Take a fresh look at your lifestyle.

தண்டகாரண்யம் – இதுவரை சொல்லாதது!

54

இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு சொந்தமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கிறது என்றால், அதில் வருகிற கதை அல்லது களம் அல்லது பாத்திரங்கள் வழியே விரிகிற உலகம் புதியதொரு அனுபவத்தைத் தரும் என்ற முடிவுக்கு வரலாம். இதற்கு முன் அவர் தயாரித்தவை அப்படித்தான் இருந்தன.

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ தந்த அதியன் ஆதிரை இரண்டாவதாக இயக்கியுள்ள ‘தண்டகாரண்யம்’ படம் அந்த வரிசையில் சேர்கிறதா?

‘தண்டகாரண்யம்’ கதை!

மலை மற்றும் வனப்பகுதி கொண்ட ஒரு கிராமத்தைச் சார்ந்தவர்கள் சடையன் (தினேஷ்) மற்றும் முருகன் (கலையரசன்). இருவரும் சகோதரர்கள்.

தனது ஊர், மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பதை முதல் பணியாகக் கொண்டவர் சடையன்.

அதனால் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், காவல் துறையினர், இதர அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் உடன் அவருக்குப் பிரச்சனைகள் உருவாகின்றன.

‘தன்னைப் போல் அல்லாமல் நல்லதொரு அரசு வேலையைத் தம்பி பெற்று, அதன் வழியே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் சடையன்.

அதற்கேற்ப, வனத்துறையில் சுமார் 7 ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியில் தொடர்ந்து வருகிறார் முருகன்.

ஆனால், ஒரு வனத்துறை அதிகாரி முருகன் மேல் காட்டும் வன்மம் அதனைத் தலைகீழாக்குகிறது. அவர் சடையனை அழைத்து வர, விஷயம் இன்னும் சிக்கலாகிறது.

காட்டுக்குள் சென்ற முருகன், உள்ளே சிலர் கஞ்சா கடத்துவதை அறிகிறார். அதை வனத்துறை அதிகாரியிடம் சொல்ல, அடுத்த சில நாட்களில் முருகனைச் சிலர் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.

அதனை அறிந்ததும், காட்டுக்குள் நடப்பதைப் பதிவு செய்து செய்திகளாக்குகிறார் சடையன்.

அது சட்டவிரோதமாகக் காட்டுக்குள் சில விஷயங்கள் செய்து வருபவர்களைச் சிறையில் தள்ளுகிறது.

அதன் தொடர்ச்சியாக, முருகனின் பணியும் காலி ஆகிறது.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறும் சடையன், பூர்விக நிலத்தை விற்று முருகனை ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்கிறார் சடையன். வனத்துறை அலுவலகத்தில் அறிமுகமாகிற நபர் ஒருவர், அந்த ஐடியாவைக் கொடுக்கிறார்.

அப்படிக் கிடைத்த சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு தரகரிடம் கொடுத்து, முருகனை ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சிக்கு அனுப்பி வைக்கிறார்.

அங்குள்ள பயிற்சி முகாமில் சேர்க்கப்படுகிறார் முருகன். அவரைப் போலச் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரையும் ‘நக்சல்’களாக இருந்து சரணடைந்தவர்கள் என்று முத்திரை குத்த முயற்சி நடக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, ‘நக்சல் மறுவாழ்வு திட்டத்தின்’ கீழ் அவர்களுக்கு பணி கிடைக்குமென்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முருகன் போன்றே பலரும் உடன்படுகின்றனர்.

ஆனால், அதன்பின் நடப்பதோ வேறாக இருக்கிறது. காவல் துறை ஆவணங்களில் அவர்கள் ‘நக்சல்கள்’ என்று குறிப்பிடப்படுகின்றனர். அதனால், அவர்களது குடும்பத்தினர் காவல்துறை அடக்குமுறைக்கு ஆளாகின்றனர்.

இன்னொரு புறம், அந்த முகாம்களில் ‘அரசு வேலை’ என்ற அந்தஸ்தைப் பெறத் தினமும் அவர்கள் பல அவஸ்தைகளை அனுபவிக்கின்றனர்.

அனைத்தும் நிறைவுற்றபிறகு, தாங்கள் விரும்பியது கிடைக்கும் என்று முருகன் நினைக்கிறார்; அங்கிருக்கும் பலருக்கும் அதுவே எண்ணம்.

ஒருநாள் அது எதுவுமே நிகழாது என்பது அவர்களுக்குத் தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

முன்பாதியில் ஒரு மலைக்கிராமத்தில் நடக்கிற சாதீய அடக்குமுறைகளை எதிர்த்து, சட்ட விரோதச் செயல்களை எதிர்த்து நாயகன் போராடுவது ஒரு கதை.

இரண்டாம் பாதியில் மொழி தெரியாத ஒரு மண்ணில் ‘மனம் திருந்திய நக்சல்கள்’ என்ற போலியான அடையாளத்தைத் தாங்கிக்கொண்டு அவர் உலாவுவது இன்னொரு கதை. அது ராஞ்சியில் நடப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

ராஞ்சியில் உள்ள ஒரு போலி பயிற்சி முகாமைப் பற்றித்தான் முழுமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மொழி ஒரு தடையாக இருக்கும்.

நாயகன் தமிழில் பேசினால், வேறு சில பாத்திரங்கள் இந்தியிலோ அல்லது வேறு வட மொழிகளிலோ பேச வேண்டும். ஆனால், இப்படத்தில் எல்லா பாத்திரங்களும் தமிழில் பேசுகின்றன.

மொழி தொடர்பு விஷயத்தில் பார்வையாளர்கள் சங்கடப் பட வேண்டாம் என்று இயக்குநர் நினைத்திருக்கலாம்.

ஆனால், மொழி ஒரு தடையாக உள்ளது எனத் தமிழில் இருவர் வசனம் பேசிக்கொள்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அந்த இடங்களை வேறு மாதிரியாகக் கையாண்டிருக்கலாம்.

இதே கதையை சடையன் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் தந்து மாற்றியிருக்கலாம். அது, தமிழ்நாட்டு மலைக்கிராமத்தில் இருக்கிற பழங்குடியின மக்களின் அவலங்களைச் சொல்லியிருக்கும்.

இரு வேறு கதைகளையும் ஒரே சரடில் இணைத்தது கூடத் தவறில்லை. ஆனால், இரண்டுக்குமே முக்கியத்துவம் தருவேன் என்கிற இயக்குநரின் முடிவு தான் இப்படத்தை முழுமையற்றதாக மாற்றியிருக்கிறது.

விவாதம் ஏற்படுத்துகிற கதை..!

வேலை தேடும் இளைஞர்களை நக்சல்கள் என்ற பெயரில் சரணடைய வைத்து, அவர்களுக்குப் பயிற்சி தருவதாகச் சொல்லி சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது செய்திகளாக வெளியாகியிருக்கிறது.

அதைக் கொண்டு இப்படத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. அந்த ‘ஐடியா’ நிச்சயம் பல விவாதங்களை ஏற்படுத்தக் கூடியது. இந்தி உட்பட வட இந்திய மொழிப் படங்களில் இதுவரை சொல்லாதது.

ஆனால், அதனைத் திரையில் சொன்ன விதத்தில் ஆங்காங்கே ‘ஹீரோயிசம்’ புகுந்து கொள்வதால் பல பாத்திரங்களின் உணர்வெழுச்சி மழுங்கிப் போகிறது. அதுவே இக்கதையின் பலவீனம்.

இப்படம் இந்தியில் ‘டப்’ செய்யப்படுமா என்ற கேள்வி, இதனைப் பார்த்து முடித்தவுடன் நம் மனதில் எழுகிறது.

காடு, மேடு எனப் பல களங்களில் சுழன்று ஓடியிருக்கிறது பிரதீப் கலைராஜாவின் ஒளிப்பதிவு.

படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே. இயக்குநர் தந்த காட்சிகளைச் சரியாகத் தொகுத்திருக்கிறார். ஆனால், அவற்றை ஒரு கண்ணியில் இணைக்கிறபோது எதனை மேலோங்கி நிற்கச் செய்ய வேண்டும் என்பதில் தடுமாறியிருக்கிறார்.

ராமலிங்கத்தின் கலை வடிவமைப்பு இப்படத்தில் வருகிற பாத்திரங்களின் பின்னணியை, அவை வாழும் இடங்களை நம்பகத்தன்மையுடன் காட்ட உதவியிருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன் தந்த பின்னணி இசை, ஒவ்வொரு காட்சியோடும் பார்வையாளர்கள் ஒன்றுகிற வகையில் உள்ளது. பாடல்கள் கேட்டவுடன் ஈர்க்கிற ரகம்.

இது போகப் பல தொழில்நுட்பங்கள் சிறப்பாகவே இதில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

நாயகனாக வரும் கலையரசன் சிறப்பானதொரு நடிப்பைத் தந்திருக்கிறார். இளைய சகோதரராகப் பிறந்து, நல்லதொரு வேலையில் செட்டிலாக வேண்டுமென்ற உணர்வை படம் முழுக்கப் பிரதிபலித்திருப்பது சிறப்பு.

அவரது ஜோடியாக வின்சு ரேச்சல் சாம் சட்டென்று ஈர்க்கிற வகையில் ஒவ்வொரு காட்சியிலும் தோன்றியிருக்கிறார்.

ஆனால், இருவரும் சம்பந்தப்பட்ட கற்பனைக் காட்சிகள், பாடல்கள் சரிவரத் திரையில் கடத்தப்படவில்லை. அவற்றின் நீளமும் அதற்கொரு காரணம்.

தினேஷ், ரித்விகா ஜோடி மலைவாழ் மக்களாகத் தெரிவதுவே அவர்களது நடிப்பின் சிறப்பு. ஆனால், சில காட்சிகளில் ஒரு ‘ரோபோ’ போல வசனம் பேசியிருப்பதை தினேஷ் தவிர்த்திருக்கலாம்.

முத்துகுமார், அருள்தாஸ் திரையில் வெளிப்படுத்துகிற வில்லத்தனம் ‘சினிமாத்தனம்’ மேலோங்கி நிற்கிறது.

அதேநேரத்தில், ஜார்க்கண்ட் போர்ஷனில் வரும் யுவன் மயில்சாமி மற்றும் அவரது மேலதிகாரிகளாக, அமைச்சராக வரும் அஜித் கோஷி உள்ளிட்டோர் வெளிப்படுத்துகிற வில்லத்தனம் ரசிகர்களை மிரட்டும் வகையில் அமைந்திருக்கின்றன.

பால சரவணன் வரும் இடங்கள் வாய் விட்டுச் சிரிக்க வைக்கின்றன. அதனை அகலப்படுத்தினால் ‘டாணாக்காரன்’ சாயல் வந்துவிடும் என படக்குழு தவிர்த்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படத்தில் சபீர் கல்லாரக்கல் நடிப்பு நம்மை ஈர்க்கும். அந்த காட்சிகள் மிகச்சரியாக வடிவமைக்கப்பட்டு காட்சிகள் ஆயிருக்கின்றன.

இது போக சரண்யா ரவிச்சந்திரன் உட்படச் சில முகங்கள் இக்கதையில் வந்து போகின்றன.

‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தில் வரும் ‘மனிதா மனிதா’ பாடல் இதில் வேறொரு வடிவத்தில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் சூழல் எப்படி மாறினாலும் இளையராஜாவின் பாடல்கள் அதனோடு பொருந்திப் போகும் என்பதற்கான சாட்சி அது.

ஆனால், அந்த காட்சிகளில் யதார்த்தம் இல்லாமல் ‘ஹீரோயிசம்’ மிகுந்திருப்பது திரையோடு ஒட்டுவதைத் தடுத்து நிறுத்துகிறது.

இந்தப் படத்தில் தினேஷின் காட்சிகளை வெகுவாக வெட்டியெறிந்துவிட்டு கலையரசனை மட்டும் காட்டியிருந்தால், நம் மனதுக்கு நெருக்கமானதொரு படைப்பு கிடைத்திருக்கும்.

ஒருவேளை திரைக்கதை ஆக்கும் பணியை வேறு படைப்பாளிகளிடம் இயக்குநர் அதியன் ஆதிரை ஒப்படைத்திருந்தால் அது நிகழ்ந்திருக்குமோ என்னவோ..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்