அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’.
இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன், பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.
ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே, படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன.
படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பினைத் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வெற்றி மகிழ்ச்சியை முன்னிட்டு படக்குழுவினர் ஊடகங்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ‘எங்களின் இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்’ என்ற பதாகையுடன் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டார்கள்.
சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை தர்ஷிகா : “வேர்ட் ஆப் மௌத் என்பதை நான் நம்புகிறேன். சொல் என்பது மிக முக்கியமானது. அதற்கு நிறைய சக்தி இருக்கிறது. நேர்நிலையாக ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அது நாலைந்து பேருக்கு நேர்நிலையாகச் செல்லும்.
எதிர்மறையாக ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அது பத்துப் பதினைந்து பேருக்கு எதிர்மறையாகச் செல்லும். அதற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
பொதுவாக முதல்படம் செய்யும்போது எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கேட்டாலும் அது எனது முதல் படம் என்று பெருமையாகச் சொல்ல வேண்டும்.
அப்படி சொல்லும்படியாக இந்த ‘தி டார்க் ஹெவன்’ படம் அமைந்திருக்கிறது” என்றார்.
படத்தின் நாயகன் சித்து :

“இந்தத் தருணத்திற்காக பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தேன். சாலிகிராமத்தில் ஒரு சிறிய அறையில் இருந்து கொண்டு தான் சினிமா வாய்ப்பு தேடினேன்.
எல்லா கம்பெனிகளுக்கும் நிறைய போட்டோ எடுத்துக் கொண்டு சென்று அலைந்திருக்கிறேன். அது ஒரு பெரிய தேடல். இதில் நிறைய பசி, அவமானம் போன்றவற்றைச் சந்தித்து இருக்கிறேன்.
நிறைய இடத்தில் போட்டோக்களைக் கொடுத்துவிட்டு உதவி இயக்குநரிடம் இருந்து நாளைக்கு ஓர் அழைப்பு வராதா என்று ஏக்கத்துடன் காத்திருந்த நாட்கள் உண்டு.
நம்முடன் வாய்ப்பு கேட்டவர்கள் எல்லாம் நடித்துப் பெரிய ஆளாகி ஹவுஸ் ஃபுல்லாக படங்கள் ஓடியதையும் பார்த்திருக்கிறேன். அப்போது மகிழ்ச்சியாக இருக்கும். பொறாமை இருக்காது.

ஆனால், மனதில் ஒரு பக்கம் சிறு வருத்தமும் ஏக்கமும் இருக்கும். நமக்கான நாள் என்று வரும்? நமக்கான வாய்ப்பு என்று வரும்? என்று ஒரு ஏக்கம் இருக்கும் .அப்படித் தூக்கமில்லாத நாட்கள் எல்லாம் இருந்திருக்கின்றன.
’ஜிகர்தண்டா’ படத்தில் ஒரு வசனம் வரும், சினிமா ஒரு தேவதை மாதிரி, அதை மதித்தால் அது திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டு வரும் என்று.
சினிமாவை எந்த அளவுக்கு நாம் விரும்புகிறோமோ அது நம்மைக் கைவிடாது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
இது எனக்கு ஒரு ஆரம்பம் தான். ஒரு நல்லதொரு அறிமுகமாக இருந்திருக்கிறது” என்றார்.
இந்தச் சந்திப்பில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, நடிப்புக் கலைஞர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார், ஆர்த்தி, சுமித்ரா, பிரதீப், விவேக், செல்வா, மனோஜ், அலெக்ஸ், டேனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.