Take a fresh look at your lifestyle.

ஆயிரம்தான் வாழ்வில் வரும்; நிம்மதி வருவதில்லை!

திரைத் தெறிப்புகள்-35:

*
எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும்,

1966-ம் ஆண்டு ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘அன்பே வா’ படத்தில்  டி.எம்.எஸ். பாடியிருக்கும் இந்தப் பாடல் மனதைத் தொடும் வரிகளும், இசையும் கலந்த ஒன்றாக அமைந்திருக்கும்.

“உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும். அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும். அன்பே வா…”

என்று, விரிந்த மணல் பரப்பிற்கு இடையே கதாநாயகியான சரோஜாதேவி முன்னால் ஓட, பின்னால் பாடிய படி எம்.ஜி.ஆர் வரும் காட்சி, அப்போதைய திரை ரசிகர்களுக்குப் புதிய அனுபவம்.

இந்தப் பாடலில் காதல் உணர்வு வெளிப்பட்டிருக்கும் விதமும் மிகவும் மென்மையான இறகைத் தொடுவதைப் போல் இருக்கும்.

“நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்,
நிழல் கொடுத்தால்
என் நினைவுகள் விழித்துக் கொள்ளும்.

பாதையிலே வெளிச்சமில்லை.
பகல் இரவு புரியவில்லை.

பார்வையும் தெரியவில்லை.
ஆயிரம்தான் வாழ்வில் வரும்; நிம்மதி வருவதில்லை…”

என்று நீளும் பாடலின் பின்வரும் வரிகளுக்கு பின்னணியாக வரும் இசை மிதமாக வருடுவதைப் போன்றதொரு உணர்வைத் தரும்.

“வான்பறவை தன் சிறகினை எனக்குத் தந்தால்,
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்,

வானத்திலே பறந்து சென்றே
போனவளை அழைத்துவந்தே

காதலை வாழவைப்பேன்.
அழுத முகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்”.

என்று முடிவடையும் இந்தப் பாடலில் டி.எம். சொந்தரராஜன் பாடியிருக்கும் விதமும், கவிஞர் வாலியின் மிருதுவான வரிகளும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்  திரையில் தோன்றும் எம்.ஜி.ஆர். – சரோஜா தேவியின் நடிப்பும், மூத்த இயக்குநரான ஏ.சி. திருலோகசந்தர் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், இப்போது நினைத்தாலும் அழகான ‘ப்ளாஷ் பேக்’கைப் போல மனதில் நிற்கிறது.
*
– மணா