தமிழ்த் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு.
அந்த வகையில் அறிமுக நடிகர் சுந்தர் மகாஸ்ரீ நாயகனாக நடித்திருக்கும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ (Vaanganna Vanakkanganna) எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.திருநாவுக்கரசர் வெளியிட, அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எம்.கே. மோகன் பெற்றுக்கொண்டார்.
அப்போது திரைப்பட தயாரிப்பாளரும், விமர்சகரும், திரைப்படத்துறை ஆய்வாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன், ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு, ‘லொள்ளு சபா’ ஜீவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அறிமுக இயக்குநர் ராஜ் கண்ணாயிரம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் செந்தில் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.
இதில், அபிநயாஸ்ரீ, சந்தியா பாலசுப்பிரமணியன், பாலா, நதியா வெங்கட், பிரபு, சன்னி பாபு, மின்னல் ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வெங்கட் முனிரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜோசப் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ராக் அண்ட் ரோல் புரொடக்ஷன் (Rock & Role Production) மற்றும் ஏ.பி புரொடக்ஷன் (AP Production) ஆகிய படத் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் யாஸ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை அபிநயாஸ்ரீ, “ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி… உங்களுடைய கவனம் + விருப்பம் எதில் இருக்கிறதோ.. அதற்கு மட்டுமே முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுங்கள். உங்களைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வரும். அதனைப் புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து முன்னேறுங்கள்.” என்றார்.