்தப் பாடலை எழுதியவர், இப்படத்தின் வசன கர்த்தாவான கலைஞர் கருணாநிதி.

இப்படத்தின் துவக்கத்தில் அவரே திரையில் தோன்றி, சுருக்கமாக கரகரத்த குரலில் முன்னுரைத்திருப்பார்.

“வாலிபம் என்பது கலைகின்ற வேடம்.
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்.
வரும் முன் காப்பவன் தான் அறிவாளி.

புயல் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி
அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி

துடுப்புகள் இல்லாப் படகு
அலைகள் அழைக்கின்ற திசை எல்லாம் போகும்.

தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்தப் படகின் நிலை போலே ஆகும்.”

என்று கே.பி. சுந்தராம்பாள் தன்னுடைய மிகவும் வளமான குரலில், திரைப்படத்தில், படகில் அவருக்கு முன்னே கோவலன் கதாபாத்திரமாக அமர்ந்திருக்கும் எஸ்.எஸ்.ஆருக்காகப் பாடுவதாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அந்தக் கனிவான பாடலும், அதன் செழுமையான வரிகளும் பாடலைக் கேட்க அல்லது பார்க்க நேரும் அனைவருக்குமே பொருந்தும்.

– மணா