Take a fresh look at your lifestyle.

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்…!

திரைத் தெறிப்புகள்-30:
*
கடலோரம் குடியிருந்து, கடலுக்குள் வலை விரித்து, மீன்களை கரைக்கு கொண்டு வருவதற்குள் மீனவர்கள் எவ்வளவு சிரமங்களைச்  சந்திக்க வேண்டியிருக்கிறது.

ஒருபுறம் புயல் பயமுறுத்துகிறது. இன்னொரு புறம் அயல் நாட்டு ரோந்துப் படை சுடுகிறது, அல்லது சிறைப்பிடித்துச் செல்கிறது. மீனவர்களுடைய குடும்பமோ, கரையொரம் கதறி, அரசிடம் மன்றாட வேண்டியிருக்கிறது.

மீனவர்களின் இந்த நிலையற்ற வாழ்வின் தத்தளிப்பை மிக எளிய வரிகளில் எழுதியிருப்பார் கவிஞர் வாலி.

-1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘படகோட்டி’ திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி இசையமைப்பில் உணர்வுபூர்வமாக உருக்கத்துடன் இந்தப் பாடலைப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.

“தரை மேல் பிறக்க வைத்தான்.
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கரை மேல் இருக்க வைத்தான்.
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்…”

– என்று நகரும் பாடல் மிக எளிமையாகவும், அதே சமயம் வலிமையாகவும் மீனவர்களின்
வாழ்நாள் துயரத்தை வெளிப்படுத்தியிருக்கும்.

“கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே.

அலை கடல் மேலே அலையாய்
அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே.

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்.
கடல் தான் எங்கள் வீடு.

முடிந்தால் முடியும்.
தொடர்ந்தால் தொடரும்.
இது தான் எங்கள் வாழ்க்கை…”

என்று நகரும் இந்தப் பாடலில் “முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை” என்கிற வரிகளை டி.எம்.எஸ். பாடியிருக்கும் விதம் நெஞ்சத்தைத் தொடும் விதத்தில் அமைந்திருக்கும்.

“கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ

தனியா வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ

ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்.

அரை ஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்…”

என்று எம்.ஜி.ஆர். கையில் டேப்பை இசைத்தபடி வாயசைத்து, கூரை வேய்ந்த வீட்டில் அமர்ந்தபடி பாடுவதாக இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடல் காட்சி வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல, தற்போதும் மீனவர்களின் நிகழ்கால துயரங்களுக்கான குரலைப் போலவே ஒலித்துக் கொண்டிருக்கிறது – மீனவர்களின் தத்தளிக்கும் மனதைப் போலவே.

– மணா